பாதுகாப்பு அமைச்சகம்

மும்பையில் ஐ.என்.எஸ். இம்பால் ஏவுகணை எதிர்ப்பு போர்க்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் கடற்படையில் இணைத்தார்; பாதுகாப்புத்துறையில் 'தற்சார்பு இந்தியா’ நிலையின் சின்னமாக இது விளங்குகிறது என்று குறிப்பிட்டார்

Posted On: 26 DEC 2023 2:40PM by PIB Chennai

மும்பையில் ஐ.என்.எஸ். இம்பால் ஏவுகணை எதிர்ப்பு போர்க்கப்பலை பாதுகாப்புத் துறை  அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கடற்படையில் இணைத்தார். அப்போது பேசிய அவர், பாதுகாப்புத்துறையில் 'தற்சார்பு இந்தியா’ நிலையின் சின்னமாக இது விளங்குகிறது என்று குறிப்பிட்டார். "ஐ.என்.எஸ் இம்பால் இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் சக்தியின் அடையாளமாகும் என்றும், இது அதை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக முப்படைகளையும் நவீனமயமாக்குவதில் சமமான முக்கியத்துவம் அளிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை திரு ராஜ்நாத் சிங் மீண்டும் தெரிவித்தார். முந்தைய அரசின் நிலம் சார்ந்த அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தின என்று கூறினார்.

அரபிக்கடலில் வணிக கப்பல் (எம்.வி) கெம் புளூட்டோ மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மற்றும் செங்கடலில் 'எம்.வி.சாய் பாபா' மீதான தாக்குதல் ஆகியவற்றையும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் உத்திசார்ந்த சக்தி சிலரைப் பொறாமை மற்றும் வெறுப்பால் நிரப்பியுள்ளது என்று அவர் கூறினார். இந்தத் தாக்குதல்களை இந்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், கடற்படை தனது கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மொத்தம் 315 வீரர்களைக் கொண்ட இந்தக் கப்பலை, பீரங்கி மற்றும் ஏவுகணை நிபுணர் கேப்டன் கே.கே.சவுத்ரி வழிநடத்துகிறார். இது நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் கடற்படையின் இயக்கம், அணுகல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையின் மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இக்கப்பல், 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும், 7,400 டன் எடையும் கொண்டதாகும். இந்தக் கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.  

இந்தக் கப்பலின் ஒரு தனித்துவமான அம்சம், சுமார் 75% அதிக அளவிற்கு உள்நாட்டுத்திறனால் உருவாக்கப்பட்டதாகும்.

 

***

ANU/PKV/IR/AG/KPG

 

 



(Release ID: 1990540) Visitor Counter : 91