பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படை பெண் அதிகாரிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் ஐ.என்.எஸ்.வி தாரிணி வெற்றிகரமாக நாடு திரும்பியது
Posted On:
22 APR 2024 4:34PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் பாய்மரக் கப்பல் (ஐ.என்.எஸ்.வி) தாரிணி சுமார் இரண்டு மாத கால வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் 2024 ஏப்ரல் 21 அன்று கோவாவில் உள்ள அதன் தளத் துறைமுகத்திற்கு வெற்றிகரமாக திரும்பியது.
இந்தியக் கடற்படையின் பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் கே தில்னா, லெப்டினன்ட் கமாண்டர் ஏ ரூபா ஆகியோர் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். இவர்களின் விதிவிலக்கான பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில் இந்தியாவிலிருந்து இதுபோன்ற சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியவர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
புகழ்பெற்ற மாலுமி மற்றும் இவர்களின் வழிகாட்டியான கமாண்டர் அபிலாஷ் டோமி (ஓய்வு) இந்தப் பயணத்தை கோவாவிலிருந்து 2024 பிப்ரவரி 28 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியப் பெருங்கடலின் கணிக்க முடியாத நிலைமைகளையும் மீறி, 22 நாட்கள் பயணம் செய்த பின், ஐ.என்.எஸ்.வி தாரிணி 2024 மார்ச் 21 அன்று மொரீஷியஸில் உள்ள போர்ட் லூயிஸை அடைந்தது.
போர்ட் லூயிஸில் பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து, லெப்டினன்ட் கமாண்டர்களான தில்னா, ரூபா ஆகியோர் கோவாவுக்கு திரும்பும் பயணத்தை 2024 மார்ச் 30 அன்று தொடங்கினார்கள். பலத்த காற்று, பாதகமான கடல் நிலைகள், கொந்தளிப்பான கடல் ஆகியவற்றால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை இந்தப் பயணத்தில் இவர்கள் எதிர்கொண்டனர். இவர்களின் வெல்லமுடியாத உத்வேகம் மற்றும் உறுதியான தீர்மானம் இவர்களின் முன்னோக்கி செலுத்தியதுடன், ஐ.என்.எஸ்.வி தாரிணி 2024 ஏப்ரல் 21 அன்று கோவாவுக்கு பாதுகாப்பாக திரும்ப வழிவகுத்தது.
ஐ.என்.எஸ் மண்டோவியின் கமாண்டிங் அதிகாரி மற்றும் வடக்கு கோவா கடற்படை நிலைய கமாண்டர் ஆகியோரால் ஐ.என்.எஸ்.வி தாரிணி ஐ.என்.எஸ் மண்டோவி படகு தளத்தில், கடற்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் வரவேற்கப்பட்டது. இந்தப் பயணம் இந்தியக் கடற்படையின் கூட்டு சாதனை மற்றும் தோழமையின் அடையாளமாக இருந்தது.
ஐ.என்.எஸ்.வி தாரிணி கப்பலில் இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கவுள்ள உலகைச் சுற்றி வரும் பயணத்திற்கு (சாகர் பரிக்கிரமா - 4) இரு பெண் அதிகாரிகளும் இப்போது தயாராகி வருகின்றனர்.
***
SRI/SMB/AG/KPG/DL
(Release ID: 2018507)
Visitor Counter : 85