தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் நேர சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.9,000 கோடியை எட்டும் நிலையில் உள்ளது - தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை

Posted On: 18 MAY 2024 5:09PM by PIB Chennai

மக்களவைத் தேர்தலில் பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்த உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இதுவரை ரூ. 8889 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செலவின கண்காணிப்பு, அமலாக்க முகமைகளின் தீவிர பங்கேற்பு,  மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு ஆகியவை காரணமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள், மதுபானங்கள், விலை உயர்ந்த நகைகள், இலவச பொருட்கள், ரொக்கம் ஆகியவை வெவ்வேறு அளவுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் மற்றும் மது பானங்களைப் பறிமுதல் செய்ய ஆணையம் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் ஒரு ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றுகையில், "தேர்தல்களில் போதைப்பொருள்களின் பங்கை வேரறுக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், கூட்டு முயற்சிகள் காலத்தின் தேவையாகும்". என்று கூறினார். இந்த தேர்தலின்போது இதுவரை போதைப்பொருள் பறிமுதல் மதிப்பு ரூ. 3958 கோடியாகும். இது மொத்த பறிமுதல் மதிப்பில் 45 சதவீதம் ஆகும்.

தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை இயக்குயருடன்  சந்திப்புகளை நடத்தினர். அதேபோல், வருவாய்ப் புலனாய்வுத் துறை, இந்திய கடலோர காவல்படை, மாநில காவல்துறைகள் மற்றும் பிற முகமைகளின் தீவிர பங்கேற்பின் காரணமாக, இந்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு பறிமுதல் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

முதல்கட்ட தேர்தலின் போது வாக்குப் பதிவு நடைபெற்ற தமிழ்நாட்டில், சோதனை நடவடக்கைகளின்போது மொத்தம் 543.72 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

***

ANU/SRI/PLM/KV

 


(Release ID: 2021035) Visitor Counter : 116