பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி ராஜ்காட் அருகே உள்ள காந்தி தர்ஷனில் 10 அடி உயர மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
Posted On:
10 DEC 2023 3:42PM by PIB Chennai
டெல்லி ராஜ்காட் அருகே உள்ள காந்தி தர்ஷனில் 10 அடி உயர மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 டிசம்பர் 10, அன்று திறந்து வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில், இந்தியாவை அந்நிய ஆட்சியிலிருந்து விடுவிப்பதில் முக்கிய பங்கு வகித்த மற்றும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட தேசத் தந்தைக்கு இந்த சிலை பொருத்தமான அஞ்சலி என்று விவரித்தார்.
வலிமையான, வளமான, தூய்மையான இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் காந்தியடிகள். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான நமது அரசு, தேசப்பிதாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறது.
மக்கள் வங்கித் திட்டம், ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், பிரதமரின் ஏழைகள் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் போன்ற திட்டங்கள் அவரது யோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
மகாத்மா காந்தி ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார், அதே நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற சிறந்த தலைவர்கள் தங்கள் நாடுகளில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கான அவரது சிந்தனைகள் மற்றும் பார்வையிலிருந்து உத்வேகம் பெற்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி, பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் போன்ற புரட்சியாளர்களை பாதுகாப்பு அமைச்சர் நினைவு கூர்ந்தார், அவர்கள் விளிம்புநிலை பிரிவினரின் மேம்பாட்டிற்காக தேசபக்தி மற்றும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
"இந்த மகத்தான மனிதர்கள் அரசுக்கு வழிகாட்டியாக உள்ளனர். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ' அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்ற தொலைநோக்குப் பார்வை அவர்களின் கனவுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அமைதி, சமூக நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மாற்றத்தை கொண்டு வருவதே எங்கள் சித்தாந்தம்" என்று அவர் கூறினார்.
அரசு எப்போதும் திட்டமிட்ட முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது, இதன் விளைவாக இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். காந்தியடிகள் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல, 'ஒவ்வொருவரின் தேவைக்கும் இந்த உலகம் போதுமானது, ஆனால் அனைவரின் பேராசைக்கும் போதாது' என்று நம்பிய பொருளாதாரச் சிந்தனையாளர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நலிவடைந்த மக்களை உயர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் முயற்சியாகும். அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும்" என்று அவர் கூறினார்.
விளிம்புநிலை பிரிவினருக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், அவர்கள் இப்போது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருவதாகக் கூறினார். 10,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஃபிக்கியைப் போல நலிவடைந்த பிரிவினருக்காக அமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையை அவர் குறிப்பிட்டார்.
இது இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது என்றார். விளிம்புநிலை பிரிவினர் நாட்டின் மிகப்பெரிய ஆர்வமுள்ள வர்க்கம் என்று குறிப்பிட்ட அவர், அவர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் 'பெயர்ச்சொல்' நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த பிரிவுகளின் லட்சியங்கள் வரையறுக்கக்கூடிய ஒரு புதிய பெயர்ச்சொல் அல்லது சொற்களஞ்சியத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகாரம் பெறுவதையும், தேசத்தைக் கட்டமைப்பதில் பங்களிப்பதையும் உறுதி செய்து வருகிறது என்று திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.
"பலவீனமானவர் போன்ற சொற்கள் பெண்களை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால், இப்போது பலவீனமானவர் என்பதற்கு பதிலாக சக்தி என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. ஏனெனில் நமது பெண்களின் உண்மையான வலிமையை நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்கு வருவது மட்டுமல்ல; அவர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க ஆயுதப்படைகளில் இணைகின்றனர். பெண்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. பலவீனமான பெண்கள் முதல் பெண் சக்தி வரை ஒரு மாற்றகரமான பயணம்" என்று அவர் கூறினார்.
நாட்டை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இது மகாத்மா காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றார்.
----------
ANU/AD/BS/DL
(Release ID: 1984764)
Visitor Counter : 115