மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சைபர் மேம்பாட்டு இந்தியா முன்முயற்சியின் கீழ் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் 43-வது தீவிரப் பயிற்சிக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 08 APR 2024 7:08PM by PIB Chennai

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், சைபர் தாக்குதல்களைக் கையாள்வதில் எதிர்காலத்தில் தயாராக இருப்பதற்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சைபர் மேம்பாட்டு இந்தியா முன்முயற்சியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சிக்கு புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மின்-ஆளுமை பிரிவு தனது திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ், 2024 ஏப்ரல் 8 முதல் 12 வரை இந்தப் பயிற்சியை நடத்துகிறது. அசாம், ஜம்மு காஷ்மீர், குஜராத், கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தேசிய தலைநகர் தில்லிப் பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் 43 வது தீவிரப் பயிற்சித் திட்டம் புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் இன்றையத் தொடக்க அமர்வில் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சைபர் பாதுகாப்பு களத்தில் கொள்கைகளை வகுக்கவும், உறுதியான இணைய நெருக்கடி மேலாண்மை திட்டங்களை உருவாக்கவும் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.

***

SM/SMB/RS/DL



(Release ID: 2017470) Visitor Counter : 52