மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

2023-ஆம் ஆண்டில் செயல்பாடுகள்: மீன்வளத் துறை (மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம்)

Posted On: 14 DEC 2023 1:18PM by PIB Chennai

அறிமுகம்

இந்தியப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது  தேசத்தின் வருவாய், ஏற்றுமதி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு மட்டுமன்றி வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் தனது பங்களிப்பை செய்கிறது. எதிர்கால வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள துறையாக மீன்வளத் துறை கருதப்படுகிறது. இந்தியாவில் 3 கோடி பேருக்கு வாழ்வாதாரமாக இந்தத் துறை திகழ்கிறது.

2022-23-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் 175.45 லட்சம் டன் அளவுக்கு மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான உற்பத்தியில் 8 சதவீதத்துடன் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இது வேளாண் துறை மதிப்பீட்டில் 6.7% அளவுக்கு பங்களிப்பை செய்கிறது. இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதன்படி, நீடித்த, பொறுப்பான, சமமான வளர்ச்சிக்கு கொள்கை மற்றும் நிதி ஆதரவுடன் தெளிவான கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

திட்டங்கள்

. பிரதமரின் மீனவர்கள் மேம்பாட்டுத் திட்டம்

பிரதமரின் மீனவர்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு மே 20, 2020-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒட்டுமொத்தமாக ரூ.20,050 கோடியில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் திட்டத்தை கொரோனா நிவாரணத் திட்டத்தின் ஓர் அங்கமாக செப்டம்பர் 10, 2020-ல் பிரதமர் தொடங்கிவைத்தார். அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 2024-25-ஆம் நிதியாண்டு வரையான 5 ஆண்டு காலத்துக்கு இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

. மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை அமல்படுத்துதல்

மீன்வளத் துறையில் கட்டமைப்புத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில், தனித்துவமான நிதியமாக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை மீன்வளத் துறை 2018-19-ஆம் ஆண்டில் ரூ.7,522.48 கோடி மதிப்பில் உருவாக்கியது. தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு சலுகை அடிப்படையில் நிதி வழங்க இந்த நிதியம் வழிவகை செய்கிறது.

. விவசாயிகள் கடன் அட்டை

விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தை மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும், 2018-19-ஆம் ஆண்டில் இந்திய அரசு விரிவுபடுத்தியது. மூலதனத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டுதல்களை பிப்ரவரி 4, 2019-இல் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தொடர் முயற்சிகள் மூலம், விவசாயிகள் கடன் அட்டைகோரி, ஒட்டுமொத்தமாக 3,24,404 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 1,70,647 விவசாயிகள் கடன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன.

பட்ஜெட் அறிவிப்புகள்

. பிரதமரின் மீன் வளர்ப்பு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய துணைத் திட்டம் குறித்த அறிவிப்பு 2023-24-ல் வெளியிடப்பட்டது. மீனவர்கள், மீன் வியாபாரிகள், சிறு, குறு நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் ரூ.6,000 கோடியில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

. தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைப்பது குறித்த அறிவிப்பு (2022-23)

தமிழகத்தில் ரூ.127.71 கோடி முதலீட்டில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு பிரதமரின் மீன்வளர்ப்பு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்டது.

. பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக 5 மிகப்பெரும் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு

2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தபடி, 5 மிகப்பெரும் மீன்பிடி துறைமுகங்களை (சென்னை, கொச்சி, பாரதீப், பெச்வாகட், விசாகப்பட்டினம் பகுதிகளில்) அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒட்டுமொத்த தொகையான ரூ.518.68 கோடியில் மத்திய அரசின் பங்காக ரூ.199.75 கோடி உள்ளது.

முக்கிய நடவடிக்கைகள்

  1. குஜராத்தின் சூரத் பகுதியிலிருந்து மூன்றாவது கட்ட கடல் பயணத்தை பிப்ரவரி 19-இல் மீன்வளத் துறை தொடங்கியது. இதற்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபாலா, மீன்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்தப் பயணம் வடக்கு மகாராஷ்டிர கடலோரப் பகுதியை நோக்கி சென்றது.
  2. இந்திய அரசின் மீன்வளத் துறை, கர்நாடக அரசு, கோவா அரசு, கடலோர காவல் படை, மீனவப் பிரதிநிதிகள் இணைந்து நான்காம் கட்ட கடல் பயணத்தை கோவாவின் மர்கோவா துறைமுகத்தில் மார்ச் 17, 2023-ல் தொடங்கினர். மார்ச் 18 வரை நடைபெற்ற இந்தப் பயணத்தில் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
  3. மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஐந்தாம் கட்ட கடல் பயணம் மே 17, 2023-ல் தொடங்கி கோவாவில் மே 19-ல் நிறைவடைந்தது. மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
  4. அந்தமான் நிகோபார் தீவுகளில் மே 29, 2023 முதல் மே 30 வரை 6-ஆவது கட்ட கடல் பயணம் நடைபெற்றது.
  5. 7-வது கட்ட கடல் பயணம், கேரளாவில் ஜூன் 8, 2023-ல் தொடங்கி, ஜூன் 9-ல் நிறைவடைந்தது.
  6. நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இரண்டாவது கட்ட கடல் பயணம் தொடங்கியது. கேரளாவில் ஆகஸ்ட் 31, 2023-ல் தொடங்கிய இந்தப் பயணம், செப்டம்பர் 2 வரை தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.

*****

PKV/SK/KV

 



(Release ID: 1988803) Visitor Counter : 80