உள்துறை அமைச்சகம்

அசாம் மாநிலம் தேஜ்பூரில் நடைபெற்ற சஷஸ்திர சீமா பல் அமைப்பின் 60-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்

Posted On: 20 JAN 2024 4:41PM by PIB Chennai

அசாமின் தேஜ்பூரில் உள்ள எஸ்.எஸ்.பி ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் சஷஸ்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி) -ன் 60 வது உதய தின கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஸ்ரீ அமித் ஷா தலைமை விருந்தினராக உரையாற்றினார். அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய உள்துறைச் செயலாளர், எஸ்.எஸ்.பி. தலைமை இயக்குநர் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்த்தியாகம் செய்த 51 வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தினார். கடந்த ஆண்டு மட்டும், ஐந்து எஸ்.எஸ்.பி வீரர்கள் கடமையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்று அவர் கூறினார். நாட்டை பாதுகாக்க மிக உயர்ந்த தியாகத்தை கொடுக்க தயாராக இருக்கும் வீரர்களால் மட்டுமே நாடு நிம்மதியாக தூங்க முடிகிறது என்று அவர் கூறினார். 


பரம்வீர் சக்ரா விருது பெற்ற கரம் சிங்  நினைவு தினத்தை நினைவு கூர்ந்த திரு அமித் ஷா, கரம் சிங்  தனது உயிரைத் தியாகம் செய்து பெரும் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார் என்றும், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது நினைவாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரு தீவுக்கு கரம் சிங் தீவு என்று பெயரிட்டார் என்றும் கூறினார்.


45-வது பட்டாலியன் தலைமையகமான வீர்பூர், 20-வது பட்டாலியன் தலைமையகம் சீதாமர்ஹி, ரிசர்வ் பட்டாலியன் தலைமையகமான பாராசத்தில் வீட்டுவசதி, ராணுவ முகாம்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு காவலர்கள், பண்டகசாலைகள் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட ரூ.226 கோடி செலவில் எஸ்.எஸ்.பி தொடர்பான பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்று திரு அமித் ஷா கூறினார். 


கடந்த ஒன்பது ஆண்டுகளில் எஸ்.எஸ்.பி உட்பட அனைத்து மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளின் வசதிகளை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று அவர் கூறினார். எஸ்.எஸ்.பி.யின் 60-வது வைர விழாவை முன்னிட்டு மத்திய அரசு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த அஞ்சல் தலை எஸ்.எஸ்.பி.யின் கடமை உணர்வை எப்போதும் அடையாளப்படுத்தி நாட்டின் முன் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


சேவை, பாதுகாப்பு, சகோதரத்துவம் என்ற தாரக மந்திரத்துடன் தேசத்தின் சேவை மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எஸ்.எஸ்.பி.க்கு மிகவும் புகழ்பெற்ற வரலாறு உள்ளது என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்தியா-சீனா போருக்குப் பிறகு 1963 இல் எஸ்.எஸ்.பி நிறுவப்பட்டது. அதன்பிறகு, அடல் ஜி ஒரு எல்லை, ஒரு படை, என்ற கொள்கையை அமல்படுத்தியபோது, 2001 முதல் இந்தியா-நேபாள எல்லையையும், 2004 முதல் இந்தியா-பூட்டான் எல்லையையும் எஸ்.எஸ்.பி மிகவும் கடமை உணர்வுடன் நிர்வகித்து வருகிறது.


 2,450 கி.மீ நீளமுள்ள திறந்தவெளி எல்லைகளை எஸ்.எஸ்.பி முழு விழிப்புணர்வுடன் பாதுகாத்து வருவதாகவும், காடு, மலை, நதி அல்லது பீடபூமி எதுவாக இருந்தாலும், எஸ்.எஸ்.பி பணியாளர்கள் எந்த வகையான வானிலையிலும் கடமையில் சமரசம் செய்ததில்லை என்றும் அவர் கூறினார்.


எல்லைகளை பாதுகாக்கும் மத்திய ஆயுத காவல் படையினரில், எஸ்எஸ்பி ஒரு தனித்துவமான அமைப்பாகும், இது எல்லைகளை பாதுகாத்துள்ளது மட்டுமல்லாமல், கடினமான பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளையும் எதிர்கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 


இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம் மற்றும் இந்தியா-பூட்டான் எல்லைக்கு அருகிலுள்ள அனைத்து கிராமங்களின் கலாச்சார, மொழியியல், புவியியல் மற்றும் வரலாற்று தகவல்களை உன்னிப்பாக சேமிக்கும் பணியையும் இப்படை செய்துள்ளது. இந்த தனித்துவமான பணி இதுபோன்ற அனைத்து கிராமங்களையும் அவற்றின் கலாச்சார மற்றும் மொழி வரலாற்றின் மூலம் நாட்டுடன் இணைக்க உதவுகிறது என்று கூறிய அவர், எல்லைப் பிரச்சினைகள் எங்கு ஏற்பட்டாலும் இந்தியாவின் கோரிக்கையை உறுதிப்படுத்தி வலுப்படுத்தவும் இது உதவுகிறது என்று கூறினார். 


இந்த நடவடிக்கைகள் படைப்பிரிவு வாரியத்தின் பன்முகத்தன்மையை நிரூபிக்கின்றன என்றும், இந்தியாவின் எல்லைகளின் கலாச்சார ஒருமைப்பாட்டை பராமரிப்பதிலும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்தியாவின் உரிமைகோரல்களை வலுப்படுத்துவதிலும் நாட்டிற்கு பெரிதும் பயனளித்துள்ளன என்றும் அவர் கூறினார்.


கடந்த ஒரு வருடத்தில், எஸ்.எஸ்.பி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது மற்றும் 24 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், 144 ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். 


சுமார் 500 அப்பாவிகளை ஆட்கடத்தலில் இருந்து மீட்டுள்ளது. நேபாளம், பூட்டான் போன்ற நட்பு நாடுகளுடனான எல்லைகளைப் பாதுகாப்பதோடு, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் எஸ்.எஸ்.பி வீரர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

சிஆர்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றுடன் எஸ்.எஸ்.பி நக்சல் இயக்கத்தை ஓரங்கட்டியுள்ளது என்று அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் நக்சல் பிரச்சினையிலிருந்து 100 சதவீதம் விடுபடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றுடன் எஸ்எஸ்பி வீரர்கள் தோளோடு தோள் நின்று போராடியிருக்கிறார்கள், தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், தங்கள் வீரத்தைப் பற்றிய புகழ்பெற்ற கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

விளையாட்டுத் துறையிலும் எஸ்.எஸ்.பி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 

********

(Release ID : 1998127)



(Release ID: 1998362) Visitor Counter : 94