வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் வலுவான தரமான சூழல் அமைப்பை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது
Posted On:
30 JAN 2024 9:28AM by PIB Chennai
இந்தியாவில் வலுவான, தரமான சூழல் அமைப்பை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் உயர் நிலைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக உயர் தரத்திலான, பாதுகாப்புக்கு இணக்கமான தயாரிப்புகளை வலியுறுத்துவதே இதன் தனிச்சிறப்பாகும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மின் பாகங்கள், ஆய்வகக் கண்ணாடி பொருட்கள், செப்பு தயாரிப்புகள் போன்ற நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான தயாரிப்புகளுக்குத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (டிபிஐஐடி) தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (கியூசிஓக்கள்) விரைவாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்திய நுகர்வோருக்குக் கிடைக்கும் பொருட்களின் தரத்தில் சமரசம் செய்யாமல், 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளின் தரத்தை வலுப்படுத்த சரியான கூறுகளை இந்த தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் கொண்டுள்ளன. தரமற்ற தயாரிப்புகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கவனம் செலுத்தும் அணுகுமுறை, சிறந்த தரமான தயாரிப்புகளுக்கு ஏற்றதாக இந்தியாவை ஓர் உற்பத்தி சக்தியாக நிறுவுவதற்கு ஒரு முக்கியமான உந்துதலாக இருக்கும்.
உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்புக்கு இணக்கமான தயாரிப்புகளை வழங்குவதில் இந்தியாவை உலக அளவில் முன்னோடியாக நிலைநிறுத்தும் நோக்கில், பிரீமியம் தரத்தை வழங்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளுடன் 'மேட் இன் இந்தியா' பிராண்ட் எதிரொலிப்பதை உறுதி செய்வதற்காக ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைதான் சீர்திருத்தத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு வழிகாட்டும் சக்தியாக உள்ளது. "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் உலகில் எந்த மேஜையிலும் இடம் பெற்றால், அதை விட சிறந்தது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையை உலகம் பெற வேண்டும்" என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும். நமது உற்பத்திப் பொருட்கள், நமது சேவைகள், நமது நிறுவனங்கள், நமது முடிவுகளை எடுக்கும் நடைமுறைகள் என அனைத்தும் உன்னதமானதாக இருக்கும். அப்போதுதான் சிறப்பின் சாரத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பத்தின் வருகையுடன், வாடிக்கையாளர்கள், பாதுகாப்புத் தரநிலை தொடர்பான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். வாங்குவதற்கு முன் தயாரிப்பு தர மதிப்புரைகளை சரிபார்க்க இது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. எனவே, உற்பத்தி உத்தியின் அடிப்படையில் தயாரிப்பு தரம், விலை, புதுமை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.
தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்துவதன் மூலம், உலக உற்பத்திச் சந்தையில் இந்தியா அதிகப் பங்கைப் பெறவும், நுகர்வோர் தயாரிப்புப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்தியச் சந்தையில் தரமற்ற பொருட்கள் புழக்கத்தில் இருப்பதைத் தடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், உயிர் இழப்பு அல்லது விபத்துகளைத் தடுக்கவும் வலுவான தர நிர்ணயங்களை அமல்படுத்த உதவும்.
இந்தியாவின் தேசிய தர நிர்ணய அமைப்பாக செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம், சர்வதேச தர நிர்ணய அமைப்பு, சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையம் வகுத்துள்ள தொடர்புடைய சர்வதேச தரங்களுடன் பெருமளவில் பொருந்தியுள்ளது. இது பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தரமான பொருட்களை வழங்கும் அடிப்படை நோக்கத்துடன் பொருட்களின் தரப்படுத்தல், குறியிடுதல் மற்றும் தரச் சான்றிதழ் மற்றும் இணக்க மதிப்பீடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2000472
***
ANU/SMB/PKV/RS/RR
(Release ID: 2000521)
Visitor Counter : 122