பிரதமர் அலுவலகம்

லட்சத்தீவு, கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் மேல் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

கொச்சி-லட்சத்தீவு நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பைத் தொடங்கிவைத்தார்

கட்மாத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் குறைந்த வெப்பநிலை அனல் ஆலையை அர்ப்பணித்தார்

அகத்தி, மினிக்காய் தீவுகளின் அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்புகளை அர்ப்பணித்தார்

கவரட்டியில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அர்ப்பணித்தார்

ஆரம்ப சுகாதார நிலையம், 5 மாதிரி அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்க அடிக்கல் நாட்டினார்

"லட்சத்தீவின் புவியியல் பரப்பளவு சிறியதாக இருந்தாலும், மக்களின் இதயங்கள் கடல் போல ஆழமானவை"

"எங்களுடைய அரசு தொலைதூர, எல்லை, கடலோர, தீவுப் பகுதிகளை எங்களுடைய முன்னுரிமையாக ஆக்கியுள்ளது"

"அனைத்து அரசு திட்டங்களையும் அனைத்து பயனாளிக்கும் வழங்க மத்திய அரசு முயற்சிக்கிறது"

"தரமான உள்ளூர் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளூர் மீனவர்களின் வாழ்க்கையை மாற்றும்"

"லட்சத்தீவின் அழகோடு ஒப்பிடும்போது உலகின் மற்ற இடங்கள் சாதாரணமானவை"

"வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் லட்சத்தீவு வலுவான பங்கு வகிக்கும்"

Posted On: 03 JAN 2024 1:08PM by PIB Chennai

லட்சத்தீவின் கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மடிக்கணினி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய பிரதமர், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விவசாயிகள், மீனவர் பயனாளிகளுக்கு பிரதமர் வேளாண் கடன் அட்டைகளையும் அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், லட்சத்தீவின் அழகான அம்சங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை என்று குறிப்பிட்டார். அகத்தி, பங்காரம் கவரட்டி ஆகிய இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பதாக அவர்  குறிப்பிட்டார். "லட்சத்தீவின் நிலப்பரப்பளவு சிறியதாக இருந்தாலும், மக்களின் இதயங்கள் கடலைப் போல ஆழமாக உள்ளன" என்று பிரதமர் கூறினார்.

தொலைதூர, எல்லை, கரையோர தீவுப் பகுதிகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். "எங்கள் அரசு அத்தகைய பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது", என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு, போக்குவரத்து, நீர், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான திட்டங்களுக்காக அவர் இப்பகுதி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

லட்சத்தீவின் வளர்ச்சிக்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் (கிராமப்புறம்), ஒவ்வொரு பயனாளிக்கும் இலவச ரேஷன் கிடைப்பது, பிரதமரின் வேளாண் கடன் அட்டை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம், ஆயுஷ்மான் சுகாதார நலவாழ்வு மையத்தின் வளர்ச்சி குறித்து தெரிவித்தார். "அனைத்து அரசு திட்டங்களையும் அனைத்து பயனாளிக்கும் வழங்க மத்திய அரசு முயற்சிக்கிறது" என்று பிரதமர் திரு மோடி கூறினார். பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் பணம் வழங்கும் போது ஏற்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது ஊழலை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது என்றார். லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சிப்பவர்கள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது என்று அவர் உறுதியளித்தார்.     

1000 நாட்களுக்குள் விரைவான இணையத்தை உறுதி செய்வது குறித்து 2020 -ம் ஆண்டில் தான் அளித்த உத்தரவாதத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்கொச்சி-லட்சத்தீவுகள் நீர்மூழ்கி கண்ணாடி இழைகள் இணைப்பு  திட்டம் இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், இது  லட்சத்தீவு மக்களுக்கு 100 மடங்கு விரைவான இணையத்தை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இது அரசு சேவைகள், மருத்துவ சிகிச்சை, கல்வி, டிஜிட்டல் வங்கி போன்ற வசதிகளை மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர் லட்சத்தீவை தளவாட மையமாக உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இதன் மூலம் வலுப்பெறும் என்று கூறினார். கட்மாட்டில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் குறைந்த வெப்ப அனல் ஆலையைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, லட்சத்தீவில் உள்ள அனைத்து வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் விரைவாக நடந்து வருவதாகக் கூறினார்.

 புகழ்பெற்ற சூழலியலாளர் திரு அலி மாணிக்பானுடன் உரையாடியது குறித்தும், லட்சத்தீவுக் கூட்டத்தின் பாதுகாப்பு குறித்த அவரது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார். 2021-ம் ஆண்டில் திரு அலி மாணிக்கனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியதில் அவர் திருப்தி தெரிவித்தார். லட்சத்தீவு இளைஞர்களின் கண்டுபிடிப்புகள், கல்விக்கு மத்திய அரசு வழிவகுத்து வருவதாகவும், இன்று மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதிவண்டிகளை வழங்குவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முந்தைய ஆண்டுகளில் லட்சத்தீவில் எந்தவொரு சிறந்த கல்வி நிறுவனமும் இல்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார், இது தீவுகளில் இருந்து இளைஞர்கள் வெளியேற வழிவகுத்தது என்றும் அவர் கூறினார். உயர்கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்துத் தெரிவித்த திரு. மோடி, ஆண்ட்ரோட் மற்றும் காட்மத் தீவுகளில் கலை, அறிவியல் கல்வி நிறுவனங்களையும், மினிகாயில் பாலிடெக்னிக் நிறுவனத்தையும் தொடங்குவதைக் குறிப்பிட்டார். "இது லட்சத்தீவு இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்", என்று அவர் மேலும் கூறினார்.  

லட்சத்தீவு ஹஜ் யாத்ரீகர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். ஹஜ் விசாவை எளிதாக்குவது மற்றும் விசாவிற்கான செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது, பெண்கள் ஆண் துணை இல்லாமல் ஹஜ் செல்ல அனுமதிப்பது ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகளால் உம்ரா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உலகளாவிய கடல் உணவு சந்தையில் தனது பங்கை அதிகரிப்பதற்கான இந்தியாவின் முயற்சியை பிரதமர் எடுத்துரைத்தார், இது உள்ளூர் சூரை மீன்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் லட்சத்தீவுகளுக்கு நன்மை பயக்க வழிவகுக்கிறது என்று அவர் தெரிவித்தார். மீனவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய தரமான உள்ளூர் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர்  திரு மோடி சுட்டிக் காட்டினார். கடற்பாசி வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்தும் அவர் தெரிவித்தார். இப்பகுதியின் பலவீனமான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை வலியுறுத்திய அவர், லட்சத்தீவின் முதல் பேட்டரி ஆதரவு சூரிய மின் திட்டமான கவரட்டியில் உள்ள சூரிய மின் நிலையம் அத்தகைய முன்முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றார்.

விடுதலைப் பெருவிழா அமிர்த காலத்தில்  இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் லட்சத்தீவின் பங்கை சுட்டிக் காட்டிய பிரதமர், யூனியன் பிரதேசத்தை சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்வதற்கான அரசின் முயற்சிகளைக் குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த ஜி20 மாநாட்டை குறிப்பிட்டு லட்சத்தீவுகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். சுதேச தர்ஷன் திட்டத்தின் கீழ், லட்சத்தீவுகளுக்கு இலக்கு சார்ந்த பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். லட்சத்தீவு இரண்டு நீலக் கொடி கடற்கரைகளின் தாயகம் என்று கூறிய அவர், கட்மாத், சுஹேலி தீவுகளில் நீர் வில்லா திட்டங்களின் வளர்ச்சியைக் குறிப்பிட்டார். "லட்சத்தீவுகள் கப்பல் சுற்றுலாவின் முக்கிய இடமாக மாறி வருகிறது" என்று கூறிய திரு மோடி, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடிவு செய்வதற்கு முன்பு நாட்டில் குறைந்தது பதினைந்து இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர்  திரு மோடி தனது அறைகூவலை மீண்டும் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் உள்ள தீவு நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் லட்சத்தீவுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "நீங்கள் லட்சத்தீவின் அழகைக் கண்டால், உலகின் மற்ற இடங்கள் சாதாரணமானதாகத்  தோன்றும்", என்று அவர் மேலும் கூறினார்.

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை வசதி, பயண வசதி, எளிதாக தொழில் தொடங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். "வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் லட்சத்தீவு ஒரு வலுவான பங்கை வகிக்கும்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.

இந்த நிகழ்ச்சியில் லட்சத்தீவு துணை நிலை ஆளுநர் திரு  பிரபுல் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

2020 -ம் ஆண்டில் செங்கோட்டையில் சுதந்திர தின உரையின் போது அறிவிக்கப்பட்ட கொச்சி-லட்சத்தீவு நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் லட்சத்தீவில் மெதுவான இணைய வேகத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் முடிவு செய்தார். தற்போது இத்திட்டம் முடிக்கப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. இது இணைய வேகத்தை 100 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் (1.7 ஜி.பி.பி.எஸ் முதல் 200 ஜி.பி.பி.எஸ் வரை).  சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படும். லட்சத்தீவுகளில் விரைவான, நம்பகமான இணைய சேவைகள், தொலை மருத்துவம், மின் ஆளுமை, கல்வி முன்முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் நாணய பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்ற தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை இந்தப் பிரத்யேக நீர்மூழ்கி கப்பல் உறுதி செய்யும்.

கட்மாத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் குறைந்த வெப்பநிலை அனல் ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் தினமும் 1.5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீர் உற்பத்தி செய்யப்படும். அகத்தி, மினிக்காய் தீவுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பவளத் தீவு என்பதால், நிலத்தடி நீர் இருப்பு குறைவாக இருப்பதால் லட்சத்தீவுகளில் குடிநீர் கிடைப்பது எப்போதுமே சவாலாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டங்கள் தீவுகளின் சுற்றுலாத் திறனை வலுப்படுத்தவும், உள்ளூர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.

லட்சத்தீவின் முதல் பேட்டரி ஆதரவு சூரிய மின்சக்தி திட்டமான கவரட்டியில் உள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிற திட்டங்களில் அடங்கும்.

கல்பேனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைப்பதற்கும், ஆண்ட்ரோத், சேத்லட், கட்மாத், அகத்தி, மினிக்காய் ஆகிய ஐந்து தீவுகளில் ஐந்து மாதிரி அங்கன்வாடி மையங்களை (நந்த் கர்ஸ்) கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

***

(Release ID: 1992653)

ANU/PKV/IR/AG/RR



(Release ID: 1992735) Visitor Counter : 122