எரிசக்தி அமைச்சகம்
கீழ்சுபன்சிறி நீர்மின் திட்டத்தை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பார்வையிட்டார்
Posted On:
28 NOV 2023 10:40AM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசம் / அசாமில் அமைந்துள்ள 2000 மெகாவாட் கீழ் சுபன்சிறி நீர்மின் திட்டத்தை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் நேற்று, (நவம்பர் 27, 2023) பார்வையிட்டார். இந்தத் திட்டத்தின் கட்டுமான இடங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், மின்துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அதில் திட்டத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. என்.எச்.பி.சி அதிகாரிகள் மற்றும் முக்கியப் பணிகளின் ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதிகளிடையே உரையாற்றிய திரு சிங், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க அனைவரும் அதிகபட்ச ஆர்வத்துடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.
இந்தத் திட்டம் குறித்து திருப்தி தெரிவித்த அமைச்சர், 24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாத்தியமில்லை என்பதால் நீர்மின் திட்டங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றார். இந்தியாவின் நீர் மின்சக்தி திறன் அதிகரித்து வருவதாக ஊடகங்களிடம் தெரிவித்த அமைச்சர், சுபன்சிறி என்ற பெரிய திட்டத்தைத் தவிர, அருணாச்சலப் பிரதேசத்தில் 13,000 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திறன் கொண்ட 13 திட்டங்களுக்காக அருணாச்சலப் பிரதேச அரசு மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றார். இந்தத் திட்டங்களால் மாநிலத்தில் சுமார் ரூ.1.4 லட்சம் கோடி முதலீடுகள் வரும், இதன் விளைவாக தனிநபர் வருமானம் நான்கு மடங்காக உயரும். தேசம் தூய்மையான சக்தியைப் பெறும்" என்றார். இதேபோல், ஜம்மு - காஷ்மீரில், ஐந்து நீர்மின் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன; எனவே, ஜம்மு காஷ்மீரில் நமது நீர் மின்சக்தியும் முன்னேறி வருகிறது, நிறைய முதலீடுகள் வருகின்றன என்று திரு சிங் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நமது மின் தேவை 20% அதிகரித்துள்ளது. நித்தி ஆயோக்கின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு நமது பொருளாதாரம் 7.5% ஆக வளரும் என்பதால், மின்சாரத் தேவை இந்த விகிதத்தில் வளர்ந்து கொண்டே இருக்கும். கடந்த 2013-ம் ஆண்டு 1.35 லட்சம் மெகாவாட்டாக இருந்த மின்தேவை, இன்று 2.31 லட்சம் மெகாவாட்டாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நமது மின்தேவை இரட்டிப்பாகும். இன்று நமது மொத்த நுகர்வு 1,600 பில்லியன் அலகுகள் ஆகும், இது சுமார் 3,000 பில்லியன் அலகுகளாக மாறும். எனவே நமது மின்தேவையின் வளர்ச்சியைப் போலவே விரைவாக மின் திறனையும் சேர்ப்பதே நமது சவாலாகும்" என்றார்.
கீழ் சுபன்சிறி நீர்மின் திட்டத்தை அமைச்சர் பார்வையிட்டபோது, மத்திய மின்துறை செயலாளர் பங்கஜ் அகர்வால்; என்.எச்.பி.சி., தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு ஆர்.கே.விஷ்னோய்; மின்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (ஹைட்ரோ) திரு முகமது அப்சல்; என்.எச்.பி.சி இயக்குநர் (திட்டங்கள்) திரு பிஸ்வஜித் பாசு; என்.எச்.பி.சி இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு ஆர்.கே. சௌத்ரி,கீழ் சுபன்சிறி திட்டத் தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
***
(Release ID: 1980282)
ANU/SMB/PKV/RR
(Release ID: 1980321)
Visitor Counter : 134