புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

உயர் செயல்திறன் கொண்ட சூரிய மின் தகடுகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்: மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இணையமைச்சர் திரு பகவந்த் கூபா

Posted On: 15 DEC 2023 5:27PM by PIB Chennai

உயர் செயல்திறன் கொண்ட சூரிய மின் தகடுகளுக்கான (சோலார் பேனல்) உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் உள்நாட்டு  உற்பத்தியை அதிகரிக்கும் என்று மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா கூறியுள்ளார்.

தேசிய சூரிய சக்தி கூட்டமைப்பு (என்.எஸ்.இ.எஃப்.ஐ), ஐரோப்பிய சூரிய சக்தி அமைப்பு, ஐரோப்பிய யூனியன்- இந்தியா தூய்மை எரிசக்தி கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த முதலாவது  இந்திய சூரிய மின் உற்பத்தி உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

உயர் செயல்திறன் கொண்ட சூரிய மின் தகடுகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் ரூ.24,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். சூரிய மின் தகடுகளின் விலை நிர்ணயத்தில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக மத்திய அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்றி செயல்படுவதாக அமைச்சர் கூறினார்.   அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து கலந்தாலோசித்து, ஆலோசனைகளைப்  பெற்று, இத்துறையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் நாடு வளர்ச்சியடைந்து வருவதாகவும், இதை உலக நாடுகள் பாராட்டுவதாகவும் இணையமைச்சர் திரு பகவந்த் கூபா கூறினார். அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக இத்துறை மேம்படும் என்று கூறிய அவர், இத்துறையில் உள்ள வாய்ப்புகளை  முதலீட்டாளர்கள்   பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இத்துறை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

ANU/AD/PLM/AG/KRS



(Release ID: 1986843) Visitor Counter : 87


Read this release in: English , Urdu , Hindi , Punjabi