பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடினமான நிலப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க ஏ.எஃப்.எம்.எஸ் மற்றும் ஐ.ஐ.டி கான்பூர் இணைகின்றன

Posted On: 18 APR 2024 6:36PM by PIB Chennai

ராணுவ மருத்துவ சேவைகள் (ஏ.எஃப்.எம்.எஸ்) அமைப்பு கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்   2024, ஏப்ரல் 18 அன்று கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராணுவ மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், கான்பூர் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் எஸ் கணேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்  ஏ.எஃப்.எம்.எஸ், ஐ.ஐ.டி கான்பூர் ஆகியவை இணைந்து கடினமான நிலப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆராய்ச்சி செய்வதோடு புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்கும்.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே முதன் முறையாக, ராணுவ மருத்துவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள ராணுவக் கணக்கீட்டு மருத்துவ மையத்தில், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கான்பூர் ஐ.ஐ.டி வழங்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், கூட்டுக் கல்வி நடவடிக்கைகள், பயிற்சித் தொகுதிகள் உருவாக்கம் ஆகியவையும் செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ஏ.எஃப்.எம்.எஸ் வீரர்களுக்கு மிக உயர்ந்த மருத்துவ சேவையை வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், ஐ.ஐ.டி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பது இந்த உறுதிப்பாட்டை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும் தெரிவித்தார். பேராசிரியர் எஸ். கணேஷ் சுகாதாரப் பராமரிப்பில் கணக்கீட்டு மருத்துவம், செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

----

SRI/SMB/KPG/DL




(Release ID: 2018205) Visitor Counter : 74