குடியரசுத் தலைவர் செயலகம்
தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மடத்திற்குக் குடியரசுத்தலைவர் சென்றிருந்தார்
Posted On:
13 FEB 2024 2:26PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2024, பிப்ரவரி 13) குஜராத்தின் வல்சாத் மாவட்டம் தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மடத்திற்கு சென்றிருந்தார்.
அப்போது கூட்டத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், ஸ்ரீமத் ராஜ்சந்திரா ஒரு சிறந்த துறவியாகவும், கவிஞராகவும், தத்துவஞானியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார் என்று கூறினார். அவரது வழிமுறைகளைப் பின்பற்றி குருதேவ் திரு ராகேஷ், ஆன்மீகத் துறையில் ஈடு இணையற்ற பணிகளைச் செய்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். திரு ராகேஷின் வழிகாட்டுதலின் கீழ், தரம்பூர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மடம் உலகில் 200க்கும் அதிகமான இடங்களில் செயல்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மனித நலனுக்குப் பெரும் பங்களிப்பாக விளங்கும் சுய அறிவின் பாதையை இந்த மடம் எடுத்துக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது பெரும்பாலான மக்கள் பொருள் இன்பத்தின் பின்னால் ஓடுகிறார்கள் என்றும், வாழ்க்கையில் உண்மையில் என்ன தேவை என்பதை மறந்து விட்டார்கள் என்றும் அவர் கூறினார். நாம் படிப்படியாக நமது ஆன்மீக செல்வத்தை மறந்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார். பணம் சம்பாதிப்பதோடு, மன அமைதி, சமநிலை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவையும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். தற்போது உலகில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு நமது பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தீர்வுகாண முடியும். ஆனால், இதன் பொருள் நவீன வளர்ச்சிகளை நாம் பின்பற்றக்கூடாது என்பதில்லை. மாறாக, ஆன்மீகப் பாதையைப் பின்பற்றி நவீன வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2005539)
ANU/SMB/IR/RS/RR
(Release ID: 2005555)
Visitor Counter : 174