பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கரில் மதாரி வந்தன் திட்டத்தைக் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
10 MAR 2024 4:16PM by PIB Chennai
வணக்கம்!
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய் அவர்களே, மாநில அரசின் அனைத்து அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, இங்கு கூடியிருக்கும் இதர பிரமுகர்களே!
அன்னை தந்தேஷ்வரி, அன்னை பம்லேஷ்வரி மற்றும் அன்னை மகாமாயா ஆகியோரை நான் மரியாதையுடன் வணங்குகிறேன். சத்தீஸ்கரின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு, சத்தீஸ்கரில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தேன். இன்று, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மதாரி வந்தன் திட்டத்தைத் தொடங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. மதாரி வந்தன் திட்டத்தின் கீழ், சத்தீஸ்கரின் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மாதத்திற்கு ரூ.1,000 வழங்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை பிஜேபி அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று, மதாரி வந்தன் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.655 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தாய்மார்களே, சகோதரிகளே,
தாய்மார்களும், சகோதரிகளும் அதிகாரம் பெறும்போது, ஒட்டுமொத்த குடும்பமும் பலம் பெறுகிறது. எனவே, இரட்டை என்ஜின் அரசின் முன்னுரிமை நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனாகும். இன்று, குடும்பங்கள் உறுதியான வீடுகளைப் பெறுகின்றன - அதுவும் பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன! பெண்களின் பெயர்களில் மலிவு விலை உஜ்வாலா கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கின்றன. மக்கள் நிதி கணக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பெயர்களில்! கடந்த பத்தாண்டுகளில், எங்கள் அரசு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அரசின் முன்முயற்சிகள் காரணமாக, நாடு முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான "லட்சாதிபதி சகோதரிகள்" உருவாகியுள்ளனர், அவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடத்தக்க பொருளாதார சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நமோ ட்ரோன் சகோதரி திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்துள்ளது. நாளை, நமோ ட்ரோன் சகோதரி திட்டத்திற்கான ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு நான் ஏற்பாடு செய்துள்ளேன். இந்தத் திட்டத்தின் கீழ், பா.ஜ.க அரசு பெண்களுக்கு ட்ரோன்களை வழங்குவதோடு, அவர்களுக்கு பயிற்சியையும் வழங்கும். இந்த முயற்சி விவசாயத்தை நவீனப்படுத்துவதோடு பெண்களுக்கு கூடுதல் வருமானத்தையும் உருவாக்கும். இந்தத் திட்டத்தை நாளை தில்லியிலிருந்து தொடங்கி வைக்கிறேன்.
சத்தீஸ்கரின் இரட்டை என்ஜின் அரசு தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்யும் மற்றும் அதன் அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். நான் காசியில் இருந்து பேசும்போது, உங்கள் அனைவருக்கும் பாபாவின் ஆசிகளைத் தெரிவிக்கிறேன். மிக்க நன்றி, உங்களுக்கு என் வாழ்த்துகள்.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
PKV/BR/KV
(Release ID: 2013338)
Visitor Counter : 86
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam