பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் உரையாற்றினார்

"விளையாட்டில் தோல்வி என்பது இல்லை - வெற்றி அல்லது கற்றுக் கொள்ளுதல் மட்டுமே உண்டு"

"உங்கள் வெற்றி முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதுடன் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வை ஏற்படுத்தியுள்ளது"

"இப்போதெல்லாம், விளையாட்டும் ஒரு தொழில்முறையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது"

"மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் வெற்றி பெறுவது என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகம் அளிக்கும் விசயம் அல்ல - அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம்"

"முன்பு அரசுக்காக விளையாட்டு வீரர்கள் என்ற நிலை இருந்த சூழலில் இப்போது 'விளையாட்டு வீரர்களுக்கான அரசாங்கம்' என்ற நிலை உருவாகியுள்ளது”

"அரசின் இன்றைய அணுகுமுறை விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டது"

"ஆற்றலுடன் இணைந்த தளம் செயல்திறனை வெளிப்படுத்தும் – ஆற்றல் என்பது தேவையான தளத்தைப் பெறும்போது செயல்திறன் ஊக்கம் பெறுகிறது"

"ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனிதக் கனவுகளின் வெற்றி"

Posted On: 01 NOV 2023 6:30PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும், எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கவும் பிரதமரின் ஒரு முயற்சியாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது.

 

பாரா விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், அவர்களைச் சந்திக்கவும், அவர்களின் அனுபவங்களைக் கேட்கவும் ஆவலாக இருப்பதாகக் கூறினார். வீரர்கள் இங்கு வரும்போதெல்லாம் புதிய நம்பிக்கைகளையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வருவதாகப் பிரதமர் கூறினார். தாம் இங்கு வந்திருப்பது ஒரு விஷயத்திற்காக மட்டுமே என்றும், அது பாரா தடகள வீரர்களின் வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எனவும் அவர் தெரிவித்தார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் முன்னேற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக அவர் கூறினார். இந்திய வீரர்களின் பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும்  குடும்பத்தினரையும் பாராட்டினார். நாட்டின் 140 கோடி மக்கள் சார்பாக அவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

 

விளையாட்டுகள் மிகவும் போட்டித்தன்மை கொண்டவை எனக் கூறிய பிரதமர், விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது தங்களுக்குள் ஏற்படும் போட்டி குறித்து எடுத்துரைத்தார். விளையாட்டு வீரர்களின் மிக உயர்ந்த பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். வீரர்கள் அனைவரும் இங்கிருந்து சென்று சிலர் வெற்றியாளர்களாக திரும்பி வந்துள்ளனர் என்றும் மேலும் சிலர் கற்றுக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் யாரும் தோல்வியடைந்து திரும்பி வரவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். விளையாட்டில் தோல்வி என்பது இல்லை எனவும் வெற்றி அல்லது கற்றுக் கொள்ளுதல் மட்டுமே உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 140 கோடி மக்களிடையே இந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாரா தடகள வீரர்களுக்கு மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். இந்த வீரர்களின் வெற்றி முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதுடன் மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

 

இந்த 111 பதக்கங்கள் வெறும் எண்கள் அல்ல எனவும் 140 கோடி மக்களின் கனவுகள் என்றும் அவர் கூறினார். இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும், தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் பதக்கப் பட்டியலில் இந்தியா 15 வது இடத்திலிருந்து முதல் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

கடந்த சில மாதங்களில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் பெற்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி என்றார். ஆகஸ்ட் மாதம் புத்தபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் அணியின் முதல் தங்கப் பதக்கம், டேபிள் டென்னிஸில் பெண்கள் இணையின் முதல் பதக்கம், ஆண்கள் பேட்மிண்டன் அணியின் தாமஸ் கோப்பை வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கப் பதக்கங்கள் உள்பட 107 பதக்கங்கள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான பதக்க எண்ணிக்கை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

 

பாரா விளையாட்டுகளின் சிறப்புத் தன்மையை எடுத்துரைத்த பிரதமர், மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு வெற்றி என்பது விளையாட்டில் மட்டும் உத்வேகமளிக்கும் விசயம் அல்ல என்றும் அது வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் விசயம் என்றும் குறிப்பிட்டார். விரக்தியின் பிடியில் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் செயல்திறன் எந்தவொரு நபரையும் மீண்டும் உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். விளையாட்டு சமூகமாக இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், விளையாட்டு கலாச்சாரம் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.  2030-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.

 

விளையாட்டில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்று கூறிய பிரதமர், வீரர்கள் தங்கள் சொந்த திறன்களை நம்புகிறார்கள் என்றார். ஆனால் ஒரு சிறிய உதவி பன்மடங்கு பலன்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். குடும்பங்கள், சமூகம், நிறுவனங்கள் மற்றும் பிற ஆதரவுச்சூழல்கள் இணைந்து கூட்டு ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 

சமூகம் முந்தைய காலங்களைப் போலல்லாமல், இப்போது விளையாட்டை ஒரு தொழில்முறையாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசுக்காக விளையாட்டு வீரர்கள்' என்ற நிலை மாறி விளையாட்டு வீரர்களுக்கான அரசு என்ற அணுகுமுறையில் தற்போதைய அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் கனவுகளை அரசு அங்கீகரிப்பதை, அதன் கொள்கைகள், அணுகுமுறை மற்றும் சிந்தனையில் காணலாம் என்று பிரதமர் கூறினார். முந்தைய அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பு, பயிற்சி வசதிகள் மற்றும் பண உதவி போன்றவற்றை முறையாக வழங்காததால் வீரர்கள் வெற்றியை எட்டுவதில் பெரும் தடை ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில், நாடு பழைய முறைகள் மற்றும் பழைய அணுகுமுறையிலிருந்து மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். அரசின் இன்றைய அணுகுமுறை விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டது என்று கூறிய பிரதமர், அது தடைகளை அகற்றி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை சுட்டிக் காட்டினார். ஆற்றலுடன் இணைந்த தளம் செயல்திறனை வெளிப்படுத்தும்  என்று அவர் கூறினார். ஆற்றல் என்பது தேவையான தளத்தைப் பெறும்போது செயல்திறன் ஊக்கம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்களை அடித்தள நிலையில் இருந்து அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்ப்பதன் மூலம் வெற்றிக்கு வழிவகுக்கும் கேலோ இந்தியா திட்டத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். டாப்ஸ் எனப்படும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்ட முன்முயற்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

 

சிரமங்களை எதிர்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் மீள்திறன் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று பிரதமர் கூறினார். வீரர்கள் இதுவரை கடக்க முடியாத தடைகளை கடந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்த உத்வேகம் எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் பாராட்டினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாரா தடகள வீரர்களிடமிருந்து உத்வேகம் பெறுகிறார்கள் என அவர் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டியிலும் இந்த வீரர்கள் பங்கேற்பது மனித கனவுகளின் வெற்றி என அவர் குறிப்பிட்டார். இந்த வீரர்கள் கடினமாக உழைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அரசு விளையாட்டு வீரர்களுடன் உள்ளது எனவும் நாடும் வீரர்களுடன் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

 

நாம் நமது பெருமைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் எந்த இடத்திலும் நின்று விடாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார். நாம் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறியுள்ள சூழலில் அடுத்த பத்து ஆண்டிற்குள் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக முன்னேறுவோம் என அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டில் இந்த நாடு வளரந்த இந்தியாவாக மாறும் என உறுதியாகக் கூறுவதாகத் தெரிவித்துப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இந்திய பாராலிம்பிக் குழுத் தலைவர் திருமதி தீபா மாலிக், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திரு நிசித் பிரமானிக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 29 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 111 பதக்கங்களை வென்றது. அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மொத்த பதக்க எண்ணிக்கை முந்தைய 2018-ம் ஆண்டு செயல்திறனைவிட 54 சதவீதம் அதிகமாகும்.  29 தங்கப் பதக்கங்களை இப்போட்டியில் இந்தியா வென்றுள்ளது. இது 2018-ல் வென்றதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

 

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய பாராலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

 

Release ID: 1973880

 

AD/PLM/KRS



(Release ID: 1973937) Visitor Counter : 110