ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பல்வேறு திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்

Posted On: 13 JUN 2024 3:37PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் செவ்வாய்க்கிழமை தமது துறைக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னர் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்ட மத்திய அமைச்சர், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும்  இலக்கு தமக்கு ஒரு கனவு போன்றது என்று கூறிய அவர், மூன்று ஆண்டு காலக்கெடுவுக்குள் இலக்கை அடைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். லட்சாதிபதி சகோதரி முன்முயற்சிக்கு உத்வேகம் அளிக்க மாநில கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர்களின் கூட்டத்தை விரைவில் நடத்தவிருப்பதாகவும், பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அவற்றுக்குத் தீர்வு காண மாநில முதலமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பாராட்டிய திரு சவுகான், மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான வணிக முத்திரைகளை ஏற்படுத்தி, சந்தைப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒரு காலத்தில் வங்கிச் சேவை கிடைக்காது என்று கருதப்பட்ட இந்தப் பெண்கள், நாளைய லட்சாதிபதிகளாக மாறும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் திரு சவுகான் கூறினார்.

கிராமப்புறக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியான உதாரணம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தான் என்று அவர் தெரிவித்தார்.  2023-24 நிதியாண்டில், 56 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் ரூ.2,06,636 கோடி மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளன. இது ஆண்டுதோறும் கடன் இணைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கையில் 5 மடங்கு அதிகரிப்பாகும். கடந்த பத்து ஆண்டுகளில் வருடாந்தர கடன் வழங்கலில் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தை  ஆய்வு செய்த அமைச்சர், இந்தத் திட்டம் கிராமப்புற இந்தியாவின் முகத்தை மாற்றுவதில் கருவியாக உள்ளது என்றும், வளர்ந்த பாரதம் என்னும் இலக்கை அடைவதற்கு இது முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 100% ஊரகக் குடியிருப்புகளை அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலை வசதியுடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கிராமப்புற சாலைகளின் தரத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், இவை அனைத்து மட்டங்களிலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கிராமப்புறச் சாலை பராமரிப்பை மேம்படுத்த மாநிலங்களுடன் அதிக ஒருங்கிணைப்புத் தேவை என்று திரு சவுகான் கூறினார். இந்தத் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார். மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

*******

(Release ID: 2025020)

AD/PKV/KPG/RR


(Release ID: 2025045) Visitor Counter : 82