ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளங்கள் துறையின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்

Posted On: 22 DEC 2023 6:12PM by PIB Chennai

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறை பின்வரும் இரண்டு திட்டங்களை முக்கியமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் (டி.ஐ.எல்.ஆர்.எம்.பி) மற்றும் பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டத்தின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அம்சம் (டபிள்யூ.டி.சி- பி.எம்.கே.எஸ்.ஒய்) ஆகியவையே அவையாகும்.

•    டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் (DILRMP): டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் ஏப்ரல் 1, 2016 முதல் மத்திய துறை திட்டமாக மாற்றப்பட்டது.

•    ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் நவீன, விரிவான மற்றும் வெளிப்படையான நிலப் பதிவேடு மேலாண்மை அமைப்பை உருவாக்குவதே டி.ஐ.எல்.ஆர்.எம்.பி. திட்டத்தின் நோக்கமாகும்.

•    டி.ஐ.எல்.ஆர்.எம்.பி திட்டத்தின் கீழ் கணிசமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. அடிப்படைக் அம்சங்களைப் பொறுத்தவரை, நிலப் பதிவேடுகளை கணினி மயமாக்குதலில் 95.08 சதவீத உரிமைப் பதிவேடுகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன

•    2021-22 முதல் 2025-26 வரை ஐந்து ஆண்டுகளுக்கு டி.ஐ.எல்.ஆர்.எம்.பி.யை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

•    நிலப் பதிவேடு தரவுத்தளத்துடன் ஆதார் எண்ணை ஒருங்கிணைத்தல் மற்றும் வருவாய் நீதிமன்றங்களை கணினிமயமாக்குதல் மற்றும் நில ஆவணங்களுடன் ஒருங்கிணைத்தல் ஆகிய இரண்டு புதிய அம்சங்களும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.

•    தனித்துவமான நிலத் தொகுப்பு அடையாள எண் (யு.எல்.பி.ஐ.என்) அல்லது பூ-ஆதார்: தனித்துவமான நிலத் தொகுப்பு அடையாள எண் (யு.எல்.பி.ஐ.என்) அமைப்பு என்பது ஒவ்வொரு நிலத் தொகுப்புக்கும் 14 இலக்க அடையாளம் ஆகும். இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. யு.எல்.பி.ஐ.என் மனையின் உரிமை விவரங்களையும், அதன் அளவு விவரங்களையும் கொண்டிருக்கும். இது ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை எளிதாக்கும். சொத்து எல்லை சிக்கல்களைத் தீர்க்க உதவும்.

•    ஆந்திரா, ஜார்கண்ட், கோவா, பீகார், ஒடிசா, சிக்கிம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, திரிபுரா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், அசாம், மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், தமிழ்நாடு, பஞ்சாப், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கேரளா, லடாக், சண்டிகர் கர்நாடகா மற்றும் தில்லி ஆகிய 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுவரை பூ-ஆதார் / யு.எல்.பி.ஐ.என் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

•    தேசிய பொது ஆவண பதிவு முறை (NGDRS) அல்லது மின் பதிவு: பத்திரங்கள் / ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான ஒரே மாதிரியான செயல்முறையைக் கொண்டிருக்க, "தேசிய பொதுவான ஆவண பதிவு முறை (என்.ஜி.டி.ஆர்.எஸ்) என்ற ஒரே நாடு ஒரே பதிவு மென்பொருள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.

•    தேசிய பொது ஆவண பதிவு முறை (என்.ஜி.டி.ஆர்.எஸ்) அல்லது இ-பதிவு என்பது நாடு முழுவதும் உள்ள பதிவுத் துறைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான பயன்பாடாகும். சார்பதிவாளர்கள், மக்கள் மற்றும் பதிவுத் துறைகளைச் சேர்ந்த பயனர்களின் வசதிக்காக இந்த பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

•    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கோவா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், பஞ்சாப், திரிபுரா, மகாராஷ்டிரா, மிசோரம், டி.என்.எச் மற்றும் டி.டி, மணிப்பூர், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேகாலயா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 18 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுவரை என்.ஜி.டி.ஆர்.எஸ் அல்லது இ-பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

•    ஆந்திரா, ஹரியானா, சண்டிகர், என்.சி.டி டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், புதுச்சேரி, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் பதிவு தொடர்பான தரவுகளை ஏபிஐ / பயனர் இடைமுகம் (யுஐ) மூலம் www.ngdrs.gov.in தேசிய என்ஜிடிஆர்எஸ் தேசிய தளத்துடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளன.

•    நில ஆவணங்கள் / பதிவுத் தரவுத் தளத்துடன் மின்-நீதிமன்றத்தை இணைத்தல்:  மின் நீதிமன்றத்தை நிலப் பதிவேடு மற்றும் பதிவுத் தரவுத் தளத்துடன் இணைப்பதன் நோக்கம், நீதிமன்றங்களுக்கு உண்மையான நேரடித் தகவல்களை கிடைக்கச் செய்வதன் மூலம் வழக்குகளை விரைவாக முடித்து, இறுதியில் நிலத் தகராறுகளைக் குறைப்பதாகும்.

•    ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நீதித் துறையுடன் இணைந்து மின்-நீதிமன்றத்தை நிலப் பதிவு மற்றும் பதிவுத் தரவுத் தளத்துடன் இணைப்பதற்கான முன்னோடி சோதனை நீதித் துறையில் அமைக்கப்பட்ட குழு மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

•    தமிழ்நாடு உள்ளிட்ட 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மின்-நீதிமன்ற பயன்பாட்டு மென்பொருளை நில ஆவணங்கள் பயன்பாட்டு மென்பொருள் மற்றும் பதிவு தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்க சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்றுள்ளன.

•    பூமி சம்மான் (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான டி.ஐ.எல்.ஆர்.எம்.பி.க்கான பிளாட்டினம் கிரேடிங் சான்றிதழ் திட்டம்): உரிமைகளின் பதிவேடுகளை கணினிமயமாக்குதல் போன்ற திட்டத்தின் அடிப்படைக் கூறுகளை நிறைவு செய்வதற்கான இலக்கை டி.ஓ.எல்.ஆர் நிர்ணயித்துள்ளது.

•    20.12.2023 நிலவரப்படி, அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 16 மாநிலங்களில் உள்ள 168 மாவட்டங்கள் 6 அம்சங்களில் 99% மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளை முடித்து பிளாட்டினம் தரவரிசையை எட்டியுள்ளன.

•    30.11.2022 அன்று வரை பிளாட்டினம் தர நிர்ணயம் பெற்ற 68 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு 18.07.2023 அன்று 'பூமி சம்மான்' என்ற பெயரில் பிளாட்டினம் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை புதுதில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.

•    பிரதமரின்  கிரிஷி சின்சாயி யோஜனாவின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அம்சம் (டபிள்யூ.டி.சி- பி.எம்.கே.எஸ்.ஒய்):  இத்திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரை 49.5 இலட்சம் ஹெக்டேர் என்ற இலக்குடன், மத்திய அரசின் பங்காக ரூ. 8,134 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உள்பட 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 1149 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசின் பங்காக ரூ.2912.93 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 78756 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் / புதுப்பித்தல், 83342 ஹெக்டேர் கூடுதல் பரப்பு பாதுகாப்பு நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 471282 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

*******


ANU/PKV/PLM/DL



(Release ID: 1989963) Visitor Counter : 79