குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

Posted On: 20 NOV 2023 2:50PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் பாரிபடாவில் இன்று (நவம்பர் 20, 2023) நடைபெற்ற அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், சந்தாலி மொழி, இலக்கியத்திற்குப் பங்களிக்கும் எழுத்தாளர்களை, ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டினார். அனைத்திந்திய சந்தாலி எழுத்தாளர் சங்கம் 1988-ம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து சந்தாலி மொழியை ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 2003 டிசம்பர் 22, அன்று அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பின்னர், அரசு, அரசு சாரா துறைகளில் சந்தாலி மொழியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சந்தாலி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது பல இலக்கியவாதிகள் நமது தேசிய இயக்கத்திற்கு வழி காட்டினார்கள் என்று கூறிய அவர் எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்கள் எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பழங்குடி சமூக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கியமான பணி என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ச்சியான விழிப்புணர்வின் மூலம் மட்டுமே வலுவான, விழிப்புடன் கூடிய சமூகத்தை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

மொழியும், இலக்கியமும் நாட்டை  ஒன்றிணைக்கும் நுட்பமான இழைகள் என்றும், மொழிபெயர்ப்புகள் மூலம் பல்வேறு மொழிகளுக்கு இடையே விரிவான பரிமாற்றத்தால் இலக்கியம் வளப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். சந்தாலி மொழி வாசகர்களுக்கும் மொழிபெயர்ப்பு மூலம் பிற மொழி இலக்கியங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சந்தாலி இலக்கியம் பிற மொழி வாசகர்களைச் சென்றடைய இது போன்ற முயற்சிகள் தேவை என்பதை சுட்டிக் காட்டினார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே சுய ஆய்வு செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் நல்ல வாசகராக முடியும் என்று அவர் கூறினார். பொழுதுபோக்கு மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய குழந்தை இலக்கியங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். சந்தாலி இலக்கியத்தில் மட்டுமல்ல, அனைத்து இந்திய மொழிகளிலும் சுவாரஸ்யமான குழந்தை இலக்கியங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

***

ANU/SMB/IR/AG/KPG

 


(Release ID: 1978271) Visitor Counter : 93