பிரதமர் அலுவலகம்
பிப்ரவரி 16 அன்று பிரதமர் ரேவாரிக்கு பயணம் மேற்கொள்கிறார்
ரூ. 9,750 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
குருகிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
ரேவாரி எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
குருஷேத்ராவில் உள்ள ஜோதிசாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'அனுபவ மையத்தை' பிரதமர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
15 FEB 2024 3:10PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 16, 2024) ஹரியானாவின் ரேவாரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:15 மணியளவில், நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான ரூ. 9750 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
சுமார் ரூ. 5,450 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள குருகிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் 28.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம், மில்லினியம் சிட்டி சென்டரை உத்யோக் விஹார் கட்டம் -5 உடன் இணைக்கும். அத்துடன் சைபர் சிட்டிக்கு அருகிலுள்ள மவுல்சாரி அவென்யூ நிலையத்தை தற்போதுள்ள ரேபிட் மெட்ரோ ரயில் மெட்ரோ கட்டமைப்பில் இணைக்கும். இது துவாரகா அதிவேக நெடுஞ்சாலையிலும் தாக்கத்தைக் கொண்டிருக்கும். மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வெகுஜன அதிவேக நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான முக்கியமான படியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
நாடு முழுவதும் பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஹரியானா மாநிலம் ரேவாரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) அடிக்கல் நாட்டப்படுகிறது. சுமார் ரூ. 1650 கோடி செலவில் கட்டப்படவுள்ள ரேவாரி எய்ம்ஸ் மஜ்ரா முஸ்தில் பால்கி கிராமத்தில் 203 ஏக்கர் நிலத்தில் கட்டப்படவுள்ளது. 720 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வளாகம், 100 இடங்களுடன் மருத்துவக் கல்லூரி, 60 இடங்களுடன் செவிலியர் கல்லூரி, 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகள், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான விடுதி தங்குமிடம், விருந்தினர் இல்லம், கலையரங்கம் உள்ளிட்ட வசதிகளை இது கொண்டிருக்கும். பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா (PMSSY) திட்டத்தின் கீழ் நிறுவப்படும் ரேவாரி எய்ம்ஸ் நவீன வசதிகளை அளிக்கும். ஹரியானா மக்களுக்கு தரமான மற்றும் முழுமையான சுகாதார சேவைகளை இது வழங்கும். இதயவியல், இரைப்பை குடலியல், சிறுநீரகவியல், நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், அறுவை சிகிச்சை புற்றுநோயியல், குடலியல், தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட 18 சிறப்பு பிரிவுகள் மற்றும் 17 அதிநவீன பல்நோக்கு சிறப்பு பிரிவு நோயாளிகள் பராமரிப்பு சேவைகள் போன்றவை இதில் அடங்கும். தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, பதினாறு நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நோய் கண்டறியும் ஆய்வகங்கள், ரத்த வங்கி, மருந்தகம் போன்ற வசதிகளையும் இந்த நிறுவனம் கொண்டிருக்கும். ஹரியானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படுவது, ஹரியானா மக்களுக்கு விரிவான, தரமான மற்றும் முழுமையான சுகாதார சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
குருஷேத்ராவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனுபவ மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த அருங்காட்சியகம் சுமார் 240 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் 17 ஏக்கர் பரப்பளவில் 100,000 சதுர அடி உட்புற இடத்தை உள்ளடக்கியது. இது மகாபாரதத்தின் காவியக் கதையையும், கீதையின் போதனைகளையும் உயிர்ப்புடன் கொண்டு வரும். பார்வையாளர்களின் அனுபவத்தை வளப்படுத்த ஆக்மென்டட் ரியாலிட்டி , முப்பரிமாண லேசர் மற்றும் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தையும் இந்த அருங்காட்சியகம் பயன்படுத்தும். ஜோதசாரம், குருக்ஷேத்ரா என்பது பகவத் கீதையின் நித்திய ஞானத்தை அர்ஜுனனுக்கு வழங்கிய புனித இடமாகும்.
பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய ரயில் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரேவாரி-கதுவாஸ் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல் (27.73 கிலோமீட்டர்), கதுவாஸ்-நர்னால் ரயில் பாதையை இரட்டை ரயில்பாதையாக்குதல் (24.12 கிலோமீட்டர்), பிவானி-தோப் பாலி ரயில் பாதையை இரட்டை ரயில்பாதை (42.30 கிலோமீட்டர்) ஆக்குதல், மன்ஹேரு-பவானி கேரா ரயில் பாதையை (31.50 கிலோ மீட்டர்) இரட்டிப்பாக்குதல் போன்றவை இந்தப் பணிகளில் அடங்கும். இந்த ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது இந்தப் பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை சரியான நேரத்தில் இயக்கவும் உதவும். ரோஹ்தக் – மெஹம் – ஹன்சி ரயில் பாதையை (68 கிலோமீட்டர்) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது ரோஹ்தக் மற்றும் ஹிசார் இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும். ரோஹ்தக்-மெஹம்-ஹன்சி பிரிவில் ரயில் சேவையையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். இது ரோஹ்தக் மற்றும் ஹிசார் பிராந்தியத்தில் ரயில் இணைப்பை மேம்படுத்தி ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும்.
***
(Release ID: 2006249)
ANU/PKV/PLM/AG/KRS
(Release ID: 2006345)
Read this release in:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam