நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தரத்தில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும் : இந்திய தர நிர்ணய அமைவனத்தின் 77-வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பேச்சு
Posted On:
06 JAN 2024 2:35PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) 77-வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று (06-01-2024) பங்கேற்று தலைமை உரையாற்றினார். பி.ஐ.எஸ் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டி.பி.ஐ.ஐ.டி) இணைந்து 'இந்தியாவில் தர சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான உரையாடல்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தரநிலைகளை சர்வதேச தரங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் இதை அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
ஹால்மார்க் நகைகள் தொடர்பாக, பி.ஐ.எஸ்.ஸின் முயற்சிகளைப் பாராட்டிய திரு பியூஷ் கோயல், கட்டாய ஹால்மார்க் முத்திரை 343 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
2014-ம் ஆண்டு வரை 106 பொருட்களுக்கு 14 தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் மட்டுமே இருந்தன எனவும் ஆனால், இப்போது, 672 தயாரிப்புகளுக்கு 156 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டை வழிநடத்தும் கடந்த சில ஆண்டுகளில்தான் 90 சதவீத தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் கொண்டுவரப்பட்டதாக திரு பியூஷ் கோயல் கூறினார். இளம் தலைமுறையினர் தரம் மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் தூதர்களாக மாற வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
பருத்தி சோதனைக்காக 21 ஆய்வகங்களை அமைக்க ரூ .40 கோடி முதலீடு செய்ய பி.ஐ.எஸ். சமீபத்தில் ஒப்புக்கொண்டது என்று அவர் கூறினார். பி.ஐ.எஸ்-ஸிடம் போதுமான நிதி இருப்பதாகக் கூறிய அவர், சிறந்த செயல்பாடுகளுக்காக வெளிப்படையான சூழல் அமைப்பு மற்றும் உயர் கண்காணிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தரப்படுத்தல் தொடர்பான பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், நுகர்வோர் குழுக்கள், கல்வியாளர்கள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னணி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தொடக்க அமர்வைத் தொடர்ந்து தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.
----
ANU/PKV/PLM/DL
(Release ID: 1993772)
Visitor Counter : 97