வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-எத்தியோப்பியா கூட்டு வர்த்தகக் குழுவின் 6வது அமர்வு எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் வெற்றிகரமாக நடைபெற்றது

Posted On: 08 NOV 2023 4:06PM by PIB Chennai

இந்தியா-எத்தியோப்பியா கூட்டு வர்த்தகக் குழுவின் 6-வது அமர்வு 2023 நவம்பர் 6 முதல் 7 வரை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் திருமதி பிரியா பி.நாயர் மற்றும் எத்தியோப்பியாவின் வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் சர்வதேச மற்றும் பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பின் தலைமை நிர்வாகி திரு டேஜஸ் முலுகேட்டா ஆகியோர் தலைமை தாங்கினர். எத்தியோப்பியாவுக்கான இந்தியத் தூதர் திரு. ராபர்ட் ஷெட்கின்டோங் மற்றும் இரு தரப்பைச் சேர்ந்த பிற உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இருதரப்பு வர்த்தகத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து பிரச்சினைகளையும் விரைவாகத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டிற்கு உதவவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். எத்தியோப்பியாவின் எத்ஸ்விச் வங்கியுடன் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டணத்தில் (யுபிஐ) ஒத்துழைக்க எத்தியோப்பிய தரப்பிற்கு இந்திய தரப்பு அழைப்பு விடுத்தது. மேலும், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், அந்நிய செலாவணியை சேமிக்கவும்  உதவும் உள்ளூர் கரன்சியில் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எத்தியோப்பியாவை இந்திய தரப்பு வலியுறுத்தியது.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவான மறுஆய்வு மேற்கொண்டனர். இந்த உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக இருதரப்பினரும் குறிப்பிட்டனர். இதற்காக, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான பல பகுதிகளை இரு தரப்பினரும் அடையாளம் கண்டனர். சுகாதாரம் மற்றும் மருந்துகள், ஆட்டோமொபைல்ஸ், ஜவுளி, உள்கட்டமைப்பு திட்டங்கள், உணவு மற்றும் வேளாண் பதப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். தரப்படுத்தல் மற்றும் தர உத்தரவாதம் மற்றும் சுங்க நடைமுறைத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான விவாதங்களின் முன்னேற்றத்தை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். மேலும் அவற்றை விரைவாக முடிக்க அவர்கள்  ஒப்புக்கொண்டனர். இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வதை விரைவுபடுத்துமாறு எத்தியோப்பியத் தரப்பை இந்தியத் தரப்பு கேட்டுக்கொண்டது.

எத்தியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயக குடியரசு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இது 2021-22ஆம் ஆண்டில் 6.4% வளர்ச்சியுடன் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23 ஆம் ஆண்டில் 642.59 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. எத்தியோப்பியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. எத்தியோப்பியாவில் தற்போதுள்ள 5 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய முதலீட்டுடன், முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களும் அடங்கும். வேளாண்மை மற்றும் பூக்கள் வளர்ப்பு, பொறியியல், பிளாஸ்டிக், உற்பத்தி, பருத்தி மற்றும் ஜவுளி, நீர் மேலாண்மை, மருந்துகள் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

***

ANU/PKV/IR/RS/KPG

 


(Release ID: 1975682) Visitor Counter : 129