பிரதமர் அலுவலகம்
இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்
“தனித்தன்மை வாய்ந்த ஒரு வலுவான எரிசக்தித்துறையானது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமாகும்”
“இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி சர்வதேச வல்லுநர்கள் வியந்து பாராட்டுகின்றனர்”
“இந்தியா உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி சர்வதேச திசையையும் தீர்மானிக்கிறது”
“முன்னெப்போதும் இல்லாதவகையில் உட்கட்டமைப்பை முன்னெடுப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது”
“சர்வதேச உயிரி எரிபொருள் கூட்டமைப்பு உலகம் முழுவதும் அரசுகள், அமைப்புகள், தொழில்களை ஒன்றிணைக்கிறது”
“குப்பையிலிருந்து வள மேலாண்மை வாயிலாக கிராமப் பொருளாதாரத்திற்கு நாம் பணிகளை மேற்கொண்டுள்ளோம்”
“சூழலுக்கேற்ற வளத்திலிருந்து நமது எரிசக்தி கலவை என்பதை நோக்கி முன்னெடுப்பதை இந்தியா வலியுறுத்துகிறது”
“சூரியசக்தி ஆற்றல் துறை தற்சார்பை நாம் ஊக்குவிக்கிறோம்”
“இந்திய எரிசக்தி வார நிகழ்வு என்பது வெறுமனே இந்தியாவுக்கானது மட்டுமல்ல. ஆனால், உலகத்துடன் இந்தியா, உலகத்துக்கான இந்தியா என்ற உணர்வை பிரதிபலிக்கிறது”
Posted On:
06 FEB 2024 12:43PM by PIB Chennai
இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கோவாவில் தொடங்கி வைத்தார். இந்தியா எரிசக்தி வாரம் 2024 இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரே எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும், இது இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளை ஊக்குவிப்பதற்காக முழு எரிசக்தி மதிப்பு சங்கிலியையும் ஒன்றிணைக்கிறது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் வட்டமேஜை மாநாட்டில் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியா எரிசக்தி வாரத்தின் இரண்டாவது பதிப்பிற்கு அனைவரையும் வரவேற்றார். ஆற்றல் மிகுந்த மாநிலமான கோவாவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், கோவா நகரம் அதன் விருந்தோம்பல் உணர்வுக்கு பெயர் பெற்றது என்றும், இந்த இடத்தின் இயற்கை அழகு மற்றும் கலாச்சாரம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். "கோவா வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டியுள்ளது" என்று கூறிய பிரதமர், நீடித்த எதிர்காலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த உணர்திறன் குறித்த விவாதத்திற்கு இது சரியான இடம் என்று சுட்டிக்காட்டினார். 2024 இந்திய எரிசக்தி வாரத்திற்காக கோவாவில் கூடியுள்ள வெளிநாட்டு விருந்தினர்கள் மாநிலத்தின் இனிய நினைவுகளுடன் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதத்தை தாண்டிய இந்த குறிப்பிடத்தக்க தருணத்தில் இந்தியா எரிசக்தி வாரம் 2024 நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சி விகிதம் உலகளாவிய வளர்ச்சி மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது. இது இந்தியாவை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்றுகிறது என்று கூறினார். எதிர்காலத்தில் இதேபோன்ற வளர்ச்சிப் போக்குகள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பையும் அவர் குறிப்பிட்டார். "இந்தியா விரைவில் உலகின் 3 வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று உலகெங்கிலும் உள்ள பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்" என்று கூறிய திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் எரிசக்தித் துறையின் அதிகரித்து வரும் வாய்ப்பைப் பற்றிக் குறிப்பிட்டார்.
எரிசக்தி, எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை நுகர்வதில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், நான்காவது பெரிய எல்.என்.ஜி இறக்குமதியாளர் மற்றும் சுத்திகரிப்பு நாடாகவும், நான்காவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாகவும் இந்தியா உள்ளது என்று அவர் கூறினார். நாட்டில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். 2045 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் எரிசக்தி தேவை இரட்டிப்பாக்கப்படும் என்ற மதிப்பீடுகள் குறித்தும் அவர் பேசினார். அதிகரித்து வரும் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கான இந்தியாவின் திட்டத்தை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். மலிவான விலையில் எரிபொருளை உறுதி செய்வதற்கான முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், பாதகமான உலகளாவிய காரணிகள் இருந்தபோதிலும், பெட்ரோல் விலை குறைந்துள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றும், கோடிக்கணக்கான வீடுகளுக்கு மின்சார வசதி அளித்ததன் மூலம் 100 சதவீத மின்சார வசதி எட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்தியா தனது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யவில்லை, உலக நாடுகளின் திசையையும் தீர்மானித்து வருகிறது என்று பிரதமர் மேலும் கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கிய பிரதமர், சமீபத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக 11 லட்சம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்டது என்றும், இதில் பெரும் பகுதி எரிசக்தித் துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த நிதியின் மூலம் ரயில்வே, சாலைகள், நீர்வழிகள், வான்வழிகள் அல்லது வீட்டுவசதி ஆகியவற்றில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இதற்கு எரிசக்தி தேவைப்படும், இது இந்தியாவின் எரிசக்தி திறனை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு வழிவகுக்கும். அரசின் சீர்திருத்தங்கள் காரணமாக உள்நாட்டு எரிவாயு உற்பத்தி அதிகரித்து வருவதாகவும், முதன்மை எரிசக்தி கலவையில் எரிவாயுவின் சதவீதத்தை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்த நாடு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் அடுத்த 5-6 ஆண்டுகளில் 67 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சுழல் பொருளாதாரம் மற்றும் மறுபயன்பாடு என்ற கருத்து இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இது எரிசக்தித் துறைக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள அரசுகள், அமைப்புகள் மற்றும் தொழில்களை ஒன்றிணைக்கும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி இந்த நம்பிக்கையை அடையாளப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்தியாவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்ற போது, கிடைத்த முழுமையான ஆதரவு குறித்து எடுத்துரைத்தார். உலகில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க 22 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகள் இணைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.
உயிரி எரிபொருள் துறையில் பணிகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். எத்தனால் கலப்பு 2014-ல் 1.5 சதவீதத்திலிருந்து 2023-ல் 12 சதவீதமாக கணிசமான உயர்வைக் கண்டது, இது கார்பன் உமிழ்வை சுமார் 42 மில்லியன் மெட்ரிக் டன் குறைக்க வழிவகுத்தது என்றும் அவர் கூறினார். 2025-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா எரிசக்தி வாரத்தின் போது 80 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் 20 சதவீத எத்தனால் கலப்பு தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை இப்போது 9,000 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
கழிவுகளிலிருந்து செல்வ மேலாண்மை மாதிரியின் மூலம் கிராமப்புற பொருளாதாரங்களை மாற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டுடன் நிலையான வளர்ச்சியை நோக்கிய அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர் மோடி, "இந்தியாவில் 5000 அழுத்தப்பட்ட உயிர்வாயு ஆலைகளை நிறுவ பணியாற்றி வருகிறோம்" என்று குறிப்பிட்டார். உலகளாவிய சுற்றுச்சூழல் கவலைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, "உலக மக்கள் தொகையில் 17% பேர் இருந்தாலும், இந்தியாவின் கார்பன் உமிழ்வு பங்கு 4% மட்டுமே" என்று குறிப்பிட்டார். “சுற்றுச்சூழல் உணர்திறன் ஆற்றல் மூலங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் எங்கள் ஆற்றல் கலவையை மேலும் மேம்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார். 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் இலக்கை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார் .
"இன்று, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறனில் இந்தியா உலகில் நான்காவது இடத்தில் உள்ளது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் நிறுவப்பட்ட திறனில் 40 சதவீதம் புதைபடிவம் அல்லாத எரிபொருட்களிலிருந்து வருகிறது. சூரிய மின்சக்தியில் நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, "கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் சூரிய ஆற்றல் நிறுவப்பட்ட திறன் 20 மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார். "சூரிய சக்தியுடன் இணைப்பதற்கான இயக்கம் இந்தியாவில் வேகம் பெற்று வருகிறது" என்றும் அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி பேனல்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்படுவதன் மூலம், ஒரு கோடி குடும்பங்கள் எரிசக்தித் துறையில் தற்சார்பு அடைய முடியும் என்பது மட்டுமல்லாமல், உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மின்சாரத்தை மின்தொகுப்புக்கு நேரடியாக வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகளின் மாற்றத்தக்க தாக்கத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒட்டுமொத்த சூரியசக்தி மதிப்பு சங்கிலியில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தைப் பற்றி குறிப்பிட்டார். இது ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் மையமாக இந்தியா மாற வழி வகுக்கும். இந்தியாவின் பசுமை எரிசக்தித் துறை, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறையினரை நிச்சயம் வெற்றி பெறச் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சி, எரிசக்தித் துறையில் உலகளாவிய ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. "இந்தியா எரிசக்தி வார நிகழ்ச்சி இந்தியாவின் நிகழ்வு மட்டுமல்ல, 'உலகத்துடன் இந்தியா, உலகத்திற்காக இந்தியா' என்ற உணர்வின் வெளிப்பாடாகும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நிலையான எரிசக்தி அபிவிருத்தியில் ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவித்த அவர், "நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வோம், அதிநவீன தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்போம் மற்றும் நிலையான எரிசக்தி வளர்ச்சிக்கான வழிகளை ஆராய்வோம்" என்று கூறினார்.
நிறைவாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். "ஒன்றிணைந்து, நாம் வளமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்" என்று அவர் கூறினார்.
கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதலமைச்சர் திரு. பிரமோத் சாவந்த், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, மத்திய பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
எரிசக்தித் தேவைகளில் தற்சார்பு நிலையை அடைவது பிரதமரின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்தத் திசையில் மற்றொரு படியாக, இந்தியா எரிசக்தி வாரம் 2024 கோவாவில் பிப்ரவரி 6 முதல் 9 வரை நடைபெறுகிறது, இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடாகும், இது முழு எரிசக்தி மதிப்பு சங்கிலியையும் ஒன்றிணைக்கிறது, மேலும் இந்தியாவின் ஆற்றல் மாற்ற இலக்குகளுக்கு ஒரு வினையூக்கியாக செயல்படும். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் வட்டமேஜை ஆலோசனை மேற்கொண்டார்.
புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல் மற்றும் அவற்றை எரிசக்தி மதிப்புச் சங்கிலியில் ஒருங்கிணைப்பது ஆகியவை 2024 ஆம் ஆண்டின் இந்திய எரிசக்தி வாரத்தின் முக்கிய மையமாக இருக்கும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 17 எரிசக்தி அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 900 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு பிரத்யேக நாடுகளின் அரங்குகளைக் கொண்டிருக்கும். எரிசக்தித் துறையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முன்னெடுத்துச் செல்லும் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்துவதற்காக சிறப்பு மேக் இன் இந்தியா அரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
(Release ID: 2002940)
ANU/PKV/BS/AG/RR
(Release ID: 2003050)
Visitor Counter : 249
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam