மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

புதிய இந்தியா வாய்ப்புகளை ஜனநாயகமயமாக்கியுள்ளதுடன் வெற்றி மற்றும் வளத்துக்கான சூழலை உருவாக்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்

Posted On: 02 DEC 2023 6:45PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், தமது கேரள மாநிலப் பயணத்தின் 2-வது நாளில், கோழிக்கோட்டில் உள்ள நாளந்தா கலையரங்கத்தில் பட்டயக் கணக்கர் பயிற்சி (சிஏ) மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, "நுண்ணறிவு - தெரியாததைக் கண்டுபிடித்தல்!" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டதாகவும்.

இதில் பேசிய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், இளம் இந்தியர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க புதிய இந்தியா தொழில்நுட்பத்தை  பயன்படுத்துவதாகக் கூறினார்.  ஒரு அமைச்சராக, நாடு முழுவதும் பயணம் செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடி வருவதாக அவர் தெரிவித்தார்.  இந்த தலைமுறையில் உள்ள இளம் இந்தியர்கள் சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் என தாம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.  சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு முன்னெப்போதும் இல்லாத அதிக வாய்ப்புகளை இவர்கள் பெற்றுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

இந்த பத்து ஆண்டுகளில் வாய்ப்புகள் ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1.2 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன என்று அவர் கூறினார். வெற்றி பெற ஒரு வலுவான பின்புலம் தேவை என்ற நிலை இப்போது இல்லை என்றும் புதிய இந்தியா, திறமைக்கு வெற்றி என்ற சூழலை உருவாக்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.

டிஜிட்டல் திறன்களை ஏற்று சிஏ மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பட்டங்கள் மற்றும் அறிவுடன் திறன்களின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

விரைவான டிஜிட்டல்மயமாக்கல், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னெப்போதும் இல்லாத மின்னணு மயமாக்கல் ஆகியவை கொவிட் பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் அதிகரித்துள்ளன என்று அவர் கூறினார். இந்த திறன்களை தற்போதுள்ள கணக்கு பதிவியல் அறிவோடு இணைப்பது சிஏ மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும் என்று அவர் தெரிவித்தார். இன்று ஒவ்வொரு பட்டயக் கணக்கரும் தங்கள் சொந்த வெற்றிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசப் பொருளாதாரத்திற்கும் ஊக்க சக்திகளாக உள்ளனர் என்று  மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

 

*******

ANU/AD/PLM/DL



(Release ID: 1981988) Visitor Counter : 56


Read this release in: Hindi , English , Urdu , Marathi