பிரதமர் அலுவலகம்

ஆச்சார்யா ஸ்ரீ எஸ்.என். கோயங்காவின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


"சேர்ந்து தியானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒற்றுமை உணர்வும் ஒற்றுமையின் சக்தியும் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் முக்கிய அடிப்படையாகும்"

"'ஒரே வாழ்க்கை, ஒரே குறிக்கோள்' என்பதற்கு சிறந்த உதாரணம். ஆச்சார்யா கோயங்காவுக்கு ஒரே ஒரு இலக்கு மட்டுமே இருந்தது – அது விபாசனா"

"விபாசனா என்பது சுய கண்காணிப்பின் மூலம் சுய மாற்றத்திற்கான பாதை ஆகும்"

"இன்றைய சவாலான காலங்களில், வேலை, வாழ்க்கை சமநிலை, வாழ்க்கை முறை பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், விபாசனா அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது"

"விபாசனாவை மேலும் ஏற்புடையதாக மாற்றுவதில் பாரதம் முன்னிலை வகிக்க வேண்டும்"

Posted On: 04 FEB 2024 3:17PM by PIB Chennai

எஸ்.என். கோயங்காவின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.

ஓராண்டுக்கு முன்பு விபாசனா தியான ஆசிரியர் ஆச்சார்யா ஸ்ரீ எஸ்.என். கோயங்காவின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடங்கியதை நினைவு கூர்ந்த பிரதமர், நாடு அமிர்தப் பெருவிழா கொண்டாடுவதைச் சுட்டிக் காட்டினார். அதே நேரத்தில் கோயங்காவின் கொள்கைகளையும் நினைவு கூர்ந்தார். இந்தக் கொண்டாட்டங்கள் இன்று முடிவுக்கு வரும் நிலையில், வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். குருஜி அடிக்கடி பயன்படுத்திய பகவான் புத்தரின் மந்திரத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, "ஒன்றாக தியானிப்பது பயனுள்ள முடிவுகளைத் தரும் என்றும், ஒற்றுமை உணர்வும், ஒற்றுமையின் சக்தியும் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் முக்கிய அடிப்படையாகும் என்றும் கூறினார். ஒற்றுமையின் மந்திரத்தை பரப்பும் அனைவருக்கும் அவர் தமது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

கோயங்காவுடனான தமது தொடர்புகளை நினைவு கூர்ந்த பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உலக சமய மாநாட்டின் முதலாவது கூட்டத்திற்குப் பிறகு குஜராத்தில் தாங்கள் பலமுறை சந்தித்துக் கொண்டதாகக் கூறினார். அவரது இறுதிக் காலக் கட்டத்தில் அவரைக் கண்டதும், ஆச்சார்யாவை நெருக்கமாக அறிந்துகொண்டதும் புரிந்துகொண்டதும் தமக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று திரு நரேந்திர மோடி கூறினார். கோயங்கா தமது அமைதியான மற்றும் தீவிரமான ஆளுமை காரணமாக விபாசனாவை ஆழமாக உள்வாங்கிக் கொண்டது பற்றியும், அவர் சென்ற இடமெல்லாம் நல்லொழுக்கமான சூழ்நிலையை உருவாக்கியது பற்றியும் பிரதமர் பேசினார். "'ஒரே வாழ்க்கை, ஒரே பணி' என்பதற்கு சிறந்த உதாரணம், கோயங்காவிடம் இருந்த ஒரே ஒரு குறிக்கோளான விபாசனா என்று அவர் தெரிவித்தார். அவர் விபாசனா பற்றிய அறிவை அனைவருக்கும் வழங்கினார் என்று கூறிய பிரதமர், மனிதகுலத்திற்கும், உலகிற்கும் அவர் வழங்கிய பெரும் பங்களிப்பை பாராட்டினார்.

விபாசனா என்பது பண்டைய இந்திய வாழ்க்கை முறை முழு உலகிற்கும் அளித்த அற்புதமான பரிசு என்றாலும், நாட்டில் நீண்ட காலத்திற்கு இந்த பாரம்பரியம் இல்லை என்று அவர் கூறினார்.  விபாசனா கற்பித்தல் மற்றும் கற்றுக்கொள்ளும் கலை முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றியது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மியான்மரில் 14 ஆண்டுகள் தவம் செய்த பின்னர், கோயங்கா அந்த அறிவைப் பெற்று, பாரதத்தின் பண்டைய பெருமையான விபாசனாவுடன் தாயகம் திரும்பினார் என்று பிரதமர்  தெரிவித்தார். விபாசனாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், சுய கண்காணிப்பின் மூலம் சுய மாற்றத்திற்கான பாதை இது என்றார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இது அறிமுகப்படுத்தப்பட்டபோது இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது என்றாலும், உலகின் தற்போதைய சவால்களைத் தீர்க்கும் சக்தியும் அதற்கு இருப்பதால் இன்றைய வாழ்க்கைக்கு இது மேலும் பொருத்தமானதாக மாறியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். குருஜியின் முயற்சிகள் காரணமாக, உலகின் 80 க்கும் மேற்பட்ட நாடுகள் தியானத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொண்டுள்ளன என்று அவர் கூறினார். ஆச்சார்யா ஸ்ரீ கோயங்கா மீண்டும் ஒருமுறை விபாசனாவுக்கு உலகளாவிய அடையாளத்தை அளித்துள்ளார் என்றும், இன்று அந்தத் தீர்மானத்திற்கு இந்தியா முழு பலத்துடன் புதிய விரிவாக்கத்தை அளித்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.  ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவுக்கு 190-க்கும் மேற்பட்ட நாடுகள் அளித்த ஆதரவை அவர் நினைவு கூர்ந்தார்.

விபாசனா யோகாவின் செயல்முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்தவர்கள் இந்தியாவின் முன்னோர்கள்தான் என்றாலும், அடுத்த தலைமுறையினர் அதன் முக்கியத்துவத்தை மறந்ததைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். விபாசனா, தியானம், தாரணை ஆகியவை பெரும்பாலும் துறவு தொடர்பான விஷயங்களாக மட்டுமே கருதப்படுகின்றன என்றும் அதன் பங்கு மறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதில் ஆச்சார்யா ஸ்ரீ எஸ்.என்.கோயங்கா போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளை அவர்களின் பணிகளுக்காகாப் பிரதமர் பாராட்டினார். குரு ஜி-யை மேற்கோள் காட்டிய பிரதமர், ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நம் அனைவரின் பெரிய பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார். விபாசனாவின் நன்மைகளை எடுத்துரைத்த அவர், இன்றைய சவாலான காலங்களில், பணிச் சூழல், வாழ்க்கை சமநிலை, வாழ்க்கை முறைப் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், விபாசனா பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்றார். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் வயதான பெற்றோர்கள், மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் தனிக் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கும் ஒரு தீர்வு என்று அவர் கூறினார். இதுபோன்ற முயற்சிகளுடன் முதியோரை இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனது பிரச்சாரங்கள் மூலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், நல்லிணக்கமாகவும் மாற்ற ஆச்சார்யா கோயங்கா மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார். இந்த இயக்கங்களின் பலன்களை எதிர்கால சந்ததியினர் பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். அதனால்தான் கேயங்கா தமது அறிவை விரிவுபடுத்தினார் என்றும் அத்துடன் நின்றுவிடாமல், திறமையான ஆசிரியர்களையும் உருவாக்கினார் என்றும் பிரதமர் கூறினார். விபாசனா பற்றி மீண்டும் ஒருமுறை விளக்கிய பிரதமர், அது ஆன்மாவுக்குள் செல்வதற்கான பயணம் என்றும், உங்களுக்குள் ஆழமாக மூழ்குவதற்கான ஒரு வழி என்றும் கூறினார். இருப்பினும், இது ஒரு பயிற்சி மட்டுமல்லாமல் ஒரு அறிவியல் என்றார். இந்த அறிவியலின் முடிவுகளை நாம் நன்கு அறிந்திருப்பதால், நவீன அறிவியலின் தரத்திற்கு ஏற்ப அதன் ஆதாரங்களை உலகிற்கு இப்போது நாம் முன்வைக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். இந்த திசையில் உலகம் முழுவதும் ஏற்கெனவே நிறைய முயற்சிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், உலகிற்கு அதிக நலனைக் கொண்டுவருவதற்காக புதிய ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி அதை மேலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுவதில் பாரதம் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆச்சார்யா எஸ்.என்.கோயங்காவின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த ஆண்டு அனைவருக்கும் ஊக்கமளிக்கும் நேரம் என்று கூறியதுடன், அவரது முயற்சிகள் மனித சேவைக்காக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

----

 

ANU/PKV/PLM/DL



(Release ID: 2002409) Visitor Counter : 78