குடியரசுத் தலைவர் செயலகம்
துராவின் பால்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடினார்; துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்
Posted On:
16 JAN 2024 1:56PM by PIB Chennai
மேகாலயாவின் துராவில் உள்ள பால்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 16, 2024) கலந்துரையாடினார் . துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீகத் துறைகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இன்றியமையாதது என குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி, தொழில்முனைவு, விவசாயம் அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியப் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து மற்ற பெண்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற எண்ணத்தை அமல்படுத்த முடியும் என குடியரசுத்தலைவர் கூறினார். பொருளாதார சுதந்திரத்துடன், இது ஓரளவிற்கு உண்மையாகி விட்டது. பொருளாதாரத் தற்சார்பு பெண்களுக்குத் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறது என அவர் கூறினார்.
நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் சுறுசுறுப்பாகவும், அதிக எண்ணிக்கையிலும் பங்களிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது மட்டுமல்லாமல், அவர்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இருப்பினும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திசையில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மக்கள் தங்களைச் சுற்றியுள்ள பெண்களின் மதிப்பு மற்றும் குணங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும், அவர்களை முன்னெடுத்துச் செல்ல மற்ற பெண்களின் கைகளைப் பற்றிட வேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார். இது அவர்களின் பயணம் மட்டுமல்லாமல், நம் நாட்டில் உள்ள ஏராளமான பெண்களின் பயணமும் ஆகும். அவர்கள் தங்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகளை இன்னும் ஆராயவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் தங்கள் பிராந்தியத்திலும் நாட்டிலும் உள்ள மற்ற பெண்களுக்கு ஓர் உத்வேகமாக மாற வேண்டும் என குடியரசுத்தலைவர் கேட்டுக் கொண்டார்.
***
ANU/ SMB/PKV/RR/KV
(Release ID: 1996631)
Visitor Counter : 99