கூட்டுறவு அமைச்சகம்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, புதுதில்லியில் தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (என்சிஓஎல்) நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இயற்கை வேளாண் விளைபொருட்களை ஊக்குவித்தல் குறித்த தேசிய கருத்தரங்கில் நவம்பர் 8-ம் தேதி உரையாற்றுகிறார்

Posted On: 06 NOV 2023 3:51PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (என்சிஓஎல்) ஏற்பாடு செய்துள்ள இயற்கை வேளாண் (கரிம) விளைபொருட்களை ஊக்குவித்தல் குறித்து புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐ.சி.ஏ.ஆர்) மாநாட்டு மையத்தில் நடைபெறும் தேசிய கருத்தரங்கில் 08 நவம்பர் 2023 புதன்கிழமை உரையாற்றுகிறார். என்சிஓஎல்-ன் சின்னம், இணையதளம் மற்றும் கையேட்டையும் திரு அமித்ஷா வெளியிட்டுத் தொடங்கி வைப்பார்.  இந்த ஒரு நாள் கருத்தரங்கில், என்சிஓஎல் நிறுவனத்தின் நோக்கங்கள், இயற்கை வேளாண் விளைபொருட்களின் முக்கியத்துவம், சிறு, குறு விவசாயிகளின் மேம்பாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பங்கு போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இக்கருத்தரங்கில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்.

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஆர்கானிக் எனப்படும் இயற்கை விளை பொருட்களில் இந்தியாவை உலகளாவிய முன்னோடியாக மாற்றுவதற்காக தேசிய அளவிலான கூட்டுறவு சங்கமாக என்சிஓஎல் நிறுவப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழும், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் திறமையான வழிகாட்டுதலின் கீழும், கூட்டுறவு அமைச்சகம் கடந்த 27 மாதங்களில் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த 54 முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

இயற்கை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு சந்தைக்கு அணுகலை வழங்குவது மற்றும் விளைபொருட்களின் மீதான வருவாயை அதிகரிப்பதை என்சிஓஎல் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கரிமப் பொருட்களின் முழு விநியோகச் சங்கிலியையும் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் இணைந்து நிர்வகிப்பதன் மூலம் என்சிஓஎல் ஒரே குடையின் கீழ் சேவை வழங்கும் அமைப்பாக செயல்படும். கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கைப் பொருட்களை ஒருங்கிணைத்தல், பிராண்டிங் செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை இது மேற்கொள்ளும். எந்தவொரு கூட்டுறவு சங்கமும் என்சிஓஎல் உறுப்பினராகலாம். தற்போதைய நிலவரப்படி, சுமார் 2,000 கூட்டுறவு சங்கங்கள் ஏற்கனவே என்சிஓஎல் உறுப்பினராகிவிட்டன அல்லது அதன் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளன.

**********

ANU/PKV/PLM/KV



(Release ID: 1975064) Visitor Counter : 108