குடியரசுத் தலைவர் செயலகம்

பெனேஷ்வர் கோவிலில் பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்களிடையே குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

Posted On: 14 FEB 2024 6:02PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் பெனேஷ்வர் கோவிலில் இன்று (பிப்ரவரி 14, 2024) ராஜஸ்தானின் பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். ஒவ்வொரு துறையும் தற்சார்புடன் இருந்தால் மட்டுமே இந்தியா தற்சார்புடன் இருக்க முடியும் என்று தெரிவித்தார். சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அனைவரையும் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக அவர் பாராட்டினார். சுய உதவிக் குழுக்கள் பணிச்சூழல் வளத்தை அளிப்பது மட்டுமின்றி, மனித வளம் மற்றும் சமூக வளத்தை உருவாக்குவதில் பாராட்டத்தக்க பணியையும் செய்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பழங்குடியின சமுதாயத்திலிருந்து சமூகத்தின் மற்ற பிரிவினரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பழங்குடியின சமூகங்கள் தற்சார்பு நிர்வாகத்திற்கு நல்ல உதாரணங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இயற்கையோடு இணைந்து எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல், குறைந்தபட்ச வளங்களுடன் வாழ நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும்,  மகளிருக்கு அதிகாரமளித்தல் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற சிந்தனையை நடைமுறைப்படுத்த ஒட்டுமொத்த சமூகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பெண்கள் மத்தியில் கல்வி, திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய அவர், இதனால், பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திலும், உலக முன்னேற்றத்திலும் சம பங்காளிகளாக மாற முடியும் என்று தெரிவித்தார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். அவர்களின் வெற்றியின் வலிமையில்தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.

---

(Release ID: 2006004)

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 2006044) Visitor Counter : 80