நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அரிசி / நெல் கையிருப்பைத் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது
Posted On:
02 FEB 2024 2:08PM by PIB Chennai
ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கும், நேர்மையற்ற ஊக வணிகத்தைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பல இடங்களில் கடைகள் வைத்திருக்கும் பெரிய விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் / ஆலை உரிமையாளர்கள் ஆகியோருக்கு மறு உத்தரவு வரும் வரை அரிசி / நெல் கையிருப்பு நிலவரம் குறித்து அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. (i) உடைத்த அரிசி, (ii) பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி, (iii) புழுங்கல் அரிசி, (iv) பாசுமதி அரிசி, (v) நெல் போன்ற வகைகளின் இருப்பு நிலவரத்தை விற்பனையாளர்கள் அறிவிக்க வேண்டும். நிறுவனங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தளத்தில் (https://evegoils.nic.in/rice/login.html) அதைப் புதுப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணை வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் அரிசியின் கையிருப்பு நிலவரத்தை இந்த நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும்.
மேலும், உணவுப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது நுகர்வோருக்கு 'பாரத் ரைஸ்' சில்லறை விற்பனையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி 'பாரத் ரைஸ்' பிராண்டின் கீழ் சில்லறை விற்பனைக்காக தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டக சாலை ஆகிய 3 ஏஜென்சிகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பாரத் அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.29 ஆக இருக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் அரிசி விற்பனை செய்யப்படும். பாரத் அரிசி முதலில் மூன்று மத்திய கூட்டுறவு நிறுவனங்களின் மொபைல் வேன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருந்து வாங்குவதற்கு கிடைக்கும், மேலும் இது மிக விரைவில் இ-வணிகத் தளங்கள் உள்ளிட்ட பிற சில்லறைக் கடைகளிலும் கிடைக்கும்.
இந்தக் கரீஃப் பருவத்தில் நல்ல விளைச்சல் இருந்தபோதும், இந்திய உணவுக் கழகத்திடம் போதுமான கையிருப்பு இருந்தபோதும், அரிசி ஏற்றுமதியில் பல்வேறு விதிமுறைகள் இருந்தபோதும் அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. சில்லறை விலை கடந்த ஆண்டை விட 14.51% அதிகரித்துள்ளது. அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
---
(Release ID: 2001790)
ANU/SMB/PKV/KPG/KRS
(Release ID: 2002015)
Visitor Counter : 228