பாதுகாப்பு அமைச்சகம்

மத்திய வங்கக் கடலில் உருவாகும் 'ரெமல்' புயலைக் கருத்தில் கொண்டு கடலோரக் காவல் படை ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது - 9 பேரிடர் நிவாரணக் குழுக்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன

Posted On: 24 MAY 2024 8:12PM by PIB Chennai

மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகும் 'ரெமல்' புயல் காரணமாக கடல் பகுதியில் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை குறைக்க இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 25 மே 2024-க்குள் தீவிர புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் மே 26 இரவு அல்லது 27ம் தேதி அதிகாலையில் மேற்கு வங்க மாநில கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க, சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகங்களுடன், கடலோரக் காவல் படை ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹால்டியா மற்றும் பாராதீப்பில் உள்ள கடலோரக் காவல்படையின் தொலைதூர செயல்பாட்டு மையங்கள் மூலம் எச்சரிக்கைத் தகவல்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வணிகக் கப்பல் மாலுமிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஹால்டியா, பாராதீப், கோபால்பூர் மற்றும் பிரேசர்கஞ்ச் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒன்பது பேரிடர் நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசரநிலை ஏற்பட்டால் இந்தக் குழுக்கள் உடனடி உதவிகளை வழங்கத் தயாராக உள்ளன.

சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள போதிலும், தற்போதைய நிலைமை குறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள நாட்டுப் படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மீனவர்கள் மற்றும் வணிக கப்பல்களுக்கு எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புமாறு பங்களாதேஷ் கடலோர காவல்படை அதிகாரிகளையும் இந்தியக் கடலோரக் காவல் படை கேட்டுக் கொண்டுள்ளது. 

*********

ANU/AD/PLM/KV



(Release ID: 2021591) Visitor Counter : 50