குடியரசுத் தலைவர் செயலகம்

பீகாரின் நான்காவது வேளாண் திட்டத்தைக் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்

Posted On: 18 OCT 2023 2:50PM by PIB Chennai

பீகாரின் நான்காவது வேளாண் திட்டத்தைக் (2023-2028) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 18, 2023) பாட்னாவில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , பீகாரின் நாட்டுப்புற கலாச்சாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய பகுதியாகும். இது பீகார் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள், மாநிலத்தின் தொழிலாளர்களில் ஏறத்தாழ பாதி பேருக்கு வேலை வழங்குவது மட்டுமின்றி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. எனவே, விவசாயத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். பீகார் அரசு 2008 ஆம் ஆண்டு முதல் வேளாண் திட்டத்தை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கடந்த மூன்று வேளாண் திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக, மாநிலத்தில் நெல், கோதுமை மற்றும் மக்காச்சோளத்தின் உற்பத்தித்திறன் சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். காளான், தேன், மக்கானா மற்றும் மீன் உற்பத்தியில் பீகார் முன்னணி மாநிலமாக மாறியுள்ளது. நான்காவது வேளாண் திட்டத்தை அறிமுகம் செய்வது இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கிய  நடவடிக்கை ஆகும் என்று அவர் கூறினார்.

பீகார் விவசாயிகள், விவசாயத்தில் புதிய சோதனைகளை மேற்கொள்வதற்கு பெயர் பெற்றவர்கள். அதனால்தான் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவர் நாளந்தாவின் விவசாயிகளை "விஞ்ஞானிகளை விட பெரியவர்கள்" என்று அழைத்தார். நவீன விவசாய முறைகளைப் பின்பற்றிய போதும், பீகார் விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் தானிய வகைகளை பாதுகாத்து வருவது குறித்து  குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் ஒத்திசைவுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

விவசாய செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இயற்கை விவசாயம் உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.  இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கங்கைக் கரையோர மாவட்டங்களில் இயற்கை வழித்தடத்தை பீகார் அரசு உருவாக்கியிருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பீகார் நீர் வளம் நிறைந்த மாநிலமாகக் கருதப்படுகிறது, ஆறுகள் மற்றும் குளங்கள் இந்த மாநிலத்தின் அடையாளமாக உள்ளன. இந்த அடையாளத்தைப் பராமரிக்க, தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.  தற்போதைய விவசாய முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கலாம், தண்ணீர் வளம் சுரண்டப்படுவதைக் குறைக்கலாம், மண் வளத்தைப் பாதுகாக்கலாம், அனைத்திற்கும் மேலாக, சமச்சீரான உணவை மக்களுக்கு வழங்க முடியும்.

வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதில் பீகாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று கூறிய குடியரசுத் தலைவர், இந்தக் கனவை நனவாக்க, குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் என்றார். பீகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற முழுமையான வளர்ச்சியைத் தவிர வேறு வழியில்லை என்றும், கொள்கை வகுப்பவர்களும், பீகார் மக்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

***

ANU/PKV/SMB/AG/KPG



(Release ID: 1968762) Visitor Counter : 98