பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் (டி.எல்.சி) தொர்பான இரண்டாம் கட்ட இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக ஓய்வூதியர் நலத் துறை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நலச் சங்கங்களுக்கு மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 DEC 2023 12:17PM by PIB Chennai
நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தின் இரண்டாம் கட்டம் 2023, நவம்பர் 1 முதல் 30 வரை நடைபெற்றது. இந்த இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததற்காக மத்தியப் பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியர் நலத் துறை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நலச் சங்கங்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் நடைமுறைகளின் மூலம் அதிகாரமளிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் நடத்தப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ஓய்வூதியர்களின் நலனை மேம்படுத்துவதில் அரசு மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இந்த இரண்டாம் கட்ட இயக்கம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய இந்த இயக்கம் நவம்பர் 1 முதல் 30 வரை 100 நகரங்களில் 597 இடங்களில் நடைபெற்றது. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு 38.47 லட்சம், மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு 16.15 லட்சம், ஈ.பி.எஃப்.ஓ ஓய்வூதியர்களுக்கு 50.91 லட்சம் உட்பட மொத்தம் 1.15 கோடி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியர் நலத் துறை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நலச் சங்கங்கள், தனித்துவ அடையாள ஆணையம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
இந்த இயக்கத்தின் மூலம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் நடைமுறை மத்திய அரசு ஓய்வூதியதாரர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 38 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இதுவரை டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முக அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களின் எண்ணிக்கை 9.60 லட்சம் ஆகும். மார்ச் 2024-ம் ஆண்டுக்குள், மொத்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பு 50 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு கணிசமாக பயனளிக்கின்றன.
90 வயதுக்கு மேற்பட்ட 24,000 க்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் நடைமுறையைப் பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் நடைமுறையில் முன்னணி மாநிலங்களாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளன. இந்த மாநிலங்களில் முறையே 5.07 லட்சம், 4.55 லட்சம் மற்றும் 2.65 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் உருவாக்கத்திற்கான முன்னணி வங்கிகளாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை உள்ளன.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை, ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக எடுத்துள்ள முயற்சிகளில் நாடு தழுவிய இரண்டாம் கட்ட டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் மற்றொரு மைல்கல் ஆகும்.
-----
ANU/SMB/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1981523)
आगंतुक पटल : 155