பிரதமர் அலுவலகம்

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படைப்புகள் அடங்கிய தொகுப்பைப் பிரதமர் வெளியிட்டார்


11 பகுதிகளைக் கொண்ட முதல் தொகுதி வெளியிடப்பட்டது

"பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் வெளியீட்டு விழா மிகவும் முக்கியமானது"

"மதன் மோகன் மாளவியா, நவீன சிந்தனை மற்றும் சனாதன கலாச்சாரத்தின் சங்கமமாகத் திகழ்ந்தார்"


"மாளவியாவின் எண்ணங்களை இந்த அரசின் பணிகளில் உணர முடியும்"

"மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது இந்த அரசின் அதிர்ஷ்டம்"

"மாளவியாவின் முயற்சிகள் நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையிலும் பிரதிபலிக்கின்றன"

"நல்லாட்சி என்பது அதிகாரத்தை மையமாகக் கொண்டிருக்காமல் சேவையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்"

"தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல நிறுவனங்களை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது"

Posted On: 25 DEC 2023 6:16PM by PIB Chennai

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 'பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகள்' என்ற 11 பகுதிகள் அடங்கிய முதல் தொகுப்பை வெளியிட்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நினைவிடத்திலும் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன் மோகன் மாளவியா நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். மக்களிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த அளப்பரிய பாடுபட்ட சிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து தமது உரையைத் தொடங்கினார். இன்று அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதால், இன்றைய நாள் பாரத நாட்டின் மக்களுக்கு உத்வேகத்தின் திருவிழா என்று அவர் கூறினார். பண்டிட் மதன்மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு நல் ஆளுகை தினம் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த தொகுக்கப்பட்ட படைப்புகள் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் தொடர்பான அம்சங்கள், காங்கிரஸ் தலைமையுடனான மாளவியாவின் உரையாடல்கள் மற்றும் பிரிட்டிஷ் தலைமை மீதான அவரது அணுகுமுறை ஆகியவற்றை எடுத்துக் கூறுவதாக பிரதமர் கூறினார். மதன் மோகன் மாளவியாவின் நாட்குறிப்பு தொடர்பான பகுதி, சமூகம், தேசம் மற்றும் ஆன்மீகத்தின் பரிமாணங்களில் நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார். இந்தத் தொகுப்புப் பணியின் பின்னணியில் உள்ள குழுவின் கடின உழைப்பைப் பாராட்டிய பிரதமர், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மகாமனா மாளவியா மிஷன் அமைப்பு மற்றும் ராம் பகதூர் ராய் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மதன் மோகன் மாளவியா போன்ற ஆளுமைகள் நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கிறார்கள் என்றும் அவர்களின் தாக்கத்தை எதிர்கால சந்ததியினர் பலரிடம் காணலாம் என்றும் குறிப்பிட்ட பிரதமர், அறிவு மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் சிறந்த அறிஞர் என்று குறிப்பிட்டார். மாளவியா, நவீன சிந்தனை மற்றும் சனாதன கலாச்சாரத்தின் சங்கமம் என்று பிரதமர் மேலும் கூறினார். சுதந்திரப் போராட்டத்திற்கும், தேசத்தின் ஆன்மீக ஆன்மாவுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் சமமான பங்களிப்பை அவர் வழங்கியதாக பிரதமர் சுட்டிக் காட்டினார். அவர் தற்போதைய சவால்கள் மற்றும், தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்த அதே நேரத்தில் எதிர்கால வளர்ச்சிகள் மீதும் கவனம் கொண்டிருந்தார் என்று பிரதமர் கூறினார். மதன் மோகன் மாளவியா நாட்டிற்காகப் போராடியதுடன் கடினமான சூழலிலும் புதிய விதைகளை விதைத்தார் என்று பிரதமர் தெரிவித்தார். அவரது பல பங்களிப்புகள் இன்று வெளியிடப்படும் 11 பகுதிகள் அடங்கிய தொகுப்பின் மூலம் ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா வழங்கியது இந்த அரசின் அதிர்ஷ்டம் என்று அவர் கூறினார். அவரைப் போலவே, காசி மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தமக்கும் கிடைத்ததாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மாளவியா காசியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டதை அவர் நினைவு கூர்ந்தார்மதன் மோகன் மாளவியாவுக்கு காசி மீது அபரிமிதமான பற்று இருந்தது என்றும், காசி நகரம் வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொட்டு இன்று அதன் பாரம்பரியத்தின் பெருமையை மீட்டெடுத்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அமிர்த காலத்தில், அடிமை மனப்பான்மையை  உதறிவிட்டு இந்தியா முன்னேறுகிறது என்று கூறிய பிரதமர், தமது அரசின் பணிகளிலும் மாளவியாவின் எண்ணங்களின் செயலாக்கத்தை உணர முடியும் என்றார். மாளவியா ஒரு தேசத்தின் பார்வையை நமக்கு வழங்கியுள்ளார் என்று கூறிய பிரதமர், தேசத்தின் பழங்கால ஆன்மா நவீன உடலில் பாதுகாக்கப்படுகிறது என்றார். மாளவியா, இந்திய விழுமியங்கள் நிறைந்த கல்விக்காக பாடுபட்டதையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கியதையும், இந்திய மொழிகளை ஆதரித்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். அவரது முயற்சியால், நகரி எழுத்துமுறை பயன்பாட்டுக்கு வந்து, இந்திய மொழிகளுக்கு மரியாதை கிடைத்தது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இன்று, மாளவியாவின் இந்த முயற்சிகள் நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையிலும் பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் கூறினார்.

எந்தவொரு நாட்டையும் வலுப்படுத்துவதில், அதன் கல்வி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் உள்ளது என்று கருதிய மாளவியா இதுபோன்ற பல நிறுவனங்களை உருவாக்கினார் என்றும் அங்கு தேசிய ஆளுமைகள் உருவாக்கப்பட்டனர் என்றும் பிரதமர் தெரிவித்தார். பனாரஸ் இந்து பலகலைக்கழகம், ஹரித்துவாரில் உள்ள ரிஷிகுல் பிரம்மசாரம், பிரயாக்ராஜில் உள்ள பாரதி பவன் புஸ்தகாலயா, சனாதன் தர்ம மகாவித்யாலயா ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசு கூட்டுறவு அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம், சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு, சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பு, பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கான கூட்டமைப்பு, இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம், விண்வெளி மற்றும் கடல்சார் துறையில் சாகர் போன்றவற்றை உருவாக்கி இருப்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியா இன்று தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல நிறுவனங்களை உருவாக்கி வருகிறது என்றும் இந்த நிறுவனங்கள் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் ஒரு புதிய வழிகாட்டுதலைக் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மதன் மோகன் மாளவியா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் இருவரையும் கவர்ந்த சித்தாந்தங்களுக்கு இடையிலான ஒப்பீட்டை எடுத்துரைத்த பிரதமர், மதன் மோகன் மாளவியா குறித்து அடல் பிஹாரி வாஜ்பாய் கூறிய கருத்தை நினைவுகூர்ந்தார். "அரசாங்கத்தின் உதவியின்றி ஒரு நபர் நல்ல காரியங்களைச் செய்ய முற்படும்போது, மதன் மோகன் மாளவியாவின் ஆளுமையும் அவரது பணியும் ஒரு கலங்கரை விளக்கம் போல ஒளிரும்" என்று அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியதைப் பிரதமர் குறிப்பிட்டார். நல்லாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெற்றி அடையச் செய்ய அரசு முயற்சிக்கிறது என்று அவர் மீண்டும் கூறினார். நல்லாட்சி என்பது அதிகாரத்தை மையமாகக் கொண்டதாக இல்லாமல் சேவையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தெளிவான நோக்கங்கள் மற்றும் சிறந்த உணர்வுடன் கொள்கைகள் உருவாக்கப்படும்போது, தகுதியான ஒவ்வொரு நபரும் எந்த பாகுபாடும் இல்லாமல் முழு உரிமைகளையும் பெறுவார்கள் என்றும் அதுவே நல்ல நிர்வாகம் என்றும் அவர் கூறினார்அடிப்படை வசதிகளுக்காக மக்கள் பல இடங்களுக்கு அலைய வேண்டிய தேவை இல்லை என்ற நல்லாட்சிக் கொள்கை இன்றைய நல்லாட்சி மத்திய அரசின் அடையாளமாக மாறியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். பயனாளிகளின் வீட்டுக்கே சென்று திட்டப் பயன்களைக் கிடைக்கச் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார். அரசின் அனைத்துத் திட்டங்களின் பலன்களும் மக்களை முழுமையாகச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய யாத்திரை குறித்தும்  திரு நரேந்திர மோடி பேசினார். மோடியின் உத்தரவாத வாகனத்தின் தாக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், 40 நாட்களுக்குள் கோடி என்ற எண்ணிக்கையில் புதிய ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

நல்லாட்சியில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையின் பங்கை வலியுறுத்திய பிரதமர், மக்கள் நலத் திட்டங்களுக்காக பல லட்சம் கோடிகளை செலவழிக்கும் நிலையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவது குறித்து விளக்கினார். ஏழைகளுக்கு இலவச உணவு தானியப் பொருட்களுக்கு ரூ. 4 லட்சம் கோடியும், ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ. 4 லட்சம் கோடியும், ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ரூ. 3 லட்சம் கோடியும் செலவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நேர்மையாக வரி செலுத்துவோரின் ஒவ்வொரு பைசாவும் பொது நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் செலவிடப்பட்டால், அது நல்லாட்சி என்று அவர் குறிப்பிட்டார். நல்லாட்சியின் விளைவாக 13.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

செயல்திறன் மற்றும் நல்லாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, பின்தங்கிய நிலையில் இருந்த 110 மாவட்டங்களை லட்சிய மாவட்ட திட்டம் மாற்றியமைத்தது என்று கூறினார். இப்போது அதே கவனம் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கும் வழங்கப்படுகிறது  என்று அவர் கூறினார்.

சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறும்போது, முடிவுகளும் மாறுகின்றன என்று அவர் தெரிவித்தார். எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் துடிப்பான கிராமத் திட்டத்தையும் பிரதமர்  எடுத்துரைத்தார். இயற்கைப் பேரிடர்கள் அல்லது அவசர நிலைகளின் போது நிவாரணங்களை வழங்குவதில் அரசின் உறுதியான அணுகுமுறையையும் அவர் எடுத்துரைத்தார். கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போரின் போது நிவாரண நடவடிக்கைகளை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்இப்போது சமூகத்தின் சிந்தனை மாறியுள்ளது என்றும் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிணைப்பும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்த நம்பிக்கை நாட்டின் தன்னம்பிக்கையில் பிரதிபலிக்கிறது என்று கூறிய அவர் அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கான ஆற்றலாக இது மாறுகிறது என்றார்.

மதன் மோகன் மாளவியா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் சிந்தனைகளை அடித்தளமாகக் கருதி அதன் மூலம் அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உறுதியுடன் வெற்றிப் பாதைக்கு பங்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மகாமனா மாளவியா மிஷனின் செயலாளர் திரு பிரபுநாராயண் ஸ்ரீவஸ்தவ் மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா சம்பூர்ண வாங்கமே-யின் தலைமை ஆசிரியர் திரு ராம்பகதூர் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

 

தேச சேவைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இந்த அமிர்த காலத்தில் அங்கீகாரத்தை வழங்குவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது. 'பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் தொகுப்பு' அதில் ஒரு முயற்சியாகும்.

சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட 11 தொகுதிகளாக உள்ள இந்த இருமொழி (ஆங்கிலம் மற்றும் இந்தி) படைப்பு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் எழுத்துக்கள் மற்றும் உரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்புகளில் அவரது கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் உரைகள், குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 1907 ஆம் ஆண்டில் அவரால் தொடங்கப்பட்ட 'அபயுதயா' என்ற இந்தி வார இதழின் தலையங்க உள்ளடக்கம், அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், 1903 மற்றும் 1910 க்கு இடையில் ஆக்ரா மற்றும் அவத் ஐக்கிய மாகாணங்களின் சட்ட மேலவையில் அவர் ஆற்றிய 1910 மற்றும் 1920-க்கு இடையில் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில் மசோதாக்களை சமர்ப்பிக்கும் போது ஆற்றிய உரைகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு முன்னும் பின்னும் எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள்  மற்றும் உரைகள், மற்றும் 1923 மற்றும் 1925-க்கு இடையில் அவர் எழுதிய நாட்குறிப்பு ஆகியவை இந்த நூல்களில் அடங்கியுள்ளன.

பண்டிட் மதன் மோகன் மாளவியா எழுதிய மற்றும் பேசிய ஆவணங்களை ஆராய்ச்சி செய்து தொகுக்கும் பணி மகாமான பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமான மகாமன மாளவியா மிஷனால் மேற்கொள்ளப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் திரு ராம் பகதூர் ராய் தலைமையிலான குழு, பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் மூல மொழி மற்றும் உரையை மாற்றாமல் பணியாற்றியுள்ளது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளியீட்டுப் பிரிவு இந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

-------

 

ANU/SM/PLM/KPG



(Release ID: 1990336) Visitor Counter : 102