தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பதிப்பகப் பிரிவு, 75-வது ஃபிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளது

Posted On: 20 OCT 2023 12:45PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பதிப்பகப் பிரிவு, 75-வது பிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. 18.10.2023 அன்று பிராங்க்ஃபர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரக வணிகப் பிரிவைச் சேர்ந்த திரு வினோத் குமார் வெளியீட்டுப் பிரிவின் அரங்கத்தைத் திறந்து வைத்தார். உலகளாவிய வெளியீட்டாளர்களும் பார்வையாளர்களும் பங்கேற்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான பிராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி, அக்டோபர் 18 முதல் 22 வரை ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெறுகிறது.

காலத்தால் அழியாத இலக்கிய நூல்களை வழங்கும் வெளியீட்டுப் பிரிவு, கலை, கலாச்சாரம், வரலாறு, சினிமா, ஆளுமைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள், நிலமும் மக்களும், காந்திய இலக்கியம், சிறுவர் இலக்கியம் போன்ற பல்வேறு பிரிவுகளில் வளமான நூல்களின் தொகுப்பை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தொடர்பான நூல்கள் மற்றும் பிரதமரின் உரைகள் தொடர்பான நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, யோஜனா, குருஷேத்ரா, ஆஜ்கல் மற்றும் பால் பாரதி போன்ற பிரிவின் பிரபலமான மற்றும் பரவலாக அறியப்பட்ட பத்திரிகைகளும் கண்காட்சி அரங்கத்தில் இடம்பெற்றுள்ளன.  

பதிப்பகப் பிரிவு தமது வெளியீடுகளை அரங்கம் எண் பி 35/34, அறை எண் 6.0 என்ற முகவரியில் ஃபிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

வெளியீட்டுப் பிரிவு பற்றி:

வெளியீட்டுப் பிரிவு இயக்குநரகம் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் புத்தகங்கள் மற்றும் இதழ்களின் களஞ்சியமாகும். 1941 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வெளியீட்டுப் பிரிவு, வளர்ச்சி, இந்திய வரலாறு, கலாச்சாரம், இலக்கியம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் பல்வேறு மொழிகளில் நூல்கள் மற்றும் இதழ்களை வழங்கும் இந்திய அரசின் முதன்மையான பதிப்பகமாகும். இப்பிரிவானது வாசகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளதுடன் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மைக்காகவும் நியாயமான விலைக்காகவும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவின் முதன்மை வெளியீடுகளில் யோஜனா, குருஷேத்ரா மற்றும் ஆஜ்கல் போன்ற பிரபலமான மாதாந்திர இதழ்களும், வாராந்திர வேலைவாய்ப்பு செய்தித்தாள்களான 'வேலைவாய்ப்பு செய்திகள்' (Employment News) மற்றும் 'ரோஸ்கர் சமாச்சார்' ஆகியவையும் அடங்கும். இது தவிர, பதிப்பகப் பிரிவு அரசின் மதிப்புமிக்க வருடாந்திர புத்தகமான 'இந்தியா இயர் புக்'-கையும் வெளியிடுகிறது.

****

SMB/PLM/KPG


(Release ID: 1969350) Visitor Counter : 144