வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

30-ன் சக்தி இந்தியாவை இயக்குகிறது - 30 ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும் கனவு: திரு கோயல்

Posted On: 01 DEC 2023 2:06PM by PIB Chennai

30 வயதிற்கு உட்பட்டவர்களின் முயற்சியால் 30 ஆண்டுகளுக்குள் நமது பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும் கனவு இன்று இந்தியாவை இயக்குகிறது. இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பஹ்ரைன் கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார். முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஓர் உலகளாவிய பிரகாசமான இடமாகும். அங்கு நமது சந்தை மூலதனம் 2 நாட்களுக்கு முன் 4 டிரில்லியன் டாலரைத் தொட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 உலக நாடுகளுடன் ஈடுஇணையற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்தியா செயல்படுகிறது. ஆணவத்துடன் அல்ல என்று திரு கோயல் சுட்டிக்காட்டினார். இந்தியா 10 ஆண்டுகளில் துறைமுகத் திறன் இரட்டிப்பாக்கப்பட்ட ஒரு பொருளாதாரமாகும். அங்கு வணிக விமான நிலையங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 74-ல் இருந்து 150 ஆக இரட்டிப்பாகியுள்ளன. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 225 ஆக மேலும் வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு நவீன உயர்தர ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளின் பெரிய கட்டமைப்புக்குத்  துணையாக 140 புதிய உள்நாட்டு நீர்வழிகள் தொடங்கப்பட்டுள்ளன. உலகின் பிற பகுதிகளில் நாம் காணும் அழகான உள்கட்டமைப்பு இப்போது இந்தியாவில் உருவாக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பார்வையாளர்கள் தில்லியில் வந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்க்க வேண்டும் அல்லது உயர்தர சர்வதேசக் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரத் மண்டபத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வளமான, துடிப்பான பொருளாதாரம், இந்திய மக்களை கவனித்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்கும் ஓர் அமைப்பு, எளிதான வாழ்க்கை வாய்ப்புகளுடன் கூடிய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் காணுமாறு அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். வளர்ச்சி, நல்ல நிர்வாகம், மன உறுதி, உண்மையான நம்பிக்கை, நிலைத்தன்மையைப் பிரதிபலிக்கும் பசுமைத் தொழில்நுட்பங்கள் ஆகிய 5 ஜி திட்டங்களில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பஹ்ரைனில் உள்ள இந்தியர்களின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்முறை அமைப்பாக பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர் என்று திரு கோயல் கூறினார். பஹ்ரைனின் வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள், உயர்ந்த நேர்மை, உயர்ந்த ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றில் அவர்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் கூறினார். பட்டயக் கணக்காளர்கள் உலகெங்கிலும் பஹ்ரைனிலும் இந்தியாவின் தூதர்களாக உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். அவர்கள் செய்யும் அற்புதமான பணிகளுக்காகவும்,  அவர்களின் பங்களிப்பிற்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பஹ்ரைனுக்கான நமது தூதர்கள் என்ற முறையில், அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பு, ஒருமைப்பாடு, கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால் இந்தியாவை பெருமைப்படுத்துகிறார்கள் என்றார். தலைமைத்துவம், நிலைத்தன்மை, புவிசார் அரசியல், மனித ஆற்றல், ஆரோக்கியமான வாழ்க்கை - சமகால விஷயங்கள் மற்றும் அவசியமான விஷயங்கள் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்ததற்காகவும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்களைப் பாராட்டினார்.

***

ANU/SMB/BS/AG/KPG

 


(Release ID: 1981528) Visitor Counter : 90