ஆயுஷ்

ஹோமியோபதியில் அறிவியல் ஆராய்ச்சிகளை அதிகரிப்பதுடன், குணமடையும் விகிதத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த மருத்துவமுறை பிரபலமடையவும், மக்கள் அதிக அளவில் ஏற்றுக் கொள்ளவும் வழிவகுக்கும்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

Posted On: 10 APR 2024 3:10PM by PIB Chennai

புதுதில்லி துவாரகாவில் உள்ள யஷோபூமி பாரம்பரிய மையத்தில் இன்று உலக ஹோமியோபதி தினத்தையொட்டி இரண்டு நாள் மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு சிகிச்சை முறைகளில் நம்பிக்கை இழந்த பல நபர்கள் ஹோமியோபதியின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றார். இருப்பினும், விஞ்ஞான ரீதியில் பகுப்பாய்வுகள் மூலம், நிரூபிக்கப்படும்போது மட்டுமே இத்தகைய முறைகளை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளை ஊக்குவிப்பது, மக்களிடையே இந்த சிகிச்சை முறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அறிவியல் ஆய்வுகளே நம்பகத்தன்மையை உருவாக்குகிறது என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த மருத்துவமுறையை மக்கள் அதிகளவில் ஏற்றுக்கொள்ளுதலும் இதன் புகழும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். ஆராய்ச்சியை மேம்படுத்தவும், குணமடையும் விகிதங்களை அதிகரிக்கவும் எடுக்கும் முயற்சிகள் ஹோமியோபதியை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது மருத்துவர்கள், நோயாளிகள், மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட ஹோமியோபதியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஹோமியோபதி கல்வி முறைமையில் தொடர்ச்சியான முன்னேற்றம் இளம் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றும்  குடியரசுத் தலைவர் தெரிவித்தார். ஹோமியோபதி மருத்துவத் துறையின் சிறந்த எதிர்காலத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களின் ஈடுபாடு அவசியம் என அவர் தெரிவித்தார். இந்த மாபெரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காகவும், இதர  மருத்துவ முறைகளுடன் ஹோமியோபதியையும் ஊக்குவிப்பதற்காகவும் ஆயுஷ் அமைச்சகத்தை குடியரசுத் தலைவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்ய ராஜேஷ் கொடேச்சா, ஹோமியோபதியை, மற்ற மருத்துவ முறைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத்துடன் ஒருங்கிணைக்க மகத்தான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தார். பொருத்தமான இடங்களில், இவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பில் ஒரு விரிவான அணுகுமுறையை உருவாக்குவதுடன், நோயாளிகளுக்கு நன்கு பயனளிக்கும் என்று தெரிவித்தார். ஹோமியோபதி மருத்துவத்தில் வலுவான அறிவியல் அடித்தளத்தை நிறுவுவதற்கு ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சோதனைகள் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் ஹோமியோபதி மருத்துவ சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும், தரக் கட்டுப்பாடு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்று திரு வைத்திய ராஜேஷ் கொடேச்சா கூறினார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் சுபாஷ் கௌசிக் தனது வரவேற்புரையில், இன்றைய காலகட்டத்தில் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். கருத்தரங்கில் கலந்து கொண்டு ஹோமியோபதிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய எய்ம்ஸ் மருத்துவமனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், சென்னை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை, போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து புகழ்பெற்ற மருத்துவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அனில் குரானா, ஆயுஷ் அமைச்சகத்தின் விஞ்ஞானிகள் பிரிவுத் தலைவர் டாக்டர் சங்கீதா ஏ. துக்கல், ஆயுஷ் அமைச்சகத்தின் ஹோமியோபதி ஆலோசகர் டாக்டர் சங்கீதா ஏ. துக்கல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நெதர்லாந்து, ஸ்பெயின், கொலம்பியா, கனடா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், ஆராய்ச்சி மற்றும் நடைமுறை அனுபவம், தொற்றுநோய் மற்றும் பொது சுகாதாரம், ஹோமியோபதி மருந்துகளைத் தரப்படுத்தல், ஹோமியோபதி கல்வியில் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

***

AD/PLM/RS/KV



(Release ID: 2017613) Visitor Counter : 45