பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி சக்தி மேகாலயாவில் தொடங்கியது

Posted On: 13 MAY 2024 1:48PM by PIB Chennai

இந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் 7-வது பதிப்பு சக்தி மேகாலயாவின் உம்ரோயில் உள்ள முழுமையாக மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீன வெளிநாட்டு பயிற்சி முனையில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024, மே 13 முதல் 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியின் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியரி மாத்தூ மற்றும் 51 துணைப் பகுதியின் பொது அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்னா சுதாகர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். சக்தி பயிற்சி என்பது இந்தியாவிலும் பிரான்சிலும் மாறி மாறி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடைசி பதிப்பு 2021 நவம்பர் மாதம் பிரான்சில் நடத்தப்பட்டது.

90 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் முதன்மையாக ராஜ்புத் ரெஜிமெண்டின் ஒரு பட்டாலியன் மற்றும் பிற ஆயுதப்படை மற்றும் சேவைகளைச் சேர்ந்த வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் பார்வையாளர்களும் இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக இருப்பார்கள். 90 வீரர்களைக் கொண்ட பிரெஞ்சு படைப்பிரிவில் முக்கியமாக 13-வது வெளிநாட்டு லெஜியன் பிரிகேட் வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

பல்வேறு துறைகளில் பல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இரு தரப்பிலும் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவதே சக்தி பயிற்சியின் நோக்கமாகும். இந்தக் கூட்டு பயிற்சி நகர்ப்புறம் சார்ந்த மலைப்பாங்கான நிலப்பரப்பில் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும். 

இந்தப் பயிற்சியின் போது பயிற்சி செய்யப்பட வேண்டிய தந்திரோபாய பயிற்சிகளில் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தைக் கைப்பற்றுதல், ஒரு கூட்டு கட்டளை நிலையத்தை நிறுவுதல், ஒரு புலனாய்வு மற்றும் கண்காணிப்பு மையத்தை நிறுவுதல், ஒரு ஹெலிபேட் / தரையிறங்கும் இடத்தைப் பாதுகாத்தல்,  ட்ரோன்கள் மற்றும் எதிர் ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.

கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தந்திரோபாயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் இரு தரப்பினரும் தங்களது சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள சக்தி பயிற்சி உதவும். இரு நாடுகளின் ஆயுதப்படை வீரர்களுக்கு இடையே பரஸ்பர இயக்கம், நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த இந்த கூட்டுப் பயிற்சி உதவும். இது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்துவதோடு, இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும்.

***

(Release ID: 2020423)

ANU/PKV/KV/KR


(Release ID: 2020436) Visitor Counter : 96