உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளுடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது; திரு பிரகலாத் சிங் பட்டேல்
Posted On:
18 OCT 2023 12:24PM by PIB Chennai
உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா பல முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது பதிப்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், உலக உணவு இந்தியா என்பது உலகளாவிய இத்துறைசார்ந்தோர் முன் உணவுத் துறையின் திறனை காட்டுவதற்கான ஒரு முயற்சியாகும் என்று கூறினார். 11 மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தன்னாட்சி அமைப்புகள் இதில் பங்கேற்பதால், இந்த நிகழ்ச்சி முழு அரசு ஒத்துழைப்பு அணுகுமுறைக்கும் ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 16 நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும், மற்ற நாட்களில் மேலும் உணவுத்துறைச் சார்ந்தோர் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் திரு படேல் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விரிவான சர்வதேச பிரதிநிதித்துவம் குறித்து அமைச்சர் மேலும் விளக்கினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கொள்முதல் செய்வோர் சுமார் 1000 பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
உலகளாவிய மிகப்பெரிய உணவு நிகழ்வான உலக உணவு இந்தியா 2023-ன் இரண்டாவது கூட்டம், உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் 2023 நவம்பர் 3 முதல் 5 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 3 ஆம் தேதி பிரகதி மைதானத்தில் உள்ள புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நவம்பர் 5-ஆம் தேதி நிறைவுரையாற்றுகிறார்.
உலகின் மிக நீளமான தோசை என்ற கின்னஸ் சாதனையை உருவாக்கும் முயற்சியும் நடைபெற உள்ளது. 60 முதல் 80 சமையல்காரர்கள் ஒன்றிணைந்து 100 அடி நீளத்தில் சிறுதானிய தோசையை உருவாக்க உள்ளனர், இது குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சான்றாகும்.
சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ஐ கொண்டாடும் வகையில், 50,000 டெட்ரா பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
***
ANU/PKV/IR/RS/KPG
(Release ID: 1968742)
Visitor Counter : 136