உள்துறை அமைச்சகம்
புதுதில்லியில் இன்று நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை வகித்தார் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா விழாவில் பங்கேற்றார்
மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
Posted On:
04 FEB 2024 7:48PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டின் நிறைவு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நிறைவு விழாவில் உரையாற்றினார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு. சூர்யகாந்த், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்திய அட்டார்னி ஜெனரல் டாக்டர் ஆர் வெங்கடரமணி, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா, காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ் சிவக்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, வர்த்தகத்திற்கோ அல்லது குற்றங்களுக்கோ புவியியல் எல்லைகள் முக்கியமல்ல என்று அவர் கூறினார். வர்த்தகம் மற்றும் குற்றம் இரண்டுமே எல்லையற்றதாகி வருகின்றன என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற நேரங்களில், வர்த்தக தகராறுகள் மற்றும் குற்றங்களை எல்லையற்ற முறையில் கையாள, நாம் சில புதிய அமைப்பையும் பாரம்பரியத்தையும் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நீதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார். திருமதி திரௌபதி முர்மு இந்தியாவின் தொலைதூர மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்தவர் என்றும், அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகிப்பது இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வு ஆழமாக உள்ளதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் தகராறுகள் முதல் எல்லை தாண்டிய தகராறுகள் வரை, அனைத்தும் அதிகரித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். சிறிய திருட்டு முதல் வங்கி அமைப்பு மற்றும் தரவுகளை ஹேக் செய்வது வரை முழு செயல்முறையும் ஆழமாகி வருகிறது என அவர் கூறினார். எனவே அவற்றைக் கட்டுப்படுத்த சட்ட அமலாக்க முகமைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்து நாடுகளின் சட்டங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது எல்லை தாண்டிய குற்றங்களுக்கு விரைந்த நீதி வழங்கல் சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார். மற்ற நாடுகளின் சட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் எந்த நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.
இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்தில், நீதி வழங்குவதை உறுதி செய்வதற்கான 'ஒத்துழைப்பு' மற்றும் 'ஒருங்கிணைப்பு' ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார். மாறிவரும் இன்றைய சூழ்நிலையில், நீதித்துறையும் மாற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். எல்லை தாண்டிய வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நீதிக்கான முழு செயல்முறையிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 19 ஆம் நூற்றாண்டின் சட்டங்களை கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் நீதியை வழங்க முடியாது என்று அவர் கூறினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டவுடன், இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக மேம்பட்ட குற்றவியல் நீதி அமைப்பாக மாறும் என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.
----
ANU/AD/PLM/DL
(Release ID: 2002457)
Visitor Counter : 80