சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதுதில்லியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் இல்லங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நடவடிக்கை எடுத்து வருகிறது

Posted On: 16 FEB 2024 10:55AM by PIB Chennai

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதன் உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள அனைத்து மாநில / யூனியன் பிரதேசங்களின் இல்லங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் உணவகங்களில் உணவு கையாளுபவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, சிக்கிம் ஆகிய நான்கு மாநில இல்லங்களில் இதுவரை உணவுக் கட்டுப்பாட்டாளர் பயிற்சி அமர்வுகளை நடத்தியுள்ளார். அந்த இல்லங்களில் உணவு கையாள்வோர் அனைவருக்கும் தேவையான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், வடக்குப் பகுதி அலுவலகங்களில் உள்ள பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையிலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டங்கள் மாநில, யூனியன் பிரதேச இல்லங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் தரமேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளன. வரும் நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மணிப்பூர் இல்லங்களில் பயிற்சி அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து உணவகங்களின் உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.

உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 2023, ஜூன் 7 அன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கூறியபடி, "அடுத்த 3 ஆண்டுகளில் எஃப்எஸ்எஸ்ஏஐ மூலம் 25 லட்சம் உணவு வணிக ஆபரேட்டர்களுக்குப் பயிற்சி" என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுச் சூழலை மேம்படுத்துவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக இருக்கும்.

பின்னணி:

உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்டத்தின் கீழ், உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ள உணவு கையாள்பவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தனிப்பட்ட சுகாதாரம், ஒவ்வாமை மேலாண்மை, உணவு செயல்பாடு மற்றும் கட்டுப்பாடு, ஆவணப்படுத்தல் மற்றும் பதிவுகள், லேபலிங், பயிற்சி முறைகள் மற்றும் உணவுத் துறையில் வளர்ந்து வரும் போக்குகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய மாநில / யூனியன் பிரதேச இல்லங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் உணவகங்களில் பயிற்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உணவுத் துறையில் தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாட்டின் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பங்கேற்பாளர்களுக்கு இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் வழங்கப்படும். 2023-24 நிதியாண்டில், நாடு முழுவதும் மொத்தம் 3,58,224 உணவு கையாள்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில / யூனியன் பிரதேச இல்லங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் உணவகங்களில் இந்தப் பயிற்சியை விரிவுபடுத்துவதற்கான முடிவு பரந்த பார்வையாளர்களை அடையவும், உணவுப் பாதுகாப்பு தரங்களைப் பராமரிக்கத் தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் உணவு விநியோகத் தொடர்பில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் உதவும்.

***

ANU/SMB/BS/RS/KV



(Release ID: 2006523) Visitor Counter : 134