வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
"பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்" 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை 2024 பிப்ரவரி 8 அன்று குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்
Posted On:
07 FEB 2024 2:35PM by PIB Chennai
"பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்" 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்தத் தோட்டத்தில் 2024 பிப்ரவரி 8 அன்று காலை 11.15 மணிக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும் கலந்து கொள்வார். இந்த நிகழ்வு, தோட்டத் திருவிழா 2024-ன் ஒரு பகுதியாகக் குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்திற்குள் உள்ள அமிர்தத் தோட்டத்தில் நடைபெறுகிறது. வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பெருவிழாவிற்கு மக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
பன்முகத்தன்மை அமிர்தப் பெருவிழாவின் முதல் பகுதி, பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து, வடகிழக்கு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் ஆகியவற்றில் பரிமாற்றங்களை ஊக்குவித்து, பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊக்கியாக இருப்பதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் வேளாண் தோட்டக்கலை பொருட்கள்: வடகிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாகவும் எட்டு பிரத்யேக அரங்குகள் மூலம் 320-க்கும் அதிகமான நெசவாளர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர்.
நேரடி செயல்விளக்கம்: மஜூலி முகக் கவசம் தயாரித்தல், கூடை முடைதல், பழங்குடியினர் நகை தயாரித்தல், தங்கா ஓவியம், பித்தளை உலோகச் சிற்பம் செதுக்குதல், அசாமின் மரச்சிற்பம் போன்ற வடகிழக்கு பிராந்தியத்தின் தயாரிப்புகளை பொதுமக்கள் நேரடியாகக் காண செயல்விளக்கங்கள் அளிப்பதற்கு 20-க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
கலாச்சார காட்சிப்படுத்துதல்: பாரம்பரிய நடனங்கள், மனதை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் போன்ற வடகிழக்குப் பிராந்தியத்தின் கலாச்சார நிகழ்ச்சிகளை 350-க்கும் அதிகமான கலைஞர்கள் நிகழ்த்த உள்ளனர்.
உணவு அரங்குகள்: அசாமின் சுவையான லக்சா முதல் மணிப்பூரின் எரோம்பா வரையிலான உணவு வகைகள், வடகிழக்குப் பிராந்தியத்தின் தனித்துவமான சுவைகள் , மூலிகைகள், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட உள்ளன.
பிற செயல்பாடுகள்: குழந்தைகளுக்கான பகுதி மற்றும் இளைஞர்களுக்கான பகுதி வடகிழக்குப் பிராந்தியத்தின் வரலாற்று, கலாச்சார செழுமையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும்.
***
ANU/SMB/IR/RR/KV
(Release ID: 2003552)