பாதுகாப்பு அமைச்சகம்

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் பணியாளர் கல்லூரியில் 80-வது பாடத்திட்டம் தொடங்கியது

Posted On: 03 JUN 2024 3:09PM by PIB Chennai

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் பணியாளர் கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி) 80-வது பாடத்திட்டம் இன்று தொடங்கியது. இந்தப் பாடத்திட்டம், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் வீரர்களை திறமையான அதிகாரிகள் மற்றும் எதிர்கால ராணுவத் தலைவர்களாக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த முப்படைகளின் சூழலில் திறம்பட செயல்படத் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் அதிகாரிகளை தயார்படுத்துகிறது. 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த 38 அதிகாரிகள் உட்பட 480 மாணவர்கள் 45 வாரத்திற்கு, போர்த்திறன், போர் உத்திகள், செயல்பாட்டு அளவில் போர் தத்துவங்கள் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவார்கள்.

டி.எஸ்.எஸ்.சி.யின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வத்ஸ், போரின் மாறும் தன்மை, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள மாணவர் அதிகாரிகளுக்கு டி.எஸ்.எஸ்.சி எவ்வாறு அதிகாரம் அளிக்கிறது என்பதை எடுத்துரைத்தார். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இடையே ஒருங்கிணைப்பின் முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தினார். நவீன போரில் தடையற்ற ஒத்துழைப்பை உறுதி செய்ய ஒவ்வொரு படைப்பிரிவின் தனித்துவமான திறன்களை புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிலப்பரப்பை பாதிக்கும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் குறித்து மாணவர் அதிகாரிகள் வலுவான புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் தளபதி எடுத்துரைத்தார். இந்த விழிப்புணர்வு தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், ராணுவ  உத்திகளுக்கு திறம்பட பங்களிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.

முதன்முறையாக, 80-வது பாடத்திட்டம் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அதிகாரிகளின் குழுவிற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்தப் பாடத்திட்டம் போரில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்புக்கான அணுகுமுறையை வளர்க்கும். அவர்களின் தொழில் வாழ்க்கையின் இந்த ஆரம்ப கட்டத்தில் படைகளுக்கு இடையேயான புரிதல் மற்றும் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும்.

***

PKV/AG/KV

 

­



(Release ID: 2022586) Visitor Counter : 45