மத்திய அமைச்சரவை

"பெண்களின் பாதுகாப்பு" குறித்த ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்தும் முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 21 FEB 2024 10:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் 1179.72 கோடி ரூபாய் செலவில் 'பெண்களின் பாதுகாப்பு' என்ற ஒருங்கிணைந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மொத்த திட்ட ஒதுக்கீடான ரூ.1179.72 கோடியில், ரூ.885.49 கோடியை உள்துறை அமைச்சகம் தனது சொந்த நிதியிலிருந்தும், ரூ.294.23 கோடியை நிர்பயா நிதியிலிருந்தும் வழங்கும்.

ஒரு நாட்டில் பெண்களின் பாதுகாப்பு என்பது கடுமையான சட்டங்களின் மூலம் தீவிரமான தடுப்பு  நடவடிக்கைகள்திறமையான நீதி, புகார்களை சரியான நேரத்தில் சரிசெய்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய நிறுவன ஆதரவு கட்டமைப்புகள் போன்ற பல காரணிகளின் விளைவாகும். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விஷயங்களில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை நோக்கிய முயற்சிகளில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு பல திட்டங்களை தொடங்கியுள்ளது. மகளிருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய நேரத்தில் தலையிட்டு புலன் விசாரணை செய்வதை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் நடைமுறைகளை வலுப்படுத்துதல், புலன் விசாரணை மற்றும் இதுபோன்ற விஷயங்களில் குற்றத் தடுப்பு ஆகியவற்றில் உயர் திறனை உறுதி செய்தல் ஆகியவை இந்தத் திட்டங்களின் நோக்கங்களாகும்.

***

ANU/PKV/BR/KV



(Release ID: 2008008) Visitor Counter : 48