பாதுகாப்பு அமைச்சகம்
நவீன கல்வியை வழங்கும் அதே நேரத்தில் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க புதிய இந்தியாவில் அதிக குருகுலங்களும் தேவை: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
06 JAN 2024 2:46PM by PIB Chennai
நவீன கல்வியை வழங்கும் நிலையில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க நாட்டில் அதிக குருகுலங்களை உருவாக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (ஜனவரி 06, 2024 ) உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள சுவாமி தர்ஷானந்த் குருகுல மகாவித்யாலயாவில் நடைபெற்ற புதிய குருகுல அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய திரு ராஜ்நாத் சிங், வெளிநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால் தார்மீக மதிப்புகள் சீரழிந்து வருவதாகக் கூறினார். இந்த நேரத்தில், இளைஞர்களிடையே தார்மீக விழுமியங்களை உள்ளடக்கிய நவீன கல்வியை வழங்க குருகுலங்கள் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
சுமார் 1,000 முதல் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டில் பல பெரிய பல்கலைக்கழகங்கள் இருந்தன என்றும், அவற்றில் குருகுல பாரம்பரியம் பரவலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு, வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் அந்த அமைப்பை கிட்டத்தட்ட அழித்ததாக அவர் தெரிவித்தார். நாட்டின் பண்பாட்டு உணர்வுக்கு ஏற்றதாக அல்லாமல் கல்வி வழங்கும் முறை மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதில் இந்திய கலாச்சாரம் தாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்டது என்றும் அந்த உணர்வு நம்மை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதித்தது எனவும் அவர் கூறினார். அந்த நேரத்தில், சுவாமி தர்ஷானந்த் இந்த குருகுலத்தை நிறுவியதாகவும் இது நமது இளம் தலைமுறையினருக்கு ஒளியூட்டுகிறது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், ஆரம்பக் கல்வி முதலே இளைஞர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை வளர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளதாகக் கூறினார். நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்களில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நீண்ட செயல்பாட்டில் குருகுலங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அவர் கூறினார்.
குருகுலங்கள் பழங்காலக் கல்வி முறைகளை மட்டுமே பின்பற்றுகின்றன என்ற தோற்றம் சிலரிடம் உள்ளதாகவும், ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவை முன்னேறி நவீனமாகிவிட்டன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பாரம்பரிய கல்வியுடன் இணைந்து முன்னேறுமாறு குருகுலங்களை அவர் வலியுறுத்தினார். குருகுலங்கள் மீண்டும் நாட்டையும் அதன் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியாவின் புதிய அடையாளமாக மாற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
நாட்டின் கலாச்சார வளர்ச்சியில் குருகுலங்கள் வகிக்கக்கூடிய பங்கை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினார். கலாச்சார மேம்பாட்டிற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
யோகாவைப் பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாகக் கருதப்பட்ட இந்த யோகக் கலை, இன்று உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், இப்போது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
----
ANU/PKV/PLM/DL
(Release ID: 1993778)
Visitor Counter : 103