வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீடித்தத் தன்மைக்கு முன்னுரிமை அளியுங்கள்: தூய்மையான,பசுமையான விழாக்களைக் கொண்டாடுங்கள்

Posted On: 17 OCT 2023 1:38PM by PIB Chennai

உற்சாகமான கொண்டாட்டங்கள் மீண்டும் தொடங்கி இருக்கும் நேரம் இது. விநாயகர் சதுர்த்தி முதல் தசரா வரை, தீபாவளி முதல் சத் பூஜை வரை, இந்த பண்டிகைகள் ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. தூய்மை என்ற கருத்தாக்கத்திற்கு ஏற்ற வகையில், நடத்தை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதில் திருவிழாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சுற்றுச்சூழலுடன் நல்லிணக்கத்தை பேணுவதற்காக நிலையான நடைமுறைகளை வலியுறுத்தும் பல திருவிழாக்களும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது மூங்கில் பந்தல்களை அமைப்பதன் மூலம் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கழிவுகள் இல்லாத கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும், பிளாஸ்டிக் இல்லாத கொண்டாட்டங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்த முன்முயற்சிகள் நிலையான நடைமுறைகளை உறுதி செய்கின்றன. தூய்மையான பசுமை விழாக்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொறுப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன. மறுசுழற்சி செய்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் அவற்றின் கார்பன் தடத்தைக் குறைப்பதையும் கழிவுகளைக் குறைப்பதையும் இந்த விழாக்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

கூடுதலாக, பயிற்சிப் பட்டறைகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடும் நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், தூய்மையான பசுமை விழாக்கள் மற்ற நிகழ்வுகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகின்றன.

தசரா மற்றும் துர்கா பூஜைக்கு நாடு தயாராகி வரும் நிலையில், ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, மேலும் மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் நாட்டின் பிற பகுதிகளிலும் விழாக்களை பசுமையாக மாறுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லேசர் நிகழ்ச்சிகள் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதம் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளுக்குச் செல்வதன் மூலம் தசராவிழா டிஜிட்டல் மாற்றத்தைக் காண்கிறது. பந்தல்களை தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் அலங்கரிப்பதற்கு பதிலாக, அமைப்பாளர்கள் இப்போது மூங்கில், மரப்பலகைகள், தேங்காய் ஓடு, துணி, சணல் அல்லது கயிறு கயிறுகள், வைக்கோல், கரும்பு அல்லது காகிதம் மற்றும் கரையக்கூடிய களிமண் துர்கா சிலைகள் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்நிகழ்வுகளை  குப்பைகள் அற்றதாக மாற்றுவதற்காக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீல மற்றும் பச்சை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, இரவு தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,

பிளாஸ்டிக் அல்லாத பொருட்களால் பேனர்கள் மற்றும் பிற அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தில்லியில் சில இடங்களில் மூங்கில் மற்றும் பருத்தியை மட்டுமே பயன்படுத்தி பந்தல்கள் அமைக்கப்படும். பெரும்பாலான இடங்களில் ஏற்கனவே செயற்கையாக உருவாக்கப்பட்ட குளங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. பூஜையிலிருந்து சேகரிக்கப்பட்ட பூக்கள் மற்றும் மீதமுள்ள பொருட்கள் தோட்டத்திற்கு உரம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்தப்படும் அல்லது பிற நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்யப்படும். உணவுக் கடைகளில் பிரசாதம் மற்றும் சிற்றுண்டி வழங்க காகிதத் தட்டுகள், வாழை இலைகள் அல்லது களிமண் தட்டுகள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவராத்திரியின் போது, உத்தரப்பிரதேச சந்தை சங்கம், சிற்ப தயாரிப்பாளர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள், கோயில் சங்கம் / மதத் தலைவர்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து களிமண் சிலைகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. நவராத்திரியின் 8 அல்லது 9-வது நாளில், சிலைகளுக்கு  நகரத்தில் ஒரு இடத்தையும், காணிக்கை சேகரிக்க படித்துறைகளில் ஒரு இடத்தையும் அமைக்க உத்தரப்பிரதேசம்   திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நிலையான மாற்று வழிகளைப் பின்பற்றி  நடத்தப்பட்டது. பந்தல்களுக்கு மூங்கிலைப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண் அல்லது விநாயகர் சிலைகள், மலர்களால் ஆன ரங்கோலிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு சிலைகளைக் கரைத்தல், சிலைகளைக் கரைப்பதற்காக செயற்கைக் குளங்களை உருவாக்குவது ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கொண்டாட்டங்களில் பிளாஸ்டிக்கின் சுற்றுச்சூழல் தாக்கத்திலிருந்து விலகி இருக்க, பல மாநிலங்கள் இப்போது நிலையான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு வருகின்றன. இந்த சுற்றுச்சூழல் உணர்வு அணுகுமுறைக்கு ஏற்ப, அசாம் மாநிலம் மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட பந்தல்களுடன் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியது. இது பாரம்பரியம், சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகிய இரண்டிற்கும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. தில்லியின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன.  விநாயகர் சிலைகள் விதைகளுடன் கரைக்கப்பட்டன.  இவை, கரைக்கப்பட்டு அதில் உள்ள விதைகள் காலப்போக்கில் ஒரு தாவரமாக முளைக்க உதவுகிறது.

சத் பூஜையின் போது, பாட்னா மாநகராட்சி அதன் ஒவ்வொரு சத் படித்துறையிலும் கழிவுகள் இல்லாத சத் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறது. படித்துறைகளில் இருந்து கழிவுகளை சேகரிக்க தனி குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு, தனி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் ஈரக்கழிவுகள் கரிம உரமாக மாற்றப்படுகின்றன. இந்த நல்ல சந்தர்ப்பத்தில் தூய்மையான மற்றும் மிகவும் சுகாதாரமான சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பூஜைக்கு முந்தைய ஒரு மாதம் முழுவதும் விரிவான விழிப்புணர்வு கல்வி மற்றும் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது.

நகர்ப்புற இந்தியா ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கி நகரும் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த திருவிழாக்கள் பாதுகாப்பான மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலுக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகின்றன.

இந்த விழாக்கள் நடத்தை மாற்றங்களை மட்டுமல்ல, சுற்றுச் சூழலுக்கு உகந்த, குப்பை இல்லாத, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இல்லாத நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களை நோக்கிய மாற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன.

 

***

ANU/PS/SMB/BS/AG/KPG


(Release ID: 1968504) Visitor Counter : 151