அணுசக்தி அமைச்சகம்
தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்த சிறிய அணு உலைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இந்தியா பரிசீலித்து வருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
06 DEC 2023 11:59AM by PIB Chennai
தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சிறிய அணு உலைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
''மின் உற்பத்திக்கு அணுசக்தி மிகவும் நம்பிக்கைக்குரிய தூய்மையான எரிசக்தி விருப்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வரும் ஆண்டுகளில் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைக்கக்கூடிய அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு உத்திக்கு உலகெங்கிலும் ஓர் உந்துதல் உள்ளது.
சிறிய திறன் கொண்ட அணுமின் நிலையங்கள், சிறிய அணு உலைகள் (எஸ்.எம்.ஆர்) என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றன. அவற்றின் தனித்துவ அம்சங்களான இலகு தன்மை, அளவிடும் தன்மை, சிறிய தடம், மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவை மூடப்படும் நிலையில் உள்ள நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலைய தளங்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஒரு விருப்பமாக முன்வைக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் குறிப்பாக பெரிய அணு உலைகளுக்கு ஏற்ற இடங்களில் சிறிய அணு உலைகளை நிறுவுவதன் மூலம் குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். புதைபடிவ எரிபொருள் நுகர்விலிருந்து விலகிச் செல்வதற்காக, பழைய புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் நிலையங்களை மறுபயன்பாடு செய்வதற்காக எஸ்.எம்.ஆர்களை நிறுவி இயக்கலாம்.
இருப்பினும், அடிப்படையாக செயல்படும் வழக்கமான, பெரிய அளவிலான அணுமின் நிலையங்களுக்கு மாற்றாக எஸ்.எம்.ஆர்.கள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தவும், அனைத்து சூழ்நிலைகளிலும் பொதுமக்கள் கதிர் வீச்சுக்கு உட்படுவதை தவிர்க்கவும் கடுமையான ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு இயக்கப்படுகின்றன.
எஸ்.எம்.ஆர்களின் தொழில்நுட்ப-வணிக அம்சங்கள் இன்னும் உலக அளவில் ஆரம்ப கட்டங்களில் உள்ளன, மேலும் அதன் பெரிய அளவிலான பயன்பாடு சர்வதேச அணுசக்தி முகமையின் உலகளாவிய ஒழுங்குமுறை ஒத்திசைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்ததாகும்.
குறிப்பாக அவசரகால திட்டமிடல் வளையம், பொதுமக்களின் ஏற்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு. சிறிய அணு உலைகள்தொழில்துறை கார்பனேற்றத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாகும்,
குறிப்பாக நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின்சாரம் தேவைப்படும் இடங்களில். தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்காக, எஸ்.எம்.ஆரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருகிறது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்(தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.
*******
(Release ID: 1982958).
ANU/SMB/BS/KV
(Release ID: 1983054)
Visitor Counter : 152