பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை ஆண்டு உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

"இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு உணர்வை நாம் காண்கிறோம்"

"அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு' என்ற கொள்கை அடிப்படையில் வழிநடத்தப்படுகின்றன.

"செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது"

"செயற்கை நுண்ணறிவு மாறுதலுக்கு உட்படுத்தப்படக்கூடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதை வெளிப்படையானதாக மாற்றுவது நம் கையில் உள்ளது"

"தொடர்புடைய நெறிமுறை, பொருளாதார மற்றும் சமூக குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை வளரும்"

"செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஒரு பகுதியாக திறன்களை உருவாக்குதல் மற்றும் மறுதிறன் செய்தல்"

"செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை பயன்பாட்டிற்கான உலகளாவிய கட்டமைப்பைத் தயாரிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்"

"செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய எந்தவொரு தகவல் அல்லது தயாரிப்பையும் தனிப்படுத்திக் காட்ட ஒரு குறியீட்டை உள்ளீடு செய்யக் கூடிய மென்பொருளை அறிமுகப்படுத்த முடியுமா?&

Posted On: 12 DEC 2023 7:13PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கண்காட்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார். ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட தொடர்புடையோர் இணைந்த முன்முயற்சியாகும். இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவில் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைவராக இந்தியா உள்ளது.

செயற்கை நுண்ணறிவு குறித்து உலகமே விவாதித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஜி.பி.ஏ.ஐ உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வளர்ந்து வரும் சாதகமான மற்றும் எதிர்மறையான அம்சங்களைக் குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு நாட்டின் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு தொழில்துறை தலைவர்களுடன் உரையாடியதையும், ஜி.பி.ஏ.ஐ உச்சிமாநாடு குறித்து விவாதித்ததையும் நினைவு கூர்ந்தார். சிறிய அல்லது பெரிய நாடு என ஒவ்வொரு நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய அவர், எச்சரிக்கையுடன் முன்னேறுமாறு அறிவுறுத்தினார். ஜி.பி.ஏ.ஐ உச்சிமாநாட்டில் நடைபெறவுள்ள விவாதங்கள் மனிதகுலத்தின் அடிப்படை வேர்களை வழிநடத்தும் மற்றும் பாதுகாக்கும் என்று பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு திறமை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிந்தனைகள் துறையில் இன்று இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எல்லையை சோதித்து முன்னெடுத்துச் செல்வதால் இந்தியாவில் ஒரு துடிப்பான செயற்கை நுண்ணறிவு உணர்வு காணப்படுகிறது என்று அவர் கூறினார். உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு கண்காட்சியில் உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்றார். விவசாயத்தின் பல்வேறு அம்சங்களில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு வேளாண் சாட்பாட் பற்றி பிரதமர் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் பிரதமர் விளக்கினார்.

"இந்தியாவின் வளர்ச்சி தாரக மந்திரம் 'அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி' ன்பதாகும் என்று கூறிய பிரதமர், அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு என்ற உணர்வோடு அரசு தனது கொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். சமூக மேம்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவின் திறன்களை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள அரசு முயற்சிக்கிறது. அதே நேரத்தில் அதன் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கும் உறுதியளிக்கிறது என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் கணினி சக்திகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட விரைவில் தொடங்கப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு இயக்கம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். இது இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதோடு, விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன்களை கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம் 2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்தியாவின் தேசிய செயற்கை நுண்ணறிவு போர்ட்டல் குறித்து பேசிய பிரதமர், ஐராவத் முன்முயற்சியைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு ஆராய்ச்சி ஆய்வகம், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப் ஆகியவற்றிற்கும் பொதுவான தளம் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், புதிய எதிர்காலத்தை செதுக்க இது மிகப்பெரிய அடித்தளமாக மாறி வருகிறது என்றார். மக்களை இணைக்க முடியும் என்பதால், அது பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது மட்டுமல்லாமல், சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்கிறது. செயற்கை நுண்ணறிவை மேலும் உள்ளடக்கியதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், "இதன் வளர்ச்சிப் பயணம், மிகவும் உள்ளடக்கியதாக இருக்கும்" என்று கூறினார். கடந்த நூற்றாண்டில் தொழில்நுட்பத்திலான சமச்சீரற்ற அணுகல் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரித்தது என்று அவர் குறிப்பிட்டார். இதைத் தவிர்க்கும் வகையில், தொழில்நுட்பத்தில் ஜனநாயக மாண்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், அதை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். "செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் திசை முற்றிலும் மனித நேயம் மற்றும் ஜனநாயக மாண்புகளை உள்ளடக்கியது. செயல்திறனுடன் கூடிய உணர்ச்சிகளுக்கு இடமளிப்பதும் உணர்வுகளுடன் கூடிய திறமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நம் கையில் உள்ளது", என்று அவர் கூறினார்.

எந்தவொரு அமைப்பையும் நீடித்து நிலைத்திருக்கச் செய்வதற்கு, அதை மாறுதலுக்கு உட்படுத்தப்படக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவது முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். "செயற்கை நுண்ணறிவு மாறுதலுக்கு உட்படுத்தப்படக்கூடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதை வெளிப்படையானதாக மாற்றுவது நம் கையில் உள்ளது", என்று அவர் கூறினார். பயன்படுத்தப்படும் தரவுகளை வெளிப்படையானதாகவும் பாரபட்சமின்றியும் வைத்திருப்பது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிப் பயணத்தில் யாரும் பின்தங்கிவிட மாட்டார்கள் என்று அனைத்து நாடுகளுக்கும் உத்தரவாதம் அளிப்பது அவசியம் என்று அவர் கூறினார். தொடர்புடைய நெறிமுறை, பொருளாதார மற்றும் சமூக அம்சங்களை நிவர்த்தி செய்தால் மட்டுமே செயற்கை நுண்ணறிவு மீதான நம்பிக்கை வளரும். இதைச் செய்வதற்கான ஒரு வழி, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஒரு பகுதியாக மேம்படுத்துதலும், மறுதிறன் உருவாக்குதலும் இருக்கும் என்று அவர் கூறினார். உலகளாவிய தெற்கு நாடுகளின் தரவு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதங்கள் பல கவலைகளைத் தணிக்கும்.

செயற்கை நுண்ணறிவின் எதிர்மறையான அம்சங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், 21-ம் நூற்றாண்டில் வளர்ச்சிக்கான வலுவான கருவியாக மாறும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும், அழிவிலும் அது முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று கூறினார். டீப்ஃபேக், இணையதளப் பாதுகாப்பு, தரவு திருட்டு மற்றும் பயங்கரவாத அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு கருவிகளில் கைகோர்ப்பது போன்ற சவால்களை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு மோடி, எதிர் நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ காலத்தில் பொறுப்பான மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் முன்மொழிவை  குறிப்பிட்ட அவர், ஜி 20 புதுதில்லி பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளின் 'செயற்கை நுண்ணறிவு கொள்கைகளுக்கான' உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். பல்வேறு சர்வதேச பிரச்சனைகளில் ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளைப் போலவே ஒன்றிணைந்து செயல்படுவதையும், அதிக ஆபத்துள்ள அல்லது எல்லைப்புற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் சோதனை மற்றும் மேம்பாடு உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை பயன்பாட்டிற்கான கட்டமைப்பை உருவாக்குவதையும் அவர் வலியுறுத்தினார். நம்பிக்கை, அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பேசிய பிரதமர், இந்த திசையில் ஒரு தருணத்தைக் கூட வீணாக்க வேண்டாம் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார். "உலகளாவிய கட்டமைப்பை நாம் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். மனிதகுலத்தைப் பாதுகாக்க இதைச் செய்வது மிகவும் முக்கியம்", என்று அவர் மேலும் கூறினார்.

 

செயற்கை நுண்ணறிவு ஒரு உலகளாவிய இயக்கம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு கருவிகளை பரிசோதிப்பதற்கும், பயிற்சியளிப்பதற்கும் தரவுத் தொகுப்புகள், எந்தவொரு தயாரிப்பையும் சந்தைக்கு வெளியிடுவதற்கு முன்பு சோதனையின்  கால அளவு போன்ற செயற்கை நுண்ணறிவின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு பதிலளிக்க வேண்டிய சில கேள்விகளை அவர் பரிந்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய எந்தவொரு தகவல் அல்லது தயாரிப்பையும் தனிப்படுத்திக் காட்ட ஒரு குறியீட்டை உள்ளீடு செய்யக் கூடிய மென்பொருளை அறிமுகப்படுத்த முடியுமா என்றும் அவர் கேட்டார்.

 

அரசுடன்  தொடர்புடையவர்களுடன் உரையாற்றிய பிரதமர், ஆதார அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான பல்வேறு திட்டங்களின் தரவுகளை ஆராய்ந்து, செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயிற்றுவிக்க தரவைப் பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். செயற்கை நுண்ணறிவு கருவிகளை அவற்றின் திறன்களுக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை என வகைப்படுத்தக்கூடிய தணிக்கை பொறிமுறை இருக்க முடியுமா என்று அவர் கேட்டார். "நெகிழ்வான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஒரு நிறுவன பொறிமுறையை நாம் நிறுவ முடியுமா? தரப்படுத்தப்பட்ட உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கல்வி பாடத்திட்டத்தை கொண்டு வர முடியுமா? செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்கு மக்களைத் தயார்படுத்துவதற்கான தரநிலைகளை நாம் அமைக்க முடியுமா?", என்று பிரதமர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.

 

இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிளைமொழிகளைக் குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் உள்ளடக்கத்தை அதிகரிக்க உள்ளூர் மொழிகளில் டிஜிட்டல் சேவைகள் கிடைக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார். இனி பேசப்படாத மொழிகளுக்கு புத்துயிர் அளிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவும், சமஸ்கிருத மொழியின் வளமான அறிவுத் தளத்தையும், இலக்கியத்தையும் முன்னெடுத்துச் செல்லவும், காணாமல் போன வேத கணிதத் தொகுதிகளை மீண்டும் இணைக்கவும் அவர் பரிந்துரைத்தார்.

 

தமது உரையின் நிறைவாகப் பேசிய பிரதமர், இந்த உச்சிமாநாடு கருத்துப் பரிமாற்றத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகவும், ஒவ்வொரு பிரதிநிதிக்கும் சிறந்த கற்றல் அனுபவமாகவும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "அடுத்த இரண்டு நாட்களில், நீங்கள் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு அம்சங்களை ஆராய்வீர்கள் என்றும், இந்த முடிவுகள் செயல்படுத்தப்படும் போது, ஒரு பொறுப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க நிச்சயமாக வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில், மத்திய மின்னணு, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை தலைவர் திரு ராஜிவ் சந்திரசேகர், ஜப்பான் நாட்டின் உள்விவகாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கொள்கை ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் திரு ஹிரோஷி யோஷிதா, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் திரு எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

***

(Release ID: 1985585)

ANU/SM/IR/AG/KRS


(Release ID: 1985635) Visitor Counter : 518