பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வான் வழியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Posted On: 07 DEC 2023 2:55PM by PIB Chennai

தமிழ்நாட்டில்  மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதித்த சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப்  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (டிசம்பர் 07, 2023)  வான்வழியாக ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த  வான்வழி ஆய்வின் போது, தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் திரு ஷிவ் தாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனுடன், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினை திரு ராஜ்நாத் சிங் தலைமைச் செயலகத்தில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

வான்வழி ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்,   பாதிப்புகளில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார். ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற மத்திய முகமைகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவுகின்றன என்றும், விரைவில் இயல்பு நிலையைக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாகவும், நிலைமையை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர், மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மாநிலப் பேரிடர் மீட்புப் பணிக்கு மத்திய அரசின் இரண்டாவது தவணைப் பங்காக ரூ. 493.60 கோடியை ஆந்திராவுக்கும், ரூ.450 கோடியை தமிழ்நாட்டிற்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். இதன் முதல் தவணைத் தொகையை  மத்திய அரசு ஏற்கெனவே இரு மாநிலங்களுக்கும் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசியப் பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் சென்னை வடிகால் திட்டத்திற்காக, ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ. 561.29 கோடி மதிப்பிலான நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதில் ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும் என்றும் திரு ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடைப்  பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் உடனிருந்தார்.

*******

ANU/SMB/PLM/KV

  

 

   

 

  


(Release ID: 1983540) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Marathi , Hindi