பிரதமர் அலுவலகம்

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் ஆற்றிய பதிலுரையின் தமிழாக்கம்

Posted On: 05 FEB 2024 10:34PM by PIB Chennai

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஆதரித்து நான் இங்கு பேசுகிறேன். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தங்களது எண்ணங்களை தெரிவித்த 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன். அவர்களின் உரையின் ஒவ்வொரு அம்சமும், அவர்கள் நீண்ட காலமாக அங்கேயே (எதிர்க்கட்சி வரிசைகளில்) இருக்க தீர்மானித்துள்ளனர் என்ற எனது மற்றும் தேசத்தின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. நீங்கள் பல ஆண்டுகளாக இங்கே (ஆளும் இருக்கைகளில்) அமர்ந்திருந்தீர்கள். ஆனால் இப்போது இன்னும் பல ஆண்டுகளுக்கு அங்கு (எதிர்க்கட்சி இருக்கைகளில்) உட்கார தீர்மானித்துள்ளீர்கள்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்துவிட்டதை என்னால் காண முடிகிறது. கடந்த முறை பலர் தங்கள் இடங்களை (தேர்தலில் போட்டியிடுவதற்காக) மாற்றிக் கொண்டனர். இந்த முறையும் அவர்கள் தங்கள் இடங்களை மாற்ற ஆர்வமாக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இப்போது பலர் மக்களவைக்கு பதிலாக மாநிலங்களவைக்கு செல்ல விரும்புகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவர் உரை உண்மைகள் மற்றும் யதார்த்தங்களின் அடிப்படையில் அமைந்த ஆவணமாகும். இந்த ஆவணம் முழுவதையும் நீங்கள் பார்த்தால், நாடு எந்த வேகத்தில் முன்னேறி வருகிறது என்பதையும், செயல்பாடுகள் விரிவடைந்துள்ள அளவையும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார். பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தை மனதில் கொண்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் நான்கு வலுவான தூண்களை நமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவரது துல்லியமான மதிப்பீடு என்னவென்றால், நாட்டின் இந்த நான்கு தூண்களும் வலுவாகவும் வளர்ச்சியுடனும் இருந்தால், நமது நாடு மிகவும் வளமாக இருக்கும். அது வேகமாக முன்னேறும். இந்த நான்கு தூண்கள் பற்றிப் பேசிய அவர், நாட்டின் பெண் சக்தி, நாட்டின் இளைஞர் சக்தி, நமது ஏழை சகோதர சகோதரிகள், நாட்டின் விவசாயிகள் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்த நான்கு தூண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குகளை அடைவதற்கான திசையை மாண்புமிகு குடியரசுத் தலைவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

இந்த விவாதத்தில் ஓரளவுக்காவது சாதகமான அம்சங்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில நேர்மறையான ஆலோசனைகள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் எப்போதும் போல, எதிர்க்கட்சியினர் அனைவரும் நாட்டை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளீர்கள்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

 

தலைவர்கள் மாறியிருக்கலாம், ஆனால் டேப் ரிக்கார்டர் இன்னும் அதே ராகத்தை இசைத்துக் கொண்டிருக்கிறது. அதே பழைய சொல்லாட்சியும் அதே பழைய மெட்டும் உங்கள் பக்கத்திலிருந்து தொடர்கின்றன. இது தேர்தல் ஆண்டு. நீங்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்திருக்கலாம். சில புதிய பிரச்சினைகளை முன்வைத்திருக்கலாம். ஆனால் அதிலும் நீங்கள் தோல்வியடைந்தீர்கள்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலைக்கு பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே காரணம். காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்க்கட்சியாக மாற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. 10 ஆண்டுகள் என்பது குறுகிய காலம் அல்ல. ஆனால் அந்த 10 ஆண்டுகளில் அவர்கள் அந்தப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் கட்சியில் உள்ள திறமையானவர்கள் உயர அனுமதிக்கவில்லை. ஏனெனில் அது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒரு வகையில் அவர்கள் தங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும், நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் நாட்டுக்கு ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எதிர்க்கட்சி தேவை என்று நான் எப்போதும் விரும்புகிறேன். வாரிசு அரசியலால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

நாம் பேசும் வாரிசு அரசியல் என்ன? எந்தவொரு குடும்பத்திலும் மக்கள் ஆதரவுடன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அரசியல் களத்தில் முன்னேறினால் அதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை.  ஆனால் கட்சி ஒரு குடும்பத்தால் நடத்தப்படும்போது, கட்சியின் அனைத்து முடிவுகளும் குடும்ப உறுப்பினர்களால் எடுக்கப்படும் போது நாங்கள் அந்த வாரிசு அரசியலை எதிர்க்கிறோம்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸ் ஒரு குடும்பத்திடம் சிக்கிக் கொண்டுள்ளது. கோடிக் கணக்கான குடும்பங்களின் எதிர்ப்பார்ப்புகளை அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர்கள் பார்க்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தைத் தாண்டி பார்க்க தயாராக இல்லை.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு குடியரசுத் தலைவர் வளர்ச்சியடைந்த பாரதம் குறித்து பேசும் போது பொருளாதார அம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினார். பொருளாதாரத்தின் அடிப்படைத் தூண்கள் குறித்து நுணுக்கமாக எடுத்துரைத்தார். பாரதத்தின் வலுவான பொருளாதாரம் இன்று உலகளவில் பாராட்டப்படுகிறது. உலகமே அதைக் கண்டு வியந்துள்ளது. நமது மூன்றாவது பதவிக்காலத்தில் பாரதம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என்று நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். இது மோடியின் உத்தரவாதம்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக நாம் எப்போது உருவெடுப்போம் என்று எதிர்க்கட்சியில் உள்ள நமது சகாக்கள் சிலர் விசித்திரமான வாதத்தை முன்வைக்கின்றனர். அவர்கள், "இதிலென்ன பெரிய விஷயம்? அது தானாகவே நடக்கும். உங்கள் பங்களிப்பு என்ன, மோடியின் பங்களிப்பு என்ன? அது தானாகவே நடக்கும்" என்று கூறுகிறார்கள். நாட்டின் இளைஞர்களுக்கு இதில் அரசின் பங்கு என்ன என்பதை இந்த அவையின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன். விஷயங்கள் எவ்வாறு நிகழ்கின்றன, அரசின் பங்கு என்ன என்பதை நாட்டின் இளைஞர்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 2014 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, யார் ஆட்சியில்  இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டுக்கும் தெரியும். அப்போதைய நிதியமைச்சர் பத்தாண்டுகளுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அப்போது அவர் கூறியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நான் அவரை வார்த்தைக்கு வார்த்தை மேற்கோள் காட்டுகிறேன். பாரதம் தானாகவே மூன்றாவது இடத்தை அடைந்து விடும் என்று கூறுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் என்ன சொன்னார்?  "நான் இப்போது எதிர்காலத்திற்கான ஒரு பார்வையை முன்னோக்கிப் பார்க்க விரும்புகிறேன். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் உலகின் 11-வது பெரியது" என்று அவர் மேலும் கூறினார்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

அடுத்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடத்திற்கு செல்லும் என்று அவர் கூறினார். 2044-ல் பாரதம் 3-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று அவர்கள் 2014-ல் சொன்னார்கள். இது அவர்களின் பார்வை. இது அவர்களின் எல்லை. மன உறுதி என்பது அவர்களுக்கு ஒரு தொலைதூர விஷயமாக இருந்தது.

எனது நாட்டின் இளைஞர்களை முப்பது ஆண்டுகள் காத்திருக்கச் சொன்னார்கள். ஆனால் இன்று, நாங்கள் இந்த மேன்மைமிகு அவையில் நம்பிக்கையுடன் உங்கள் முன் நிற்கிறோம். நாங்கள் 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். எனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும். நீங்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) 11- வது இடத்தில் இருப்பதில் பெருமிதம் கொண்டீர்கள். அதேசமயம், நாட்டின் பொருளாதாரத்தை ஐந்தாவது இடத்திற்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நாடு 11-வது இடத்தை எட்டியது உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது என்றால், நாடு ஐந்தாவது இடத்தை எட்டியது குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸின் மந்தமான வேகத்திற்கு எந்த ஒப்பீடும் இல்லை. இன்று நாட்டில் பணிகள் நடைபெறும் வேகத்தை ஒரு காங்கிரஸ் அரசால் நினைத்து கூட பார்க்க முடியாது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

கிராமப்புற ஏழைகளுக்காக 4 கோடி வீடுகளை கட்டியுள்ளோம். நகர்ப்புற ஏழைகளுக்காக, 80 லட்சம் உறுதியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் காங்கிரஸ் அரசின் வேகத்தில் கட்டப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நான் கணக்கிடுகிறேன். காங்கிரஸ் அரசின் வேகம் இப்படி இருந்திருந்தால் இவ்வளவு பணிகளை செய்து முடிக்க 100 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஐந்து தலைமுறைகள் கடந்திருக்கும்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், 40,000 கிலோமீட்டர் ரயில் பாதைகளுக்கு மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளது. காங்கிரஸ் அரசின் வேகத்தில் நாடு இயங்கிக் கொண்டிருந்தால், இந்தப் பணியை நிறைவேற்ற 80 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஒரு வகையில் நான்கு தலைமுறைகள் கடந்திருக்கும்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

நாங்கள் கூடுதலாக 17 கோடி எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம். இது எனது 10 ஆண்டுகளுக்கான கணக்கு. காங்கிரஸ் வேகத்தை நாங்கள் பின்பற்றியிருந்தால், இந்த இணைப்புகளை வழங்க இன்னும் 60 ஆண்டுகள் ஆகியிருக்கும்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

எங்கள் ஆட்சிக் காலத்தில் தூய்மை வசதி 40 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்தை எட்டியுள்ளது. காங்கிரசின் (அரசு) வேகம் பின்பற்றப்பட்டிருந்தால், இந்தப் பணியை நிறைவேற்ற இன்னும் 60-70 ஆண்டுகள் ஆகியிருக்கும். குறைந்தது மூன்று தலைமுறைகள் கடந்திருக்கும். ஆனால் அது நிறைவேற்றப்பட்டிருக்குமா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸின் மனநிலை நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசத்தின் திறன்கள் மீது காங்கிரஸ் ஒருபோதும் நம்பிக்கை வைத்ததில்லை. அவர்கள் எப்போதும் தங்களை ஆட்சியாளர்களாகக் கருதிக் கொண்டனர். தொடர்ந்து மக்களை குறைத்து மதிப்பிட்டனர். அவர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தனர்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

நமது தேசத்தின் திறனில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மக்களின் சக்தியை நாங்கள் நம்புகிறோம்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

நாட்டு மக்கள் முதன்முதலில் எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தபோது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்காக எங்கள் முதல் பதவிக்காலத்தில் கணிசமான நேரத்தையும் சக்தியையும் செலவிட்டோம். எங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில், ஒரு புதிய பாரதத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்தோம். எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான கட்டமைப்பை துரிதப்படுத்துவோம்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

எங்களது முதல் பதவிக்காலத்தில், தூய்மை இந்தியா, உஜ்வாலா, ஆயுஷ்மான் பாரத், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்- பெண் குழந்தைக்கு கற்பிப்போம், டிஜிட்டல் இந்தியா போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். பல மக்கள் நலத் திட்டங்களை இயக்கங்களாக மாற்றினோம். ஜிஎஸ்டி போன்ற முடிவுகளின் மூலம் வரி முறையை நாங்கள் எளிதாக்கியுள்ளோம். இந்த முயற்சிகளைப் பார்த்த பொதுமக்கள் எங்களுக்கு முழு மனதுடன் ஆதரவு அளித்தனர். அவர்கள் முன்பை விட அதிக ஆதரவை எங்களுக்கு வழங்கினர். பின்னர், எங்கள் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியது. எங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில், நாடு நீண்ட காலமாக காத்திருந்தவை நிறைவேற்றப்பட்டன. 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை நாம் அனைவரும் பார்த்தோம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

விண்வெளி முதல் ஒலிம்பிக் வரை, பெண் சக்தியின் எதிரொலி கேட்கிறது. இன்று, பெண் சக்திக்கு அதிகாரமளிப்பதை நாடு கண்டுள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை, பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை மக்கள் கண்டுள்ளனர்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் தண்டனைக்குரிய பழமையான சட்டங்களிலிருந்து நவீன நீதி முறைக்கு நாம் முன்னேறியுள்ளோம். பொருத்தமற்றதாகிவிட்ட இதுபோன்ற நூற்றுக்கணக்கான சட்டங்களை எங்கள் அரசு ரத்து செய்துள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

நாடு முழுவதும் வளர்ச்சியைடந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமர் தமது வீட்டிற்கு திரும்பியது மட்டுமல்லாமல், ஒரு பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இது பாரதத்தின் சிறந்த கலாச்சார பாரம்பரியத்தை புதிய சக்தியுடன் புதுப்பிக்கும்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

இப்போது, எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தப் பதவிக்காலம் 100-125 நாட்கள் உள்ளனமுழு நாடும், இந்த முறையும் மோடி அரசு என்று கூறுகிறது. தேசத்தின் மனநிலையை என்னால் பார்க்க முடிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களைத் தாண்டுவதை இது உறுதி செய்யும். பாரதிய ஜனதா கட்சிக்கு 370 இடங்கள் நிச்சயம் கிடைக்கும். பிஜேபிக்கு 370 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களையும் கைப்பற்றும்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

எங்கள் மூன்றாவது பதவிக்காலம் மகத்தான முடிவுகளைக் கொண்டதாக இருக்கும். பாரத மக்கள் மீதும், அவர்களின் எதிர்காலம் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நமது 140 கோடி மக்களின் திறன்கள் மீது எனக்கு அளப்பரிய நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளிவந்துள்ளனர்.  இது இந்த திறனை நிரூபிக்கிறது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

வறுமையை ஒழிக்கவும், ஏழைகளை வளமாக்கவும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எங்கள் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெண்களின் தலைமையின் கீழ் சமூகத்திற்கு அதிகாரம் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

இப்போதெல்லாம், நாட்டின் மகள்களுக்கு கதவுகள் மூடப்பட்ட எந்தத் துறையும் பாரதத்தில் இல்லை. இன்று, நமது தேசத்தின் பெண்கள் போர் விமானங்களை இயக்குகிறார்கள். நமது நாட்டின் எல்லைகளை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

நமது கிராமப்புற பொருளாதாரத்தில், நமது 10 கோடி சகோதரிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஊரகப் பொருளாதாரத்திற்கு புதிய பலத்தை அளித்து வருகின்றனர். இந்த முயற்சிகளின் விளைவாக, சுமார் ஒரு கோடி சகோதரிகள் இன்று நாட்டில் லட்சாதிபதி மகளிர் ஆகியிருக்கிறார்கள் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டில் 3 கோடி லட்சாதிபதி மகளிரைக் காண்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

சமுதாயத்திலும், மனங்களிலும் ஆழமாக வேரூன்றி இருந்த நமது தேசத்தில் பெண் குழந்தைகள் பற்றிய கண்ணோட்டம் இன்று மிக வேகமாக மாறி வருகிறது. நாம் கூர்ந்து கவனித்தால், இந்த மாற்றம் எவ்வளவு முக்கியமானது மற்றும் நேர்மறையானது என்பதை நாம் உணர முடியும். கடந்த காலத்தில், ஒரு மகள் பிறந்தபோது, செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது, அவளுக்கு எவ்வாறு கல்வி அளிப்பது, அவளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி விவாதங்கள் சுழன்றன. இது ஒரு சுமையாகப் பார்க்கப்பட்டது, இன்று, ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அவளுக்காக செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதா இல்லையா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

முன்னொரு காலத்தில், குடும்பத் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று வீட்டில் கேட்கப்பட்டது. "குடும்பத் தலைவரை அழையுங்கள்" என்று கூறப்பட்டது. இன்று, நீங்கள் ஒருவரின் வீட்டிற்குச் செல்லும்போது, மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான இணைப்புகள் வீட்டின் பெண்ணின் பெயரில் உள்ளன.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

இன்று நாட்டில் முன்னெப்போதையும் விட இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பல துறைகளில் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. 2014-க்கு முன்பு, டிஜிட்டல் பொருளாதாரத்தின் அளவு மிகக் குறைவாக இருந்தது, அது அரிதாகவே விவாதிக்கப்பட்டது. இன்று, உலகின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

இன்று, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகள் உலகம் முழுவதும் செல்கின்றன. மறுபுறம், மலிவான டேட்டா உள்ளது. இந்த இரண்டு காரணிகளால், நாட்டிலும் உலகிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில், சுற்றுலா என்பது குறைந்த முதலீட்டில் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகும். ஒரு சாதாரண நபருக்கு கூட இந்தத் துறையில் வேலை தேடுவதற்கான வாய்ப்பு உள்ளது. சுற்றுலாத் துறை சுயவேலைவாய்ப்புக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. பாரதம் விமான நிலையங்களை மட்டும் கட்டவில்லை. உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையாகவும், உலகின் மூன்றாவது பெரிய விமானப் போக்குவரத்துத் துறையாகவும் இந்திய விமானப்போக்குவரத்துத் துறை மாறியுள்ளது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

எரிசக்தித் துறையில், குறிப்பாக பசுமை எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில் நாடு தற்சார்பை நோக்கி முன்னேறுகிறது. இதில் முன்னெப்போதும் இல்லாத முதலீட்டுடன் குறிப்பிடத்தக்க வழியில் நாம் முன்னேறி வருகிறோம். செமிகண்டக்டர் துறையில் முன்னெப்போதும் இல்லாத முதலீட்டை நாம் காண்கிறோம்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

எங்கள் அரசு தொடர்ந்து பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளது. இரண்டு போர்கள் மற்றும் 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நெருக்கடி (கொவிட் வடிவில்) இருந்தபோதிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

10 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாடாளுமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது? சபையில் முழு நேரமும் ஊழல்கள் குறித்த விவாதங்கள் நடந்தன. இன்று, ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் போது, அவர்களுக்கு ஆதரவாக மக்கள் ஒரு அமளியை உருவாக்குகிறார்கள்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அக்கறை கொள்ள வேண்டும். ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, சில காலம் சிறையில் இருந்து, தற்போது பரோலில் வெளியே வந்தவர்கள் இன்று பொது வாழ்வில் போற்றப்படுகிறார்கள். இந்த நாட்டை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்கள்? குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள், தங்கள் தண்டனையை அனுபவித்தவர்கள் அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை, நீங்கள் பெருமைப்படுத்துகிறீர்கள். இது என்ன கலாச்சாரம்? இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

புலனாய்வு என்பது அமைப்புகளின் வேலை. அமைப்புகள் சுயமாக செயல்படுபவை. தீர்ப்பளிக்கும் வேலை நீதிபதிகளின் வேலை, அவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். என் மீது எவ்வளவு அடக்குமுறை சுமத்தப்பட்டாலும், ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

பாதுகாப்பு மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை நாடு உணர்ந்து வருகிறது. நாடு உண்மையிலேயே பாதுகாப்பில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதமும், நக்சலிசமும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

இதே அவையில் காஷ்மீர் குறித்து விவாதங்கள் நடந்துள்ளன. இன்று, ஜம்மு-காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி குறித்து பேசப்படுகிறது. அது பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. அங்கு சுற்றுலா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

இந்த மாமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்க நீங்கள் எனக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள். இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மிக்க நன்றி

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

PKV /PLM/ RS/KV

 



(Release ID: 2016447) Visitor Counter : 34