பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

கர்கியான் உ.பி.சி.ஐ.டி.ஏ வேளாண் பூங்காவில் பனாஸ் காசி சங்குல் பால் பதப்படுத்தும் பிரிவை தொடங்கி வைத்தார்

இந்துஸ்தான் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, வேளாண் பூங்காவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் பட்டுத் துணி அச்சிடும் பொது வசதி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்

பல்வேறு சாலை திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

வாரணாசியில் பல்வேறு நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

வாரணாசியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய மூப்பியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்

சிக்ரா விளையாட்டு அரங்கம் கட்டம்-1 மற்றும் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தைத் தொடங்கி வைத்தார்

"பத்து ஆண்டுகளில் பனாரஸ் என்னை பனாரசியாக மாற்றி விட்டது"

"விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அரசின் மிகப்பெரிய முன்னுரிமையாளர்கள்"

"பனாஸ் காசி சங்குல் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின்

Posted On: 23 FEB 2024 4:10PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசியில் இன்று ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசி, கார்கியாவ்னில் உள்ள உப்சிடா வேளாண் பூங்காவில் கட்டப்பட்டுள்ள பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் நிறுவனத்தின் பால் பதப்படுத்தும் பிரிவான பனாஸ் காசி சங்குலையும் பார்வையிட்ட பிரதமர், பசு வளர்ப்பு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் மற்றும் புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட பயனர் சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, கல்வி, சுகாதாரம், குடிநீர், நகர்ப்புற மேம்பாடு மற்றும் துப்புரவு போன்ற முக்கியமான துறைகளைப் பூர்த்தி செய்கின்றன.

 

திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், காசிக்கு மீண்டும் ஒருமுறை வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்ததுடன், 10 ஆண்டுகளுக்கு முன்பு நகரின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்த 10 ஆண்டுகளில் வாரணாசி தன்னை வாரணாசிவாசியாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார். காசி மக்களின் ஆதரவு மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டிய திரு மோடி, ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுடன் புதிய காசியை உருவாக்கும் இயக்கம் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

ரயில்வே, சாலை, விமான நிலையம் தொடர்பான திட்டங்கள், கால்நடை பராமரிப்பு, தொழில், விளையாட்டு, திறன் மேம்பாடு, தூய்மை, சுகாதாரம், ஆன்மிகம், சுற்றுலா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டங்கள் காசியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறினார். இது புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். துறவி ரவிதாஸ் தொடர்பான திட்டங்கள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டு,  மக்களை வாழ்த்தினார்.

காசி மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் வழியில் நேற்று இரவு தாம் மேற்கொண்ட சாலைப் பயணத்தை நினைவு கூர்ந்தார். புல்வாரியா மேம்பாலத் திட்டத்தின் பயன்கள் குறித்தும் குறிப்பிட்டார். பி.எல்.டபிள்யூவிலிருந்து விமான நிலையம் வரையிலான பயணத்தில் எளிதான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு தரையிறங்கிய உடனேயே பிரதமர் நேற்று இரவு வளர்ச்சித் திட்டத்தை ஆய்வு செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி உந்துதல் பற்றி பேசிய பிரதமர், சிக்ரா விளையாட்டு அரங்கம் முதல் கட்டம் மற்றும் மாவட்ட துப்பாக்கி சுடும் தளம் ஆகியவை இப்பகுதியில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார்.

முன்னதாக பனாஸ் பால்பண்ணைக்கு சென்றதையும், பல்வேறு கால்நடைகள் வளர்க்கும் பெண்களுடன் கலந்துரையாடியதையும் பிரதமர் குறிப்பிட்டார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வேளாண் பின்னணியைக் கொண்ட பெண்களுக்கு 2-3 ஆண்டுகளுக்கு முன்பு கிர் காய் உள்நாட்டு இனங்களைச் சேர்ந்த பசுக்கள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார். கிர் வகை பசுக்களின் எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட 350-ஐ எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், சாதாரண பசுக்கள் உற்பத்தி செய்யும் 5 லிட்டர் பாலுடன் ஒப்பிடும்போது அவை 15 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்கின்றன என்று தெரிவித்தார். இதுபோன்ற ஒரு கிர் காய் பசு 20 லிட்டர் பால் உற்பத்தி செய்து பெண்களுக்கு கூடுதல் வருமானத்தை உருவாக்கி அவர்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுகிறது என்றும் அவர் கூறினார். நாட்டில் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய 10 கோடி பெண்களுக்கு இது மிகப்பெரிய உத்வேகம் அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பனாஸ் பால் பண்ணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், அன்றைய தினம் அளிக்கப்பட்ட உத்தரவாதம் இன்று மக்கள் முன் உள்ளது என்றார். சரியான முதலீடு மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறந்த உதாரணம் பனாஸ் பால்பண்ணை என்று அவர் கூறினார். வாரணாசி, மிர்சாபூர், காஜிபூர் மற்றும் ரேபரேலி ஆகிய இடங்களில் இருந்து சுமார் 2 லட்சம் லிட்டர் பாலை, பனாஸ் பண்ணை சேகரிக்கிறது. புதிய ஆலை தொடங்கப்படுவதன் மூலம், பல்லியா, சந்தௌலி, பிரயாக்ராஜ் மற்றும் ஜான்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போரும் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், வாரணாசி, ஜான்பூர், சந்தௌலி, காசிப்பூர் மற்றும் அசம்கர் மாவட்டங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிய பால் சந்தைகள் அமைக்கப்படும்.

பனாஸ் காசி சங்குல் திட்டம் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒரு மதிப்பீட்டின்படி, பனாஸ் காசி சங்குல் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வருமானத்திற்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறினார். மோர், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், பன்னீர் மற்றும் பிராந்திய இனிப்புகள் போன்ற பிற பால் பொருட்களையும் இந்த ஆலை தயாரிக்கும் என்று அவர் தெரிவித்தார். வாரணாசியின் இனிப்புகளை இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆலை முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். வேலைவாய்ப்புக்கான வழிமுறையாக பால் போக்குவரத்தை அவர் குறிப்பிட்டார். மேலும் விலங்கு ஊட்டச்சத்து தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்றும் கூறினார்.

பால்வளத் துறையில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், பசு வளர்க்கும் சகோதரிகளின் கணக்குகளுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யும் முறையை உருவாக்குமாறு பால்பண்ணைத் தலைமையை கேட்டுக் கொண்டார். சிறு விவசாயிகளுக்கும், நிலமற்ற தொழிலாளர்களுக்கும் உதவுவதில் கால்நடை பராமரிப்பின் பங்கை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

விவசாயிகளை முன்னேற்றும் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கோபர்தனில் உள்ள வாய்ப்பு குறித்து தெரிவித்த பிரதமர், பால் பண்ணையில் பயோ சி.என்.ஜி மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் ஆலை குறித்தும் பேசினார். கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், கோபர் தன் திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தின் பயன்பாடு  குறித்து பேசினார். நகர்ப்புறக் கழிவுகளை என்டிபிசி கரி ஆலையாக மாற்றியது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், 'குப்பையிலிருந்து தங்கமாக' மாற்றும் காசியின் உணர்வைப் பாராட்டினார்.

விவசாயி, கால்நடை வளர்ப்போர் அரசின் மிகப்பெரிய முன்னுரிமை என்று பிரதமர் கூறினார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கரும்பின் விலை குவிண்டாலுக்கு 340 ரூபாயாக உயர்த்தப்பட்டதையும், தேசிய கால்நடை இயக்கத்தில் திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் தளர்த்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் நிலுவைத் தொகை வழங்கப்படுவது மட்டுமின்றி, பயிர்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

"தற்சார்பு இந்தியா வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக மாறும்" என்று கூறிய பிரதமர், முந்தைய மற்றும் தற்போதைய அரசின் சிந்தனை செயல்முறைக்கு இடையிலான வேறுபாட்டை எடுத்துரைத்தார். நாட்டில் உள்ள சிறிய வாய்ப்புகள் புத்துயிர் பெற்று, சிறு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், கைவினைஞர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவி வழங்கப்படும் போது மட்டுமே தற்சார்பு இந்தியா ஒரு யதார்த்தமாக மாறும் என்று அவர் வலியுறுத்தினார். தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விளம்பரங்களுக்கு செலவிட முடியாத சந்தையில் உள்ள சிறிய நிறுவனங்களுக்கான விளம்பரமே உள்ளூர் குரலுக்கான அழைப்பு என்று பிரதமர் கூறினார். "உள்நாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களை மோடியே விளம்பரப்படுத்துகிறார்", "காதி, பொம்மை உற்பத்தியாளர்கள், மேக் இன் இந்தியா ஆகியவற்றை ஊக்குவிப்பதாக இருந்தாலும், ஒவ்வொரு சிறு விவசாயிகள் மற்றும் தொழில்துறையின் தூதராக மோடி இருக்கிறார்" என்று அவர் கூறினார். காசி விஸ்வநாதர் கோயில் புத்துயிரூட்டப்பட்டதிலிருந்து 12 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள காசியிலேயே இத்தகைய அழைப்பின் தாக்கத்தைக் காண முடிகிறது என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றார். வாரணாசி மற்றும் அயோத்திக்கு இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் வழங்கிய மின்சார கட்டுமரக் கப்பலை அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, வருகை தருபவர்களுக்கு இது ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கும் என்று கூறினார்.

முந்தைய காலங்களில் வாரிசு அரசியல், ஊழல் மற்றும் திருப்திப்படுத்துதல் ஆகியவற்றின் மோசமான விளைவுகள் குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். காசியின் இளைஞர்களை சில தரப்பினர் இழிவுபடுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். இளைஞர்களின் வளர்ச்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் இடையிலான முரண்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இந்த சக்திகளிடையே காசி மற்றும் அயோத்தியின் புதிய வடிவத்தின் மீதான வெறுப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"மோடியின் மூன்றாவது பதவிக்காலம் இந்தியாவின் திறன்களை உலகின் முன்னணியில் கொண்டு வரும், மேலும் இந்தியாவின் பொருளாதார, சமூக, உத்திபூர்வ மற்றும் கலாச்சாரத் துறைகள் புதிய உயரங்களில் இருக்கும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சியை கோடிட்டுக் காட்டிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது என்றார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் இந்தியா, சாலைகள் அகலப்படுத்துதல், நவீன ரயில் நிலையங்கள், வந்தே பாரத், அமிர்த பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்கள் போன்ற வளர்ச்சிப் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் விரைவுபடுத்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார். கிழக்கு இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதத்தின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றுவோம் என்ற மோடியின் உத்தரவாதம் என்று பிரதமர் கூறினார். வாரணாசி முதல் அவுரங்காபாத் வரையிலான ஆறு வழி நெடுஞ்சாலையின் முதல் கட்டத் தொடக்கம் பற்றி பேசிய பிரதமர், அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவடையும் வாரணாசி – ராஞ்சி – கொல்கத்தா விரைவுச் சாலை உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் இடையேயான தூரத்தைக் குறைக்கும் என்றார். எதிர்காலத்தில், வாரணாசியில் இருந்து கொல்கத்தா வரையிலான பயண நேரம் கிட்டத்தட்ட பாதியாகக் குறையும்" என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் காசியின் வளர்ச்சியில் புதிய பரிமாணங்கள் ஏற்படும் என்று பிரதமர் எதிர்பார்ப்பதாக கூறினார். காசி ரோப்வே திட்டம் குறித்தும், விமான நிலையத் திறன் அதிவேகமாக உயர்ந்திருப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் முக்கியமான விளையாட்டு நகரமாக காசி உருவாகும் என்று அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு காசி மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது என்பதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.  அடுத்த 5 ஆண்டுகளில், காசி வேலைவாய்ப்பு மற்றும் திறன்களின் மையமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவன வளாகமும் கட்டி முடிக்கப்படும், இது இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். "கடந்த பத்தாண்டுகளில், சுகாதாரம் மற்றும் கல்விக்கான மையமாக காசிக்கு ஒரு புதிய அடையாளத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். தற்போது இங்கு  புதிய மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட உள்ளது" என்று பிரதமர் கூறியுள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய மூப்படைதல் மையத்துடன், ரூ.35 கோடி மதிப்பிலான பல நோயறிதல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன. மருத்துவமனையில் இருந்து உயிரி அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான வசதியும் உருவாக்கப்பட்டு வருகிறது.

து உரையை நிறைவு செய்த பிரதமர், காசி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் விரைவான வளர்ச்சி தொடர வேண்டும் என்று கூறியதுடன், காசியில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மோடியின் உத்தரவாதத்தின் மீது நாடும், உலகமும் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு உங்கள் அன்பும், பாபாவின் ஆசியும்  தான் காரணம் என்று தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பதக், மத்திய அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே, பனாஸ் பால் பண்ணையின் தலைவர் திரு சங்கர்பாய் சவுத்ரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

வாரணாசியில் சாலைத் தொடர்பை மேலும் மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை எண் 233-ல் கர்க்ரா-பாலம் – வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை எண் 56-ல் சுல்தான்பூர்-வாரணாசி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தொகுப்பு-1; தேசிய நெடுஞ்சாலை 19-ல் வாரணாசி – அவுரங்காபாத் பிரிவின் முதல் கட்டத்தை ஆறு வழிப்பாதையாக மாற்றுதல்; தேசிய நெடுஞ்சாலை 35-ல் தொகுப்பு-1 வாரணாசி-ஹனுமான் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல்; மற்றும் பபத்பூர் அருகே வாரணாசி-ஜான்பூர் ரயில் பிரிவில் ரயில்வே மேம்பாலம், வாரணாசி – ராஞ்சி – கொல்கத்தா விரைவுச் சாலை தொகுப்பு-1 கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்தப் பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், சேவாபுரியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையை பிரதமர் தொடங்கி வைத்தார். உ.பி.சி.ஐ.டி.ஏ வேளாண் பூங்கா கர்கியானில் பனாஸ் காசி சங்குல் பால் பதப்படுத்தும் பிரிவு; உப்சிதா வேளாண் பூங்காவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள், கார்கியான் மற்றும் பட்டுத் துணி அச்சிடுதல் நெசவாளர்களுக்கான பொது வசதி மையம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.

ரமணாவில் என்டிபிசி நிறுவனத்தின் கரி ஆலைக்கு நகர்ப்புற கழிவுகளை மாற்றுவது உட்பட வாரணாசியில் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். சிஸ்-வருணா பகுதியில் நீர் வழங்கல் வலையமைப்பை மேம்படுத்துதல்; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீரகற்று நிலையங்களை இணையதளம் மூலம் கழிவுநீர் கண்காணிப்பு மற்றும் எஸ்சிஏடிஏ தானியங்கி முறையில் கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ளுதல். வாரணாசியை அழகுபடுத்துவதற்கான குளங்களைப் புனரமைத்தல் மற்றும் பூங்காக்களை மறுமேம்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

வாரணாசியில் சுற்றுலா மற்றும் ஆன்மீக சுற்றுலா தொடர்பான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பத்து ஆன்மீக யாத்திரைகளுடன் பஞ்ச்கோஷி பரிக்ரமா மார்க் மற்றும் பவன் பாதையின் ஐந்து நிறுத்தங்களில் பொது வசதிகளை மறுவடிவமைப்பு செய்வது இந்தத் திட்டங்களில் அடங்கும்; வாரணாசி மற்றும் அயோத்திக்கு இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையம் வழங்கிய மின்சார கட்டுமர கப்பல் தொடங்குதல்; ஏழு உடை மாற்றும் அறைகள், மிதக்கும் ஜெட்டிகள் மற்றும் நான்கு சமூக ஜெட்டிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த மின்சார கட்டுமரம் பசுமை எரிசக்தியைப் பயன்படுத்தி கங்கையில் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தும். பல்வேறு நகரங்களில் இந்திய நீர்ப்பாசன ஆணையத்தின் 13 சமுதாய தோணித்துறைகளுக்கும், பல்லியாவில் விரைவான பாண்டூன் திறப்பு அமைப்புக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

வாரணாசியின் புகழ்பெற்ற ஜவுளித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வாரணாசியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தப் புதிய நிறுவனம் ஜவுளித்துறையின் கல்வி மற்றும் பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

வாரணாசியில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வாரணாசியில் புதிய மருத்துவக் கல்லூரிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தேசிய மூப்படைதல் மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். நகரில் விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக, சிக்ரா விளையாட்டு அரங்கம் கட்டம்-1 மற்றும் மாவட்ட துப்பாக்கி சுடும் அரங்கத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

 

***

(Release ID: 2008379)

ANU/PKV/BS/RS/KRS

 



(Release ID: 2008484) Visitor Counter : 86