புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டில் மதிப்புமிக்க 46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் 26-வது கூட்டத்தையும் இந்தியா நடத்த உள்ளது

Posted On: 01 MAY 2024 2:58PM by PIB Chennai

இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம், துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மூலம், 46 வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் 26-வது கூட்டமும் 2024 மே 20 முதல் 30 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெறும். அண்டார்டிகாவில் சுற்றுச்சூழல் மேற்பார்வை, அறிவியல் ஒத்துழைப்பு குறித்த ஆக்கபூர்வமான உலகளாவிய உரையாடலை எளிதாக்குவதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.

அண்டார்டிகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடான இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் அண்டார்டிகாவில் அமைதியான செயல்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், 2024-ம் ஆண்டில் இந்தக் கூட்டங்களை இந்தியா நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "அண்டார்டிக் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சியின் பகிரப்பட்ட இலக்குகளை முன்னெடுப்பதற்காக அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் அர்த்தமுள்ள பரிமாற்றங்கள் அதிகரிப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று அவர் கூறினார்.

அண்டார்டிக் சுற்றுச்சூழல் மதிப்பீடு, தாக்க மதிப்பீடு, மேலாண்மை, அறிக்கை அளித்தல் ஆகியவற்றில் 26-வது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் நிகழ்ச்சி நிரல் கவனம் செலுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணுதல், கடல் சார்ந்த பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் திட்டங்கள், அண்டார்டிக் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் போன்றவையும் இதில் அடங்கும்.

46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் 26-வது கூட்டத்தையும் நடத்துவது, எதிர்கால சந்ததியினருக்காக அண்டார்டிகாவைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் பொறுப்பான, உலகளாவிய பங்குதாரராக இந்தியாவின் அதிகரித்து  வரும் பங்களிப்பை பிரதிபலிக்கிறது. திறந்த உரையாடல், ஒத்துழைப்பு, ஒருமித்த கருத்தை உருவாக்குதல் மூலம், அண்டார்டிக் ஒப்பந்தத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும், பூமியின் அழகிய வனப்பகுதிகளில் ஒன்றின் நிலையான நிர்வாகத்திற்கு பங்களிப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.

கொச்சியில் உள்ள லூலூ போல்கட்டி சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 60-க்கும் அதிகமான  நாடுகளைச் சேர்ந்த 350-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் https://www.atcm46india.in/ , https://www.ats.aq/devAS/Meetings/Upcoming/97/  ஆகியவற்றில் கிடைக்கும்.

----

(Release ID: 2019293)

ANU/SMB/KPG/RR


(Release ID: 2019318) Visitor Counter : 121